Published : 05 Nov 2018 06:33 PM
Last Updated : 05 Nov 2018 06:33 PM

மனதோடும் கொஞ்சம் பேசுவோம் 08: வரம்புகளை மதிப்போம், கருத்துகளை வரவேற்போம்!

உறவுகளில் ஏகப்பட்ட சிக்கல்களைப் பதின்பருவத்தின்போது எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றைத் தன்னம்பிக்கையோடும் ஆக்கப்பூர்வமாகவும் கையாள்வதைப் பொறுத்தே நம்முடைய வாழ்க்கைப் பாதையும் அமையும். அப்படி இந்த வயதில் சந்திக்க நேரும் சிக்கல்களில் ஒன்று ‘அவமரியாதை’யை எதிர்கொள்வது. நேரடியாக முகத்தில் அறைந்தாற்போல நாம் எப்போதுமே அவமானப்படுத்தப் படுவதில்லை. பல நிலைகளில், நுட்பமாகவும் அவமதிப்பு நிகழ்வதுண்டு.

இந்நிலையில் எவையெல்லாம் மரியாதையின்மை என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே அவற்றைக் கையாள முடியும்.

அவமரியாதை என்பது…

1. உங்களுடைய கருத்தைக் காதுகொடுத்துக் கேட்க மறுத்தல் அல்லது ஏற்றுக்கொள்வதுபோல பாவனை செய்துவிட்டு பொருட்படுத்தாமல் நடத்தல்.

2. உங்களுடைய வரம்பு தெரிந்தும் தொடர்ந்து அத்துமீறுவதும் நீங்கள் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்.

உதாரணத்துக்கு, உங்களுடைய மொபைல் ஃபோனை எடுத்து மற்றவர்கள் பேசுவது என்பது உங்களுக்குப் பிடிக்காது என்று தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் அதையே ஒரு நண்பர் செய்வது.

3. நீங்கள் சொல்லவருவதைக் குறுக்கிட்டுத் தடுத்தல்.

4. உங்களுக்குப் பிடித்தமானதைக் குறித்து ஏளனம் செய்து, உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல்.

5. மற்றவர்கள் முன்னிலையில் உங்களைச் சிறுமைப்படுத்தி, தலைகுனியவைத்துப் பிறகு அதை அறியாமல் செய்துவிட்டதாகப் பாவனை செய்தல். உதாரணமாக, உங்களுடைய தோற்றம் குறித்து ஏற்கெனவே உங்களுக்குத் தாழ்வுமனப்பான்மை இருப்பது தெரிந்தும் எல்லோர் முன்னிலையிலும் உங்களைக் கேலி செய்யக்கூடிய நண்பர்களின் நடவடிக்கை.

6. உங்களிடம் பொய் சொல்லி ஏமாற்றுதல்.

7. உங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் சுரண்டிவிட்டுப் பின்பு, ‘என்ன பெரிதாகச் செய்துவிட்டாய்’ என்று குறைபேசி குறைவான ஊதியத்தை வழங்குதல்.

8. உங்களுக்குக் கொடுத்த வாக்கிலிருந்து அடிக்கடி தவறுதல். உதாரணமாக,  அடிக்கடி கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்துசெய்தல். நியாயமான காரணத்துக்காகச் செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். எந்நேரமும் செய்தால் அது அவமதிப்புதான்.

9. தன்னுடைய தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாமல் உங்களை மட்டுமே குறை சொல்லுதல். அத்தகைய நபர்கள் உங்களைக் கூனிக்குறுகச் செய்வார்கள்.

10. இனிமையாகப் பேசி உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்ய நிர்ப்பந்தித்தல்.

11. உங்களுடைய குறைகளை நேரடியாகத் தெரிவிக்காமல் புறம் பேசுபவர்கள்.

இவற்றில் பெரும்பாலானவை மனித இயல்பில் வழக்கமான நடவடிக்கைகளாகத் தோன்றலாம். ஆனால், அவற்றுக்குப் பின்னால் ஆழமாகப் புதைந்திருப்பது அவமரியாதையே.

மற்றவர்களுக்கு மதிப்பளித்து அவர்களைச் சமமாகப் பாவிக்கும்போது:

1. அவர்களுடைய வரம்புகளை மதிப்போம்.

2. அவர்களுடைய கருத்துகளை வரவேற்போம்.

3. அவர்களுடன் இணைந்து பணிபுரிய முன்வருவோம்.

4. நம்மை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்போம்.

5. தவறிழைத்துவிடும்போது வார்த்தைகளில் மட்டுமல்ல; செயலிலும் மன்னிப்பு கேட்போம்.

6. நம்முடைய வார்த்தைகளும் செயல்பாடுகளும் ஒத்துப்போகும் விதமாக உண்மையுடன் நடந்துகொள்வோம்.

இனி அவமதிக்கப்பட்டால்:

1. முதலாவதாக, பாதிப்பை ஏற்படுத்தும் நபரிடம் தெரிவியுங்கள். அவருடைய நடவடிக்கை உங்களைக் காயப்படுத்துவதால் அதை மாற்றிக்கொண்டால் நல்லது என்று உணர்த்துங்கள்.

2. நீங்கள் தெரிவித்த பின்பும் அந்த நபர் நேர்மறையாக அதை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலோ அல்லது அவர் நடவடிக்கையில் மாற்றம் இல்லை என்றாலோ பதிலுக்கு நீங்களும் அவமரியாதையாக நடந்துகொள்ள வேண்டாம். தன்னுடைய இயலாமை, பாதுகாப்பின்மையினால்தான் ஒருவர் மற்றொருவரை அவமதிக்கிறார்.

ஆகையால் இது அவருடைய பிரச்சினைதானே தவிர, உங்களுடையது அல்ல. இனி அவரைக் கண்டுகொள்ளத் தேவை இல்லை. நீங்கள் உங்களுடைய போக்கில் முன்னேறுங்கள்.
 

‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in


தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x