Published : 08 Jan 2019 10:49 AM
Last Updated : 08 Jan 2019 10:49 AM
டிசம்பர் 31: கஜா புயல் நிவாரணமாக ரூ. 1,146 கோடியை கூடுதல் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவித்தது. புயல் பாதித்த மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகளுக்காக சுமார் ரூ. 15 ஆயிரம் கோடியைத் தமிழக அரசு கேட்டிருந்தது. ஏற்கெனவே ரூ. 353 கோடியை இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், கூடுதல் நிதி வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து
டிசம்பர் 31: திருவாரூரில் ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த கருணாநிதியின் மறைவால், திருவாரூர் தொகுதி காலியாக இருந்தது. ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையின்படி அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கஜா புயல் பாதிப்பால் தேர்தல் தற்போது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
கியூபப் புரட்சி 60
ஜனவரி 1: கியூபாவில் கம்யூனிஸ்ட் புரட்சியின் அறுபதாவது ஆண்டு நினைவு விழா கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ரவுல் காஸ்ட்ரோ, அமெரிக்கா மீண்டும் கியூபாவின் மீது மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதைப் பற்றி விமர்சனம் செய்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா நிர்வாகத்தின்போது புதுப்பிக்கப்பட்ட கியூபாவுடனான வெளியுறவுக் கொள்கைகள், தற்போதைய அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் ரவுல் காஸ்ட்ரோ. அறுபது ஆண்டுகாலப் புரட்சி வரலாற்றில் கியூபா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மாணவிகளுக்குக் கழிப்பறையற்ற 21,000 பள்ளிகள்
ஜனவரி 3: 2016-17-ம் ஆண்டின் தரவுகள்படி, நாட்டின் 20,977 அரசுப் பள்ளிகளில் பெண்களுக்கான தனிக் கழிப்பறைகள் இல்லை என்று மத்தியக் குடிநீர், சுகாதாரத் துறை இணை அமைச்சர் ரமேஷ் சந்தப்பா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் 20,977 (1.93 சதவீதம்) என்றும் மாணவர்களுக்கான கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் 28,713 (2.67 சதவீதம்) என்றும் தெரிவித்தார்.
முன்னணி விஞ்ஞானிகள்: வெறும் 10 இந்தியர்கள்
உலகம் முழுவதும் முன்னணி விஞ்ஞானிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 4,000 விஞ்ஞானிகளில் இந்திய விஞ்ஞானிகள் 10 பேர் மட்டுமே இடம்பிடித்திருக்கின்றனர். ‘கிளாரிவேட் அனலிட்டிக்ஸ்’ என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், அமெரிக்காவில் இருந்து 2,639 பேரும், பிரிட்டனிலிருந்து 546 பேரும், சீனாவிலிருந்து 482 பேரும் இடம்பிடித்திருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் சக்திவேல் ரத்தினசாமி, ஐ.ஐ.டி. சென்னையின் ரஜ்னிஷ் குமார், ஜே.என்.யூ. தினேஷ் மோகன், சி.எஸ்.ஐ.ஆர். அசோக் பாண்டே, ஐ.ஐ.டி. கான்பூர் அவினாஷ் அகர்வால், என்.ஐ.டி. போபாலிலிருந்து அலோக், ஜோதி, ஐ.எல்.சி. சஞ்சீப் சாஹூ, ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி. ராஜீவ் வர்ஷனே ஆகிய 10 விஞ்ஞானிகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT