Last Updated : 02 Oct, 2018 12:44 PM

 

Published : 02 Oct 2018 12:44 PM
Last Updated : 02 Oct 2018 12:44 PM

ஆங்கிலம் அறிவோமே 231: முட்டாள் ஒருவனின் குல்லாய்

கேட்டாரே ஒரு கேள்வி

‘ஏ4 ஷீட்’, ‘ஃபுல்ஸ்கேப் ஷீட்’ என்றெல்லாம் சொல்கிறோமே முழுமையான, நீளமான தாள் என்பதால், அதற்கு Fullscape sheet என்று பெயரா?

**********************

Plaster என்ற சொல் தனக்குக் குழப்பத்தைக் கொடுப்பதாக ஒரு வாசகர் குறிப்பிட்டிருக்கிறார். பிளாஸ்திரி என்பதும் இதுவும் ஒன்றுதானா என்ற சந்தேகம் அவருக்கு.

‘பிளாஸ்டர்’ என்பது ஒருவித வெள்ளைப் பொடி. இதைத் தண்ணீரில் கலந்தால் மிகவும் இறுகிவிடும். எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்தப் பகுதி சிறிதும் நகராமல் இருந்தால்தான் உடைந்த எலும்புகள் கூடும். எனவே, அந்தப் பகுதியில் பிளாஸ்டரைப் பூசுவார்கள். அது இறுகிவிடும். அந்தப் பகுதி அசையாமல் இருக்கும்.

காயங்களின் மீது சின்னதாக ஒரு பட்டியை நாம் போடுவதுண்டு. அதுவும் பிளாஸ்டர்தான். ‘Water Proof Plaster’ என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்போமே. தமிழில் இதை பிளாஸ்திரி என்று சொல்வார்கள்.

கேட்கக் கூடாத கேள்வி - தமிழில் எதற்காக ‘மக்கு பிளாஸ்த்ரி’ என்ற பயன்பாடு வந்தது?

**********************

 “Catwalk என்பதும் cakewalk என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களா?” இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Catwalk என்பது நிஜமாகவே walk தொடர்பானது. அழகிப் போட்டிகளில் பங்குகொள்பவர்கள் அவர்களுக்கான நடைமேடையில், ஒயிலாக நடந்து வருவார்களே அந்த நடையைத்தான் catwalk என்பார்கள். Catwalk என்பது ஒரு noun-தான்.

Cakewalk என்பது நடையோடு சம்பந்தப்பட்டதல்ல. மிகமிக எளிமையான ஒரு செயலை cakewalk என்பார்கள். Winning the match will be a cakewalk for them.

Cakewalk என்பது noun ஆகவும், verb ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

They struggled to win the tournament and it was not a cakewalk for them.

Had they played well, they could have cakewalked that game.

முன்னொரு காலத்தில் கறுப்பின அமெரிக்க மக்களுக்கிடையே நடனப்போட்டி நடைபெற்றபோது, பரிசாக ஒரு cake-தான் அளிக்கப்பட்டதாம். எனவே, cakewalk என்ற சொல் உருவானது என்கிறார்கள்.

கேட்கக் கூடாத கேள்வி – அப்படியானால் Cakedance என்றல்லவா அது மருவியிருக்க வேண்டும்?

**********************

“The exception proves the rule என்று ஒரு புதினத்தில் படித்தேன். அர்த்தம் புரியவில்லை. விளக்க முடியுமா?”

 வாசகரே, ஒரு நாடகத்தைப் பார்க்கச் செல்கிறீர்கள் அரங்க வாசலில் “Entry free today” என்று அறிவிப்புப் பலகை இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? மீதி நாட்களில் கட்டணம் செலுத்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றுதானே! அதாவது இன்று இலவசம் என்று சொல்லும்போதே மீதி நாட்களில் கட்டணம் உண்டு என்ற அர்த்தமாகிறது அல்லவா?

Parking not allowed on Sundays என்றால் என்ன அர்த்தம்? மீதி நாட்களில் அங்கு வாகனங்களை நிறுத்தலாம் என்பதுதானே? அதாவது the exception proves the rule.

கேட்கக் கூடாத கேள்வி – அப்படியானால் ‘இன்று பெட்ரோல் விலை உயர்ந்தது’ என்கிறார்களே, the exception proves the rule-படி அதற்குப் பொருள் என்ன?

**********************

 “என் நிறுவனத்தில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். மேலதிகாரியின் தொல்லை தாங்க முடியவில்லை. இது பற்றி நண்பர் ஒருவரிடம் கூறியபோது Pucking order என்பது எல்லா இடத்திலும் இருப்பதுதான் என்றார். அதற்குப் பிறகு அவர் கூறிய பதிலில் என் கவனம் சென்றுவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு ‘பக்கிங் ஆர்டர்’ என்ற சொற்கள் குறித்த கேள்வி மனத்தில் எழுந்திருக்கிறது. Please help me”

உங்கள் அலுவலகத்தின் நிலையை மாற்ற என்னால் உதவ முடியாது நண்பரே. ஆனால், உங்கள் நண்பர் கூறிய சொல்லின் பொருளைக் கண்டுபிடிக்க உதவ முடியும். உங்கள் நண்பர் குறிப்பிட்டது pecking order என்பதாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

 Puck என்பது ஐஸ் ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது. பந்துக்குப் பதிலாகச் சிறிய கறுப்பு நிற ரப்பர் தக்கையைப் பயன்படுத்துவார்கள். அதை puck என்பதுண்டு. பிரிட்டனில் விஷமத்தனம் நிரம்பிய தீய ஆவியையும் Puck என்பதுண்டு (இந்தச் சொல்லின் தொடக்க எழுத்து capital letterல்தான் இருக்கும்).

இப்போது pecking order-க்கு

வருவோம். கோழிகள் தீவனத்தைக் கொத்திக் கொத்தித் தின்பதைப் பார்த்திருப்பீர்கள். பிற விலங்குகள், பறவைகளையும் அது கொத்துவதுண்டு. இப்படி அலகால் கொத்துவதைத்தான் pecking என்பார்கள். ஓர் உயர் அதிகாரி தனக்குக் கீழே இருப்பவர்களை அடிக்கடி ‘கொத்திக் கொண்டே’ இருந்தால் அதை pecking order என்பார்கள். அதாவது பதில் தாக்குதல் இருக்காது என்ற நம்பிக்கையில் தனக்குக் கீழ் மட்டத்தில் இருப்பவர்களைச் சீண்டிப் பார்ப்பது.

 Bureaucratic pecking order என்றால் உயர் மட்டத்தில் ‘கொத்தக்கூடிய நிலையில் இருப்பவர்கள்’ என்று பொருள். Today it appears the social pecking order is defined by financial strength.

கேட்கக் கூடாத கேள்வி – அப்படியானால் henpecked husband என்று அழைக்கப்படுபவர் யார்?

english 2jpg100 

தொடக்கம் இப்படித்தான்

‘கேட்டாரே ஒரு கேள்வி’ நண்பரே, ஏ4 ஷீட்டைவிட நீங்கள் கூறும் தாள் நீளமானது.

ஆனால், இந்தச் சொல்லின் spelling வாசகர் குறிப்பிட்ட எழுத்துக்கள் அல்ல. இது ஃபுல்ஸ்கேப் அல்ல. ஃபூல்ஸ்காப் (Foolscap). அந்தக் காலத்தில் உலகெங்குமே இந்த நீளம் கொண்ட தாள்கள்தாம் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. நகலெடுக்கும் கருவி அறிமுகமான பிறகு ஏ4 தாள்கள் மிக அதிகமாகப் பயன்படுகின்றன.

ரூபாய் நோட்டுக்களில் வாட்டர் மார்க் என்று ஒன்று இருக்கும். அதாவது அந்த நோட்டை வெளிச்சத்தில் பார்த்தால் ஏதாவது ஒரு உருவம் இருக்கும். அந்த உருவத்தின் சில பகுதிகள் அழுத்தமாகவும் சில பகுதிகள் வெளிறிப் போயும் காட்சி தரும். இவற்றையெல்லாம் அப்படியே கொண்டு வருவது கள்ளநோட்டுகளில் சாத்தியம் இல்லை.

போலிகளைத் தடுக்கத்தான் வாட்டர் மார்க் பயன்பட்டது. விலை அதிகமான அஞ்சல் தலைகளில்கூட வாட்டர் மார்க் இருக்கும்.

அந்தக் காலத்தில் மிக முக்கிய ஆவணங்கள்கூட Foolscap தாள்களில் எழுதப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் அதுபோன்ற தாள்களில் ‘முட்டாள் ஒருவனின் குல்லாய்’ என்பதை வாட்டர்மார்க்காகக் கொண்ட தாள்கள் அச்சிடப்பட்டனவாம். Fool’s cap என்பதை வாட்டர் மார்க்காகக் கொண்டிருந்ததால் அந்தத் தாள்களை Foolscap என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

கேட்கக் கூடாத கேள்வி – முட்டாளின் குல்லாய்க்கும், புத்திசாலியின் குல்லாய்க்கும் என்ன வித்தியாசம்?
 

சிப்ஸ்

# To lick the dust என்றால் புறமுதுகிடுவது என்று அர்த்தமா?

 இல்லை. இறப்பது என்று அர்த்தம். During the attack all the terrorists licked the dust.

# Cleft என்றால்?

 பிளவுபட்ட. The child was born with cleft lip.

# He was leaning on a wall என்பது சரியா, he was leaning in a wall என்பது சரியா?

 He was leaning against the wall என்பதுதான் சரி.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x