Last Updated : 02 Oct, 2018 12:45 PM

 

Published : 02 Oct 2018 12:45 PM
Last Updated : 02 Oct 2018 12:45 PM

வெற்றி முகம்: அரை நாள் பயிற்சிக்கு அரை நாள் பயணிக்கும் ‘குரு’சாமி!

பள்ளிக்கு மைதானம் கிடையாது. விளையாடக் கற்றுக்கொடுக்க முழு நேரப் பயிற்சியாளர் கிடையாது. ஆனாலும், சாதித்துவருகின்றனர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.

உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் 2011-ம் ஆண்டுவரை உடற்கல்வி ஆசிரியர் என்று சொல்வதற்குக்கூட இங்கே யாரும் நியமிக்கப்படவில்லை. நீண்ட காலக் கோரிக்கைக்குப் பிறகு 2012-ம் ஆண்டு பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக குருசாமி நியமிக்கப்பட்டார்.

இந்தப் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரின் பயிற்சியால் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், கபடி, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் எனத் தடகளப் போட்டிகளில் இந்தப் பள்ளி மாணவர்கள் ஜொலிக்கத் தொடங்கினர். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த விளையாட்டுகளில் மாவட்ட, மண்டல அளவில் மாணவர்கள் பதக்கங்களைக் குவித்து வருவதே இதற்குச் சாட்சி.

சாதித்த மாணவிகள்

கடந்த ஆண்டு இப்பள்ளியில் படித்த மாணவி ஆர்.பிரியங்கா மாநில அளவிலான வட்டெறிதல் போட்டிக்கு மூன்று ஆண்டுகள் தகுதி பெற்றார். பிளஸ் 1 படிப்புக்காகத் தற்போது வேறு பள்ளிக்கு இடம்மாறியுள்ள பிரியங்கா, அங்கு மேற்கொண்டு முறையான பயிற்சி கிடைத்ததால் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். மும்முறை தாண்டுதலில் ஏ.ரஞ்சனிபிரியா, நீளம் தாண்டுதலில் நந்தினி மாநில அளவிலான போட்டிகளுக்கு முன்னேறிப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

தற்போது 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ர.சந்திரகௌரி அண்மையில் நடந்த மாவட்ட அளவிலான 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் வென்று மாவட்ட அளவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தைத் தட்டிவந்துள்ளார். இவருக்குத் தந்தை இல்லை. அவருடைய தாய் விவசாயம் செய்து சந்திரகௌரியைப் படிக்கவைத்து வருகிறார். விடுமுறை நாட்களில் ஆடு, மாடு மேய்க்கச் செல்லும்போதும் தனது பார்வையில் அவை மேய்ந்துகொண்டிருக்க, பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

ஏழ்மையை ஒரு தடையாக எண்ணாமல், தங்கள் விவசாய நிலத்திலேயே நீளம் தாண்டுதலுக்கான பாதையை ஏற்படுத்திப் பயிற்சி பெற்றுவருகிறார் சந்திரகௌரி.

சீருடைகூட இல்லை

 “ஜெர்சி எனப்படும் சீருடைகூட எங்கள் யாருக்கும் தனியாக இல்லை. போட்டிகளுக்குச் சென்று வந்த பிறகு, ஒருவர் பயன்படுத்திய சீருடையையே மற்றவர்கள் பயன்படுத்தி வருகிறோம். தரமான காலணிகள் வாங்கவும் காசு இல்லை. மைதானமும் இல்லாததால் தினமும் எங்களால் பயிற்சி பெற முடியவில்லை” என்கின்றனர் இப்பள்ளி மாணவிகள்.

6 மணி நேரப் பயணம்

இந்தப் பள்ளியின் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரான குருசாமி நினைத்திருந்தால், தனக்குக் கிடைக்கும் சொற்பச் சம்பளத்துக்குக் கடமைக்கு எதையாவது சொல்லிக்கொடுத்துவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் மாணவர்களின் திறமைகளை வளர்த்தெடுத்திருக்கிறார்.

vetri 2jpgமாணவி சந்திரகௌரி

பள்ளி இருக்கும் இடத்திலிருந்து 62 கி.மீ.க்கு அப்பால் உள்ள அன்னூரிலிருந்து தினமும் 6 மணி நேரம் செலவழித்துப் பள்ளிக்கு வருகிறார். அரை நாள் பயிற்சிதான். ஆனால், போக்குவரத்துக்காக அரை நாளைச் செலவழிக்கிறார் குருசாமி.

“நான் அந்தப் பள்ளியின் வாசலுக்குள் நுழைந்த முதல்நாள். நான் வந்திருப்பதை அறிந்ததும் ஒரு மாணவர் ‘ஏஏஏ.. நம்ம ஸ்கூலுக்கு பி.டி மாஸ்டர் வந்துருக்காரு...’ என்று ஆரவாரம் எழுப்பினார். உடனே வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள் பாடங்களைக் கவனிக்காமல் என்னைக் கவனிக்கத் தொடங்கினர்.

பள்ளி நாட்களில் விளையாடாமல், வகுப்புக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்களின் ஆர்வத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. சில நாட்களிலேயே எந்த மாணவர் எந்த விளையாட்டுக்குச் சரியாக இருப்பார் என்று தேர்வு செய்து அதற்கேற்றவாறு பயிற்சி அளித்தேன். மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதன் விளைவுதான் தடைகளைத் தாண்டி மாணவர்கள் பெற்ற தொடர் வெற்றிகள்” என்கிறார் குருசாமி.

ஆனால், இதுபோன்ற பயிற்சியாளர்களையும் பயிற்சி பெற்றுப் பதக்கங்களைக் குவிக்கும் ஏழை மாணவர்களையும் ஊக்குவிக்க யாரும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இந்தப் பள்ளி மாணவர்களுக்கு உதவ விரும்புவோர் உதவித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலத்தை 9944641357 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.மாவட்ட, மண்டல அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பயிற்சியாளர் குருசாமிபயிற்சியாளர் குருசாமியுடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x