Published : 20 Nov 2018 10:12 AM
Last Updated : 20 Nov 2018 10:12 AM
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ‘கஜா’ எனப் பெயரிடப்பட்ட புயல், நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே நவம்பர் 16 அன்று கரையைக் கடந்தது. 20-ம் தேதி நிலவரப்படி இந்தப் புயலால் 46 பேர் உயிரிழந்தனர். இந்தப் புயலால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
குறையும் சாலை விபத்து மரணங்கள்
தமிழ்நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 26 சதவீதம் குறைந்திருப்பதாக மாநிலப் போக்குவரத்துத் துறை நவம்பர் 15 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 14,077 சாலை விபத்து மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2018-ம் ஆண்டில் 10,378 மரணங்களே பதிவாகியுள்ளன.
ஜிஎஸ்எல்வி ஏவுகணை வெற்றி
ஜிஎஸ்எல்வி-எம்கேIIIடி2 ஏவுகணை ஜிசாட் 29 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவம்பர் 14 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிசாட் 29 செயற்கைக்கோளைத் தொடர்ந்து ஜிசாட் 11 செயற்கைக்கோள் டிசம்பர் 4 அன்று விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. நாட்டில் அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்கு ஜிசாட் 29 செயற்கைக்கோள் உதவும்.
சபரிமலை: தீர்ப்புக்குத் தடை இல்லை
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல்செய்யப்பட்ட 48 மனுக்களை உச்ச நீதிமன்றம் நவம்பர் 13 அன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன், தீர்ப்பை மறு ஆய்வுசெய்யக் கோரிய மனுக்கள் ஜனவரி 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.
இளைஞர்களுக்கான தூதர்
அசாமைச் சேர்ந்த இளம் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், நாட்டின் இளைஞர்களுக்கான தூதராக நவம்பர் 14 அன்று யுனிசெஃப் இந்தியாவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவர் தங்கப் பதக்கமும் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.
மாவட்டங்கள் பெயர் மாற்றம்
உத்தரபிரதேசத்தின் ஃபஸாபாத், அலகாபாத் ஆகிய மாவட்டங்களின் பெயர்களை முறையே அயோத்யா, பிரயாக்ராஜ் என மாற்றுவதற்கு அம்மாநில அரசு நவம்பர் 13 அன்று ஒப்புதல் வழங்கியது. கடந்த ஓராண்டில் மட்டும் நாட்டின் 25 கிராமங்கள், சிறுநகரங்களின் பெயர் மாற்ற பரிந்துரைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் இந்த அனுமதியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
அமைச்சர் அனந்த் குமார் மறைவு
நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் ரசாயன, உரத் துறை அமைச்சராக இருந்த அனந்த் குமார், உடல்நலக் குறைவு காரணமாக நவம்பர் 12 அன்று மறைந்தார். அவருக்கு வயது 59. இவர் தெற்கு பெங்களூரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார்.
நவீனப் பணியிடங்களுக்குத் தயார் செய்வதில்லை
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களை நவீனப் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்வதில்லை என்று நவம்பர் 15 அன்று வெளியான ‘குளோபல் யுனிவர்சிட்டி எம்ப்ளாயபிலிட்டி ரேங்கிங்’ அறிக்கை தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த ‘டைம்ஸ் ஹயர் எஜுகேஷன்’ தயாரித்த இந்தப் பணித் தகுதியாக்கம் குறித்த தரவரிசைப் பட்டியலில் உலகின் 150 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் முதல் இடத்தை ஹார்வர்டு பல்கலைக்கழகம் பிடித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஐஐஎஸ்சி (பெங்களூரு), ஐஐடி (டெல்லி, மும்பை) ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்திருக்கின்றன.
ட்விட்டரில் தேர்தல் விழிப்புணர்வு
இளைஞர்களுக்கு 2019 பொதுத் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ட்விட்டர் இந்தியா, ‘#பவர்ஆஃப்18’ என்ற ஹாஷ்டாக்கில் நவம்பர் 12 அன்று ஓர் இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறது. இளைஞர்கள் தேர்தல் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், அவர்கள் சமூக நோக்கத்துடன் முன்னெடுக்கும் செயல்களை ஆதரிக்கவும் இந்த இயக்கம் பயன்படும் என்று ட்விட்டர் இந்தியா தெரிவித்தது. நாடு முழுவதும் 3,622 இளைஞர்களிடம் ட்விட்டர் இந்தியா நடத்திய ஆய்வில், 94 சதவீதத்தினர் தேர்தலில் வாக்களிப்போம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
குறையும் எண்ணிக்கை
அமெரிக்காவுக்குக் கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டைவிட 2018-ம் ஆண்டு குறைந்திருப்பதாக நவம்பர் 13 அன்று வெளியான ‘ஓபன் டோர்ஸ்’ அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு அமெரிக்காவுக்குக் கல்வி பயிலச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 5.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இது 2015-16 கல்வியாண்டின் 12.3 சதவீதத்தைவிட இது குறைவு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்து வரும் ரூபாய் மதிப்பும் இதற்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT