Last Updated : 30 Oct, 2018 12:57 PM

 

Published : 30 Oct 2018 12:57 PM
Last Updated : 30 Oct 2018 12:57 PM

ஆங்கிலம் அறிவோமே 235: என்னை மறந்துவிடாதே!

“Touch me not என்பது ஒரு தாவரம்.  அதாவது தொட்டாற் சிணுங்கி.  Forget me not என்று ஒரு தாவரம் உண்டா? ஓரிடத்தில் இதுபோன்று எதையோ படித்தேன்”.

உண்டு! Myosotis Palustris என்ற தாவரத்தின் பூவை Forget me not என்று செல்லமாகக் கூறுவார்கள்.

இந்தத் தாவரத்துக்கு ‘எலிக்காது' (Mouse ear) என்றும் ஒரு பெயர் உண்டு.  காரணம் இதன் சிறிய இலைகள் எலியின் காதுகளை ஒத்திருக்கும்.

இதன் மலரின் செல்லப் பெயருக்கான காரணத்தை ‘தொடக்கம் இப்படித்தான்’ பகுதியில் அறிந்துகொள்வோம்.

*************

Manimal என்று ஒரு சொல் இருக்கிறதா?

இருக்கிறது.  Man, animal ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்த சொல் அது. பார்ப்பதற்கு மனிதன் போல இருக்கும் ஒருவன் அநாகரிகமாகவும், வன்முறையாகவும் நடந்துகொண்டால் அவனை manimal என்று குறிப்பிடுவார்கள். 

english-2jpg100 

"Their, there, they’re ஆகிய மூன்றுக்குமிடையே கொஞ்சம் தெளிவு ஏற்படுத்துங்களேன்."

They’re என்பது contraction.  அதாவது,  they are என்பதன் சுருக்கம்.  They’re not going to film today என்றால் அவர்கள் சினிமாவுக்குப் போகவில்லை என்று பொருள். They are =  அவர்கள்.

There  என்பது adverb.  அது ஒரு இடத்தைக் குறிக்கிறது.  Stand over there என்றால் அங்கே நில் என்று பொருள்.  There he is என்றால் அவன் அங்கே இருக்கிறான் என்று பொருள். There = அங்கே.

Their என்பது adjective.  The rock blocked their path என்றால் அந்தப் பாறை அவர்கள் வழியை மறித்தது என்று அர்த்தம்.  Their =  அவர்களுடைய.

கீழே உள்ள கோடிட்ட பகுதிகளில் மேற்படி மூன்று சொற்களில் எதை எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவு ஏற்பட்டு விட்டால் உங்களுக்கு இது முழுவதுமாக விளங்கி விட்டது என்று பொருள்.

1. _________ standing over

2. I do not know why _________ here.

3. _________ are two parts to _________  notification.

4. _________ project reports are

*************

என் நண்பர் ஒருவர் சமீபத்தில் எரிச்சலுடன் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.  “திரைப்படத் துறை சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டி எடுக்கும்போது ‘நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து’ என்று ஒரு நடிகை கூறுவார்.  அல்லது ‘நான் இயக்குநரானதே ஒரு விபத்து’ என்று ஒரு இயக்குநர் கூறுவார்.  இவர்கள் இப்படிச் சொல்கிறார்களா அல்லது பேட்டி எடுப்பவர்கள் இப்படி எழுதுகிறார்களா என்று தெரியவில்லை.  அபத்தமாக இருக்கிறது” என்றார். 

“By accident” என்பது விபத்தை மட்டும் குறிக்கவில்லை.  இதுபோன்ற பேட்டிகளில் இடம் பெறவேண்டிய வாக்கியம் “நான் நடிக்க வந்தது எதிர்பாராதது”, “நான் இயக்குநரானது மிகவும் தற்செயலானது” என்பதாகத்தான் இருக்க வேண்டும்.  Accident என்பது எதிர்பாராதது அவ்வளவுதான். அதை விபத்தாக நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.

*************

தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களின் கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டியவை.

1. They’re, there

2. They’re

3. There, their

4. Their, there

*************

தொடக்கம் இப்படித்தான்

டான்யூப் (Danube) என்ற நதியின் கரையில் ஒரு கனவானும் சீமாட்டியும் நடந்துகொண்டிருந்தார்கள்.  அவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது.  அப்போது நதியில் மிதந்து கொண்டிருந்த ஒரு பூவைப் பார்த்து “எவ்வளவு அழகான பூ.  இது நதியில் மிதந்து ஏதாவது பாறையில் மோதிக் கொள்ளப் போகிறதே” என்று சீமாட்டி வருந்தினாள்.  அவள் வருத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத சீமான் பாய்ந்து நதியில் குதித்தான்.  அந்தப் பூவை அடைந்தான்.  அதைக் கையில் எடுத்துச் சீமாட்டியின் காலடியில் தூக்கி வீசினான். “Forget me not” என்றபடி அந்த நதியில் மூழ்கி இறந்து போனான். இதனால் அந்த மலர் அன்றிலிருந்து Forget me not   என்ற நாமகரணமும் பெற்றது!   இப்படி ஒரு பெயர்க் காரணம்! 

 

சிப்ஸ்

# Havoc என்பது?

மிகப் பரவலான பேரழிவு.

# Scholar என்பவர் சகலகலா வல்லவரா?

அவசியமில்லை.  ஒரு துறையில் மிகுந்த அறிவு கொண்டவர் scholar.

# கிளறுதல் என்றால்?

Stir


தொடர்புக்கு - aruncharanya@gmail.com |
ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x