Published : 23 Oct 2018 11:38 AM
Last Updated : 23 Oct 2018 11:38 AM

மனதோடும் கொஞ்சம் பேசுவோம் 06: என்னை நான் ஏற்றுக்கொள்கிறேன்!

தங்களுடைய உடலமைப்பு குறித்த தாழ்வுமனப் பான்மையோடும் அதனால் தங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர், ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்படுவதாலும் என்னிடம் மனநல ஆலோசனை பெற வரும் இளம்வயதினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று பெரும்பாலான விளம்பரப்படங்களும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் உடலமைப்பு என்ற தலைப்பை வைத்துத்தான் பிழைப்பை ஓட்டுகின்றன.

போதாததற்கு ‘சிறந்த உடலமைப்பு’ என்ற கற்பனை வடிவத்தை வேறு திணிக்கிறார்கள். இயல்பாக அப்படியொரு உடல்வாகு யாருக்குமே வாய்ப்பதில்லை எனலாம். இந்த விவகாரத்தில் உடலமைப்பு குறித்த எண்ணம் என்பது சுயமதிப்போடுத் தொடர்புடையதாக இருக்கிறது. இதனால் பல நேரத்தில் இளம்வயதினரின் படிப்பையும் மற்றவர்களுடனான பழக்கவழக்கத்தையும் இது பாதிக்கிறது. என்ன செய்யலாம்?

1. தவிர்க்கவோ, ஒப்பிடவோ வேண்டாம்

உடலமைப்பு குறித்த சங்கோஜத்துடன் இருப்பவர்கள் கண்ணாடியில் தங்களுடைய உடலைப் பார்ப்பதையே தவிர்ப்பார்கள். தன்னைவிடவும் நல்ல உடல்வாகு கொண்டவர்களோடு தங்களை ஒப்பிட்டு அங்கலாய்த்துக்கொள்வார்கள். இதற்கு மாறாகச் சிலரோ எந்நேரமும் கண்ணாடியைப் பார்த்தபடியே இருப்பார்கள். தான் ‘குண்டா’, ‘ஒல்லியா’, ‘குட்டையா’ என்று சோதித்தபடியே இருப்பார்கள்.

உங்களுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளதா என்று கண்டறிய எளிய வழி: யாரேனும் உங்களைக் கடந்துபோகும்போது உடனடியாக அவரைக் காட்டிலும் நீங்கள் நன்றாகவோ அல்லது மோசமாகவோ காட்சியளிப்பதாக நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தாலே அது இந்தச் சிக்கலுக்கான அறிகுறிதான்.

இதன் உச்சகட்டமாக அடிக்கடி புத்தாடைகள் வாங்குவார்கள். விலை உயர்ந்த புத்தம்புதிய ஆடைகளை உடுத்தினால்தான் அழகாகத் தெரிவோம் என்கிற எண்ணம் மேலோங்கும்.

இதிலிருந்து விடுபட, கண்ணாடியை நேருக்கு நேர் பாருங்கள். உங்களுடைய அழகை உறுதிசெய்துகொள்ளுங்கள். சரிவிகித உணவையும் உடற்பயிற்சியையும் வழக்கப் படுத்திக்கொள்ளுங்கள்.

2. நம்பிக்கைகளும் அனுமானங்களும்

உங்களுடைய உடல் குறித்த புரிதலை உங்களுக்கே தெளிவுபடுத்துங்கள். ஊடகங்களும் வெளி உலகமும் உங்கள் மீது திணித்த கற்பிதங்களைத் தூக்கி எறியுங்கள். இதுநாள்வரை நீங்கள் கொண்டிருந்த குழப்பங்களுக்குச் சவால் விடுங்கள். உங்களுடைய தோற்றத்தை வைத்துக் கேலி செய்பவர்களுக்கு வேறு வேலை இல்லை என்பதை உணருங்கள். உங்களைக் கேலி செய்வதன் மூலம் தங்களுடைய குறைகளை அவர்கள் மறைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, அது உங்களுடைய பிரச்சினை இல்லை. சட்டாம்பிள்ளைகளை அண்டவிடாதீர்கள்.

3. உடையோ, படமோ!

உடைகளை மாற்றியோ புதிய கோணங்களில் உங்களை ஒளிப்படம் பிடித்துக்கொண்டு பகிர்வதோ பயனில்லை என்பதை உணருங்கள். ஃபோட்டோ ஷாப் செய்வதுதான் புத்திசாலித்தனம்… என்பன போன்ற போலியான நம்பிக்கைகொண்டவர்கள்தான் எந்நேரமும் ஃபேஷன் டிப்ஸ் கொடுப்பார்கள். அத்தகைய ஆலோசனைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

4. ஆரோக்கியத்துக்கான வழி

சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி, சவுகரியமான உடை ஆகியவை உங்களுக்குப் பழக்கப்பட வேண்டுமானால் முதலில் உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும். உங்களைப் பற்றி நீங்கள் சிறப்பாக உணரும்போது உங்களுடைய தேர்வுகளும் சிறப்பாகும்.

மொத்தத்தில் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள், எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். எது எப்படியோ, நீங்கள் உங்களை முழுவதுமாக நேசியுங்கள்.

‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C.ராஜரத்தனம்.

மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x