Published : 18 Dec 2018 10:51 AM
Last Updated : 18 Dec 2018 10:51 AM
காலம்: பொ.ஆ.மு. 290
“இப்போ காஞ்சிபுரத்திலிருந்து நேரா ஒரு துறைமுகத்துக்கு நாம போகப் போறோம். செழியன்”
“எந்தத் துறைமுகம் குழலி, ஏன்னா பண்டைக் காலத்துல நிறைய துறைமுகங்கள் தமிழகத்துல இருந்திருக்கே?”
“பரவாயில்ல. என்கூட சேர்ந்து சேர்ந்து, நீயும் வரலாறு பத்தி ஆர்வமா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்ட.”
“உண்மைதான். மாமல்லபுரத்த பார்த்துட்டோம். இப்போ நாம போகப் போறது முசிறியா, கொற்கையா, புகாரா?”
“சேரர்களின் துறைமுகம் முசிறி. அங்கிருந்து ஏற்றுமதியாகும் பெரும்பாலான கப்பல்கள்ல அதிகம் போன பொருள் மிளகு. வெளிநாட்டவர்களுக்கு சேர மிளகின் மீது அவ்வளவு விருப்பம். அப்புறம் பாண்டியத் துறைமுகம் கொற்கை. ‘நகைகளில் ராணி’ எனப்படும் முத்துக்களும் சங்குகளும் அங்கே அதிகம் ஏற்றுமதியாகியிருக்கு.”
“அப்ப சோழ தேசம் என்ன ஏற்றுமதி செஞ்சது?”
“சோழ தேசத்தில் இருந்து மஸ்லின் எனப்படும் மெல்லிய துணி, மற்ற துணி வகைகள் அதிகம் ஏற்றுமதியாயின. இந்த முறை நாம போகப் போற துறைமுகமும் சோழத் துறைமும்தான்.”
“ஓ, புகாருக்குத்தான் போகப் போறோமா?”
“இன்னைக்கு பூம்புகார்னு அறியப்படுற ஊர், அன்னைக்கு புகார், காவிரிப்பட்டினம்னு அழைக்கப்பட்டுச்சு. அந்தக் காலத்தில் பரபரப்பான துறைமுகமாக இருந்ததோட, முற்காலச் சோழரின் தலைநகராகவும் செயல்பட்டிருக்கு. புகார் நகரை ஆழிப்பேரலை போன்று ஏதோ ஓர் இயற்கைச் சீற்றம் அழிச்சிருச்சு. இன்னைக்கு இருக்கும் பூம்புகார் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.”
“தலைநகரா இருந்துச்சுன்னா, அந்த ஊர் ரொம்பப் பெரிசாதான் இருந்திருக்கணும்.”
“அந்த ஊர்ல அரசரோட இல்லம், செல்வந்தர்கள் வாழும் பகுதி, பெரும் சந்தை எல்லாம் முக்கியமான பகுதிகளா இருந்துச்சு. அறிஞர்களும் கவிஞர்களும் அந்தக் காலத்துல முக்கியமானவங்களா இருந்திருக்கங்க. பல்வேறு தொழில் செஞ்சவங்கன்னு பார்த்தா கடல் பயணிகள், உழவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், வேட்டைக்காரர்கள் இருந்திருக்காங்க. ஆனா, இப்போ நாம பார்க்கப் போற இடம் கைவினைஞர்களான குயவர்கள் பானை வனையும் பகுதி.”
“சிந்துவெளி, அப்புறம் மதுரை, இப்போ புகார். எல்லா இடங்கள்லயும் இந்த பானையும் நம்மகூட தொடர்ந்து வந்துட்டே இருக்கு.”
“ஆமா உண்மைதான். அந்தக் காலத்துல சமையலுக்குப் பானைகள், மண்பாத்திரங்கள்தாம் பெருமளவு பயன்பட்டிருக்கு. மூடி கொண்ட மண் பாத்திரங்கள், அகலான வாய் கொண்டவை, நீளக்கழுத்து கொண்டவை, சமைப்பதற்குத் தேவையானவை, தண்ணீர் சேமிப்பதற்கு என பல்வேறு வகைகளில் மண் பாத்திரங்கள் வடிக்கப்பட்டுள்ளன.”
“இத்தனை வகைப் பாத்திரங்கள் இருந்துச்சுன்னா, என்ன மாதிரி உணவையெல்லாம் சாப்பிட்டாங்க?”
“சோழ வள நாடு சோறுடைத்தது இல்லையா, அரிசியும் கூடவே மீனும் தாராளமா கிடைச்சிருக்கு. பாகற்காய், வாழை, பலா போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கு. அதோட மோர். தயிர், மிளகு, கருவாடு, தேன், உப்பு, நல்லெண்ணெய் என இன்னைக்கு நாம பயன்படுத்துற பல பொருட்கள் இருந்திருக்கு. இறக்குமதி செய்யப்பட்ட விதைகள், கொட்டைகளையும்கூடப் பயன்படுத்தியிருக்காங்க.”
“இறக்குமதி செய்யப்பட்ட உணவா?”
“ஆமா, அன்னைக்குச் சோழ நாட்டுலேர்ந்து கங்கை ஆறு, ஐராவதி ஆற்றுப் பகுதிகளுக்கு (இன்றைய மியான்மர்) வணிகம் செஞ்சிருக்காங்க. நிலப்பகுதிகள் வழியாகவே இந்த வணிகப் பரிமாற்றம் நடந்தது.”
பருத்தித் துணி, நறுமணப் பொருட்கள், முத்துக்கள், சங்குகள், கிளிஞ்சல்கள் போன்றவற்றைக் கொண்டுபோய் வித்துட்டு, வட பகுதிகள்ல இருந்து குதிரைகள், ரத்தினங்கள், மருந்துகள், வாசனை திரவியங்கள் போன்றவற்றைச் சோழ நாட்டினர் வாங்கி வந்திருக்காங்க.”
“இப்படி வாங்கிவரும் பொருட்களை என்ன செய்வாங்க?”
“அரசர்கள் போரிடுவதற்கும் குதிரைகள் தேவைப்பட்டிருக்கு. மற்ற பொருட்களை செல்வந்தர்களிடம் வித்திருக்காங்க. இல்லேன்னா ஏற்றுமதி செஞ்சிருக்காங்க. உள்நாட்டு இறக்குமதி மட்டுமில்ல, காடுகள்ல இருந்தும்கூட பொருட்களை வாங்கியிருக்காங்க.”
“அப்படியா?”
“வேங்கைப் புலி, சிறுத்தை போன்ற உயிரினங்களோட பதனிடப்படாத தோல், யானைத் தந்தங்கள் காடுகள்ல வேட்டையாடியவர்களிடம் இருந்து பெறப்பட்டன. புகார், மலயா தீவுக்கூட்டத்தில் இருந்து ஆமை ஓடுகள் பெறப்பட்டன.”
“இந்தப் பொருட்களும் ஏற்றுமதிக்குத்தானா குழலி?”
“எல்லாமே ஏற்றுமதிக்கு இல்ல. உயிரினங்களோட தோல்கள் படை வீரர்களுக்கு பாதுகாப்புக் கவசமா பயன்பட்டிருக்கு. அதேநேரம், சோழ நாட்டினருடன் வடஇந்தியா, கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகள்னு பொருட்களும் கருத்துகளும் நீண்டகாலமாகப் பரிமாறப்பட்டு வந்திருக்கு செழியன்”
யாருக்கு உதவும்? போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம் |
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT