Published : 29 Jan 2019 10:39 AM
Last Updated : 29 Jan 2019 10:39 AM

மனதோடும் கொஞ்சம் பேசுவோம் 13: நம்மை நாமே அழித்துக்கொள்வதா!

கேடு விளைவிக்கும் உறவை ஈர்க்கும் தன்மை சிலரிடம் காணப்படுவதுண்டு. அதாவது நமக்கு முன்பின் தெரியாதவர்கள் நம்மைக் கண்டதும் தங்களுடைய மனக்குமுறல்களையெல்லாம் வந்து கொட்டிவிடுவார்கள். நாமும் உடனடியாகப் பரிதாபப்பட்டு அவர்களுக்கு யோசனைகள் சொல்வதில் தொடங்கிக் கூடுமானவரை உதவத் தொடங்கிவிடுவோம். இதனால் நம்மையே அறியாமல் கூடா உறவுக்குள் சிக்கிக்கொள்வோம்.

உதாரணத்துக்கு,

1. ஏதோ நாம் இல்லாவிடில் அவருடைய சிக்கலுக்குத் தீர்வே கிடைக்காது என்று கற்பனை செய்துகொண்டு இழுத்துப்போட்டு ஏதேதோ செய்வோம். ஆனால், அந்த நபரோ தனக்குப் பின்தான் எல்லாமே என்ற ரீதியிலான சுயநலவாதியாக இருப்பார்.

2. மிக இனிமையானவராக எதற்குமே மறுப்புத் தெரிவிக்கத் தெரியாதவராக இருப்போம். கடைசியில் நம்மை ஆட்டிப்படைக்கும், நம்முடைய உணர்வுகளுக்குத் துளியும் மதிப்பளிக்கத் தெரியாத நபரிடம் சிக்கிக்கொள்வோம்.

3. மிகவும் கரிசனத்தோடு இருக்கும் நாம் எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசும் குணம் படைத்தவரிடம் நம்மையே அறியாமல் சரணாகதி அடைந்துவிடுவோம். ஆனால், கடைசிவரை நாம் மட்டுமே விட்டுக்கொடுத்தபடி உறவைத் தக்கவைத்துக்கொண்டிருப்போம்.

4. படைப்பாற்றலும் கலையுணர்வும் மிகுந்த நபரான நாம் செக்கு மாடுபோல் தன்னுடைய வேலையைத் தவிர எதுவுமே செய்யவோ ரசிக்கவோ தெரியாதவரிடம் சிக்கிக்கொள்வோம்.

இது மாதிரியான உறவுக்குள் சிக்கிக்கொள்வது உங்களுக்கு மட்டுமல்ல அந்த நபருக்கும் பாதகமே. இதில் அடிக்கடி நிகழும் தவறு என்னவென்றால், ‘இந்த வேலையைச் செய்து முடித்த பிறகு நம்மீது அக்கறை செலுத்தத் தொடங்குவார்’, ‘கல்யாணத்துக்குப் பிறகு நம்மீது அன்புகூடும்’ என்பதாக நம்மை நாம் சமாதானப் படுத்திக்கொண்டே இருப்போம்.

ஆனால், அந்த நபர் ஒருபோதும் உங்களுடைய காத்திருப்பின் தவிப்பை உணரப்போவதே இல்லை. இந்த வேலைக்கு அடுத்தபடியாக அடுத்த வேலை, கல்யாணம் ஆனதும் வேறொரு பொறுப்பு என அவர்கள் வேறெதையோ நோக்கிச் சென்றுகொண்டே இருப்பார். சொல்லப்போனால் உறவுச் சிக்கலைக் கையாளத் தெரியாததாலேதான் இப்படி அவர் செய்துகொண்டிருக்கிறார் என்பதை உணர வேண்டியவர் நீங்கள்தான்.

வருத்திக்கொள்ள வேண்டாம்

யாரோ ஒருவர் நம்முடைய வெறுமையை, போதாமையை இட்டுநிரப்ப வேண்டும் என்ற நிலையில் இருந்து உங்களை முதலில் விடுவித்துக்கொள்ளுங்கள். யாரோ ஒருவரின் காயத்துக்கு மருந்தளிப்பதாக நினைத்துக்கொண்டு உங்களையே நீங்கள் வருத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

> நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விதமாகச் செய்யும் காரியங்களை உற்றுக் கவனியுங்கள்.

> கூடா உறவுகள் உங்களுடைய எந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

> தானாக அதைச் சரிகட்ட முடியுமா என்று பாருங்கள். தேவைப்படும் பட்சத்தில் மனநல மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெறலாம்.

> தினந்தோறும் உங்களுடைய வளர்ச்சிக்காக நேரம் செலவிடுங்கள். இது நிச்சயம் நல்ல முன்னேற்றம் தரும்.

> உங்களுடைய உள்ளுணர்வுக்கு மதிப்பளியுங்கள். சில நேரம் மற்றவர்களைக் காட்டிலும் நம்முடைய மனமே சிறந்த வழிகாட்டி.

> பொறுமை காத்திருங்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் எதிர்பாராத மாற்றங்கள் நிகழக்கூடும். அவற்றை நிதானமாகக் கையாளப் பழகுங்கள்.

> ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். நம்மைச் சார்ந்தே மற்றவர்கள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வது சகஜம்தான். ஆனால், எப்படி நம்முடைய போதாமையை வெளி நபர் எவரும் இட்டுநிரப்ப முடியாதோ அதேபோல நம்மாலும் எவரொருவரையும் முழுமையானவராக மாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

 

‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in


தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x