Published : 20 Nov 2018 10:12 AM
Last Updated : 20 Nov 2018 10:12 AM

வரலாறு தந்த வார்த்தை 39: ‘பறந்து’ வரும் புயல்!

கடந்த வாரத்தில் தமிழகத்தின் பெரும்பாலானவர்களால் கூகுள் செய்யப்பட்டே, ட்ரெண்டிங் ஆன சொல் புயல்... ‘கஜா!’

பெண்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள் வரிசையில் இப்போது விலங்குகளின் பெயரில் புயலை அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டோம். எனினும், பறவைகளின் பெயரில்தான் பெரும்பாலும் புயல் அடையாளப்படுத்தப்படுகிறது. பறவைக்கும் காற்றுக்கும் அவ்வளவு நெருக்கம்!

‘புயல்தானேப்பா… வந்தா வரட்டும்’ என்று மெத்தனமாக இருந்துவிடாமல், தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கரையைக் கடந்தவுடன், பெருமூச்சு விட்டுவிட முடியாது. ஏனென்றால், இதுபோன்ற புயல் தாக்குதல்கள் இனி அடிக்கடி நம்மைத் தாக்கலாம். காரணம், பருவநிலை மாற்றம்.

வருங்காலத்தில் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளுக்கு இதுபோன்ற புயல்கள் ஓர் அடையாளம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘Stormy Petrel’. அதாவது, பின்னால் வரும் பிரச்சினையை முன்பே உரைக்கும் ஒரு ‘பறவை’.

முன்பெல்லாம் கப்பல் வாணிபம்தான் பெரிய அளவில் நடந்துவந்தது. புயல் வரப்போவதை அறிவதற்குத் தேவையான கருவிகள் இன்று இருப்பதுபோல, அன்று இருக்கவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் பெரும்பாலும் இயற்கை விஷயங்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

அப்படித்தான், அவர்கள் அந்தப் பறவையை நம்பினார்கள். ‘தலஸிட்ரோமா பெலாஜிக்கா’ எனும் கடல் பறவை அது. இந்தப் பறவை தென்பட்டால், புயல் வரப்போகிறது என்பதை மாலுமிகள் உணர்ந்துகொள்வார்கள். இந்தப் பறவைக்கு அப்படித்தான் ஆங்கிலத்தில் ‘ஸ்டார்மி பெட்ரல்’ (Stormy Petrel) என்ற பொதுப்பெயர் கிடைத்தது.

‘மேட்ர் கரா’ (Madre Cara) என்று இத்தாலிய மொழியில் ஒரு சொற்பதம் உண்டு. அதாவது, ‘அன்புள்ள அன்னை’ என்று பொருள். கன்னி மேரியை அந்நாட்டு மாலுமிகள் இப்படித்தான் அன்பாக அழைப்பார்கள். அவர்களின் காவல் தெய்வம் மேரிதான். அந்த தெய்வம், வரப்போகும் ஆபத்தை அறிவிப்பதற்காக, ஸ்டார்மி பெட்ரால் பறவைகளைத் தங்களிடம் அனுப்பியதாக அவர்கள் கருதினார்கள். எனவே, அவற்றுக்கு ‘மதர் கேரிஸ் சிக்கன்ஸ்’ (Mother Carey’s Chickens) என்ற பெயரும் உண்டு.

இப்படி, பின்னால் வரும் ஆபத்தை முன்பே உணர்த்திய பறவை, காலப்போக்கில், மனிதர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு, அதன் மதிப்பு குறைக்கப்பட்டுவிட்டது. ஓர் இடத்துக்குக் குறிப்பிட்ட ஒரு மனிதர் வந்தால், அவர் தன்னோடு ஒரு பிரச்சினையையும் அழைத்துக்கொண்டே வருவார் என்று சிலரை நாம் அடையாளப்படுத்தி வைத்திருப்போம் அல்லவா? அதுபோன்ற மனிதர்களைக் குறிக்கவும் ‘ஸ்டார்மி பெட்ரல்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

ஆக, அவர்களை ‘இசைப் புயல்’, ‘நடனப் புயல்’, ‘வைகைப் புயல்’ எனப்படுவதைப் போல, ‘பிரச்சினைப் புயல்’ என்று பாராட்டலாமா..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x