Published : 29 Jan 2019 11:03 AM
Last Updated : 29 Jan 2019 11:03 AM
உலகிலேயே மிகக் கடினமான வேலை என்ற தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டால் அதில் ‘தமிழ்நாட்டில் +2 தேர்வு எழுதுவது’ என்பதற்கு முதலிடம் கிடைக்கலாம். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிளஸ் 2 தேர்வு நம் மாணவர்களுக்குத் தரும் மன அழுத்தமும் ஆசிரியர்களுக்குத் தரும் அவதிகளும் அப்படிச் சொல்ல வைக்கின்றன. ‘புளு பிரிண்ட்’ கிடையாது. எதை வேண்டுமானாலும் கேட்போம். திடீர் திடீர் கேள்வித்தாள் மாறுதல் அது இது என ஏகப்பட்ட மிரட்டல்கள்.
உலக நிகழ்வுகளைச் சற்றே உற்றுக் கவனித்தாலே நம் குழந்தைகள் 20-ம் நூற்றாண்டையே தாண்ட நாம் அனுமதிக்கவில்லை என்பது புரியும். 21-ம் நூற்றாண்டில் கல்வியின் பிரதான நோக்கங்களை யுனெஸ்கோ 2000-ல் பட்டியலிட்டது. ‘டிலார்ஸ் அறிக்கை’ (Delors Report) என்ற தலைப்பிலான இதில் திறன் தேர்ச்சி (Skill competency) அடிப்படையில் கல்வி பிரிக்கப்பட்டது:
1. அறிந்துகொள்ளக் கற்றல் (Learning to know)
2. செயல்படுத்தக் கற்றல் (Learning to do)
3. வாழ்ந்து நிலைக்கக் கற்றல் (Learning to be)
4. ஒன்றிணைந்து வாழக் கற்றல் (Learning to live together)
இவை அடிப்படை என்றும் சுயதிறன்கள், சமூகத் திறன்கள், கற்றல் திறன்கள் ஆகியவற்றின் மேம்பாடே 21-ம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் நோக்கங்கள் என்றும் டிலார்ஸ் கமிட்டி பரிந்துரைத்தது. முன்பிருந்த வாசித்தல் / எழுதுதல் / கணக்கிடுதல் ஆகிய அடிப்படைக் கல்வி நோக்கங்களோடு, பிரச்சினைகளில் தீர்வுக்கான கற்றல், படைப்பூக்கம், குழு மனப்பான்மை, தகவல் பரிமாற்றத் திறன், தற்சார்பு உருவாக்கம் போன்றவற்றைக் கல்வித் தகுதியோடு இது இணைத்தது. மேற்கண்ட எந்த அம்சத்தோடும் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும் நமது தேர்வு நடைமுறை பொருந்தாதே!
உலக நாடுகளில் தேர்வுமுறை
அமெரிக்காவில் நடத்தப்படும் தேசியக் கல்வி வளர்ச்சி அறிதல் தேர்வு (National Assessment of Educational Progress) பிளஸ் 2-க்கு நிகரானது. சீனாவில் ‘காவோ காவோ’ (Gao Kao), தென்கொரியாவில் கல்லூரி கல்வித் திறன் தேர்வு (College Scholastic Test), ஜப்பானில் தேசிய மையத் தேர்வு (National Center Test), பிரான்ஸில் பெக்காலுரேட் (Baccalaurate) என எல்லா நாடுகளிலும் பள்ளி இறுதி ஆண்டிலிருந்து கல்லூரிக்குள் அடியெடுத்துவைக்கத் தேர்வு நடத்தப்பட்டாலும் அவை நமது பிளஸ் 2 தேர்வு போல இல்லை. சுய சிந்தனை, படைப்பூக்கம், தாய் மொழிக் கல்வி இவற்றை அவை பிரதானப்படுத்துகின்றன. மனப்பாடம் செய்து எல்லா மாணவர்களும் ஒன்று போலவே ஒரே விடை தருவதை உலகம் கைவிட்டு அரை நூற்றாண்டு ஆகிவிட்டது.
21-ம் நூற்றாண்டின் கேள்வித்தாள்
சென்ற ஆண்டு சீனாவின் காகோக்காவோவில் கேட்கப்பட்ட கேள்வி இது: “உங்கள் பெற்றோர் 1. உயர் தொழில்நுட்ப ஆய்வு 2. மருத்துவம் 3. ஒளிப்படக் கலைஞர் 4. மோட்டார் பொறியாளர் இவற்றில் ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் என்ன பதில் தருவீர்கள், ஏன்?”
இதற்கு ஒரே வகுப்பில் பல விடைகள் கிடைக்கும் அல்லவா? பிரான்சின் பெக்காலுரேட் கேள்வித்தாள் ஒருபடி மேலே சென்று, ‘புதிய கைபேசிகள் புதிய ரகக் கணினிகள் வந்த வண்ணம் உள்ளன. பழைய காலாவதியான கைபேசி, கணினி, தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றை என்ன செய்யலாம் என்பது பற்றிப் புதிய யோசனைகளைப் பட்டியலிடுக’. அறிவியலும் குப்பை மேலாண்மையும் கை குலுக்கும் இடம் இது. உலக நாடுகள் மட்டுமல்ல நமது அண்டை மாநிலங்களைப் பாருங்கள்.
அண்டை வீட்டின் தேர்வுத்தாள்
கேரளத்தில் மாநில அளவிலான தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி:
ஒரு மாவட்ட வரைபடம். நீர்வரத்து, வயல்வரப்பு, அரிசி ஆலை ஆகியவை குறிக்கப்பட்ட வரைபடம். ‘இதில் பாலக்காடு கேரளத்தின் நெற்களஞ்சியம் என்பதற்கான சான்றுகளை வரைபடத்தில் இருந்து எடுத்து எழுதுக. மேலும் பாலக்காட்டில் விவசாயம் சிறக்க உன் யோசனைகள் என்ன?’ இது போன்ற கேள்விகள் மனப்பாடம் செய்வதைத் தவிர்க்க உதவும். சமூகப் பிரச்சினைகளை அலச உதவும். இமாசலப் பிரதேசத்தின் சென்ற ஆண்டு இறுதித் தேர்வில் ஒரு ஆச்சரியம்.
உத்தராகண்ட் மாநிலப் பெருவெள்ளத்தில் கேதார்நாத் கோவில் உட்பட அனைத்தும் சேதமடைந்தபோது, சூழலியல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா, மண் அரிப்பைத் தடுக்க அரசு தவறியதைக் கண்டித்துப் பத்ம விருதைத் திருப்பிக் கொடுத்தார். அந்தச் செய்தி இதழ்களில் வெளிவந்திருந்தது. இந்தப் பத்திரிகை செய்தியைக் கேள்வித்தாளில் அச்சிட்டு மண் அரிப்பைத் தடுக்க உங்கள் யோசனைகளை உங்கள் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனுவாக எழுதுங்கள்’ என்று கேட்டிருந்தார்கள்.
நாம் என்ன செய்திருக்கிறோம்?
மேல்நிலை வகுப்புகளின் பாட மதிப்பெண்கள் பிளஸ் 1-ல் 600, பிளஸ் 2-வில் 600 என்று மாற்றப்பட்டபோது கேள்வித்தாளின் அமைப்பும் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது பார்த்தால் கொள்குறி முறைக்குப் பதிலாகச் சரியானவற்றைப் பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக என்பதாகக் குளறுபடியாக மாற்றங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கடைசி நேரத்தில். இதற்குப் பெயர்தான் மாற்றமா?
நீட் தேர்வைக் காரணம் காட்டி ஓராண்டில் முடிக்க முடியாத அளவுக்கான பாடப் பகுதியை நீட்டியுள்ளோம். எந்த மாதிரிக் கேள்விகள் வரும், எப்படிப் பதிலளிக்கலாம் என்பது பற்றிய குழப்பத்தில் மாணவர்களின் மன உளைச்சலைப் பன்மடங்கு உயர்த்தி இருக்கிறோம். காரணம் என்ன? நம் பிடிவாதம். ஒரு கேள்வி. அதற்குத் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே பதிலைத்தான் எழுத வேண்டும் எனும் 20-ம் நூற்றாண்டின் பத்தாம் பசலித்தனமான தேர்வு மதிப்பீட்டு முறையை நாம் கைவிடவில்லை.
இதனால் பாடப் புத்தகம் அச்சாகி வருவதற்கு முன்னமே கையேடுகள் வெளிவருவதும் தனியார் கல்வி வியாபாரமும் சாபமாய்த் தொடர்கின்றன. தாய்மொழிக் கல்வி, சுயமாகச் சிந்தித்துப் பதிலளிப்பது இரண்டுமே எட்டாக்கனியாகி விட்டன.
கல்லூரி முடித்தும் வேலைக்கான திறனின்மை மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. அதற்குக் கல்வி அளிக்கப்படும் விதம் மட்டுமே காரணம் அல்ல. உயிரற்ற கேள்வித்தாள், ஒரே விடைக் குறிப்பு (Single Key) என இறுகிப்போன பள்ளிக் கல்வியின் பழமைவாதத் தேர்வு முறை. நாடகம் போலவே அரங்கேறும் செய்முறைத் தேர்வுகளும் மனப்பாடம் செய்தவற்றைக் கொட்டித் தீர்க்கும் எழுத்துத் தேர்வுகளும் இன்னும் எத்தனை காலம்தான் நம் குழந்தைகளைச் சுயசிந்தனை அற்றவர்களாக மழுங்கடிக்கப் போகின்றனவோ!
கட்டுரையாளர் கல்வியாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT