Published : 22 Jan 2019 10:53 AM
Last Updated : 22 Jan 2019 10:53 AM
கேட்டாரே ஒரு கேள்வி
ஒரு தொலைக்காட்சித் தொடரில் அதன் கதாநாயகி “அப்பா, நீங்க VRS கொடுத்திடுங்க. இன்னும் ஏன் VRS கொடுக்காம இருக்கீங்க?” என்று கேட்டதைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றியது. எப்போது இதற்கு விடிவுகாலம் வரும்?
பெயர்ச் சுருக்கங்களைப் பயன்படுத்தும்போது, அதன் விரிவாக்கங்களை மறந்து பேசுவதால் உண்டாகும் விளைவு இந்தத் தவறு. VRS என்பது Voluntary Retirement Scheme. அந்தத் திட்டத்தை எந்தத் தனி நபரும் கொடுக்கவும் முடியாது, எடுத்துக்கொள்ளவும் முடியாது (Voluntary Retirement-ஐத் தேர்வு செய்யலாம்).
நம்மில் பலரும்கூட ‘உங்க PAN நம்பர் என்ன?’ என்ற கேள்வியை எதிர்கொண்டிருக்கலாம். (PAN என்பதே Permanent Account Number எனும்போது இன்னொரு நம்பர் எதற்கு?) OMR ரோட்டிலோ, ECR ரோட்டிலோ வரும்போது ஒரு நண்பர் இப்படிக் குறிப்பிட்ட ஞாபகம்!
“Ufology என்ற படிப்பை எனக்கு தூரத்து உறவுக்காரப் பையன் படித்துக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இது எது பற்றிய கல்வி?” எனக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.
Unidentified Flying Object என்பதன் சுருக்கம் UFO.
வானத்தில் ஏதோ ஒன்றைப் பார்க்கிறோம். அது என்ன என்பதை இன்றைய அறிவியலின் அடிப்படையில் வரையறுக்க முடியவில்லை. அந்தப் புதிரான பொருளை UFO என்கிறோம்.
தொடக்கத்தில் இதைப் பறக்கும் தட்டு (Flying Saucer) என்று குறிப்பிட்டு வந்தனர். 1940-களில் இருந்தே இதுபோன்ற பறக்கும் தட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. UFO-களைக் குறித்த கல்விப் பிரிவு Ufology என்றும் குறிப்பிடப்படுகிறது.
“Fair–Fare ஆகிய சொற்கள் எப்போதும் எனக்குக் குழப்பத்தைத் தருகின்றன. என்ன செய்யலாம்?
நண்பரே, fair என்றால் கண்காட்சி. நியாயமான என்றும் பொருள் உண்டு (Fair price). அழகான என்ற பொருளிலும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். Fair skin என்றால் வெளுப்பான சருமம்.
Fare என்றால் கட்டணம்.
இந்த இரண்டு சொற்களில் ஒரு சொல்லை வேறுவிதமாக நினைவில்கொள்ளுங்கள். Fare என்பதில் ‘far’ என்ற சொல் இருக்கிறது. ‘வெகுதூரம் செல்வதற்கான கட்டணம்’ என்பதை மனத்தில் பதியவைத்துக்கொள்ளுங்கள். far என்பதன் இறுதியில் ஓர் எழுத்தை அதிகப்படியாகச் சேர்த்தால் கிடைக்கும் சொல்fare. இப்போது பிற அர்த்தங்களைக் கொடுக்கும் சொல் fair என்பதில் குழப்பம் இருக்காது.
போட்டியில் வெற்றி! இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான alphabets போட்டியில் பலரும் நான்காவது கேள்விக்கு ‘ஈ’ என்று தவறாக விடை அளித்துள்ளனர். ஆங்கில வார்த்தையின் உச்சரிப்புதான் விடையாக இருக்கலாம். எட்டாவது கேள்விக்கு ‘T’ (Tea) என்ற விடை சுவாரசியம். ஆனால், தேநீரை இலங்கை தானமாகத் தருவதாகத் தெரியவில்லை! 15-ம் கேள்விக்கு ‘W’ என்ற பதிலை மூவர் எழுதியுள்ளனர். Ultra Vilot rays என்பதைக் குறிக்கும் U, V-க்கு அருகில் உள்ளதால் இந்த விடை. ஆனால், குறிப்பிட்ட இரு எழுத்துகளுக்கும் நடுவிலுள்ள எழுத்துதான் விடையாக இருக்க முடியும். ‘என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்’’ என்ற க்ளூவுக்கு அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படப் பெயரான ‘I’ என்பதை விடையாகக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், தான் எழுதி அனுப்பியிருந்த ‘Z’ என்ற விடை மேலும் பொருத்தமானது என்று எழுதியிருக்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த என்.ராஜமாணிக்கம் என்ற வாசகர். Z பிரிவு பாதுகாப்பு என்கிற கோணத்தில் அந்தப் பதிலும் சுவையாகவும் பொருத்தமாகவும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். முதல் நாள் வந்த விடைகளில் முழுவதும் சரியானவற்றை அனுப்பியவர் களின் பட்டியல் இது. 1. எஸ்.கிருஷ்ணன், Medical Transcription, வேளச்சேரி, சென்னை. 2. Dr. ராதாகிருஷ்ணன், மதுரை. 3. கே.ராணி ஹேமலதா, சென்னை. 4. வெங்கட்ராம் வசி, Project Management Trainer, தேனி 5. சுமதி சண்முகம், இல்லத்தரசி. 6. A.B. கெளதம் ராஜ், மாணவர், விருதுநகர். 7. சித்ரா பாபு, வங்கிப் பணியாளர், திருச்செங்கோடு 8. மருது 9. கே.முருகன், Co-ordinator, BTC, மோகனூர். 10.ராஜேஷ் நடராஜன், மொபைல் கடை, குலசேகரம், கன்னியாகுமரி. 11.எஸ்.சண்முகவேல், பேராசிரியர், தூத்துக்குடி. 12.டாக்டர் எஸ் செல்வரங்கம், கண் மருத்துவர், சேலம். வாழ்த்துகள்! |
தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT