Published : 02 Oct 2018 12:47 PM
Last Updated : 02 Oct 2018 12:47 PM

மனதோடும் கொஞ்சம் பேசுவோம் 03: கவனச்சிதறலைக் கவனிப்போம்!

மனத்தை ஒருமுகப்படுத்திப் படிக்க உட்காரும்போதெல்லாம் கவனச்சிதறல் ஏற்படுதல் என்பது பதின்பருவத்தினருக்கே உரிய சிக்கல்களில் ஒன்று. அலைபாயும் எண்ணங்களும் பகல் கனவு காணும் மனநிலையும் இந்தப் பருவத்தினரை அலைக்கழிக்கும். இதற்கான காரணங்களில் ஒன்று மூளையில் ஏற்படும் வளர்ச்சி. இரண்டாவது, சிந்திக்கும் திறனுக்கு மனித மூளையைத் தயார்படுத்த முதல்கட்டமான தெளிவற்ற புத்திக்கூர்மை இந்தக் காலகட்டத்தில்தான் உருவாகும்.

மூன்றாவதாக வயதுவந்தவருக்குரிய முதிர்ச்சியை ஏற்படுத்த ஹார்மோன்களில் உண்டாகும் ஏற்ற இறக்கங்கள். எதுவாக இருந்தாலும் இவை எல்லாம் சேர்ந்து படிப்பைப் பாதிக்கின்றன என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் சிக்கல்.

உணர்ச்சிவசப்படவைக்கக்கூடிய செய்திகளும் சம்பவங்களும் விடலைப்பருவ மூளையைக் கிளர்ச்சி அடையச் செய்யும். அதிலிருந்து மீண்டு அமைதியான மனநிலைக்கு வந்து படிப்பில் மூழ்குவது மிகவும் கடினம். இதைப் புரிந்துகொண்டு ஆசிரியர்களும் பெற்றோரும் பதின்பருவத்தினரை அனுசரணையுடன் நடத்துவது அவசியம்.

கவனிக்க உதவும் பொழுதுபோக்கு 

பதற்றமூட்டக்கூடிய வீடியோ விளையாட்டுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபடுதல் நன்மை பயக்கும். அதேபோல பகல் கனவு காண்பதைத் தவிர்க்கப் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடலாம். ஹார்மோன்களின் கொந்தளிப்பைச் சமன்படுத்தப் படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் உடற்பயிற்சி செய்தல், சரிவிகித உணவு சாப்பிடுதல், ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கில் ஈடுபடுதல் கைகொடுக்கும்.

ஆனால், இன்று வீடுகளிலும் பள்ளியிலும் குழந்தைகள் எந்நேரமும் படித்துக்கொண்டிருக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். ஆனால், படிப்புக்கும் பொழுதுபோக்குக்கும் சரிவிகிதமான முக்கியத்துவம் தரப்படும் குழந்தைகள்தாம் ஆர்வத்துடன் பயில்கிறார்கள் என்பதுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.

சரி, படிப்பின் வழியாகவே கவனச்சிதறலை எப்படிக் குறைக்கலாம் என்பதைப் பார்ப்போம்:

1. எந்நேரமும் படித்துக்கொண்டிருக்காமல் படிப்புக்கான நேரத்தைத் தீர்மானியுங்கள். சிலருக்கு விடியற்காலை படித்தல் கைகொடுக்கும். சிலருக்கோ இரவு படிப்பதுதான் சவுகரியமாக இருக்கும். இதில் எது உங்களுக்கு உகந்தது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

2. தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து படிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அடிக்கடி இடம் மாறத் தோன்றினாலும் மாற்ற வேண்டாம்.

3. சாப்பிடும் இடத்திலோ, டி.வி. இருக்கும் இடத்திலோ நீங்கள் தூங்கும் இடத்திலோ படிக்க வேண்டாம்.

4. சுவரைப் பார்த்து உட்கார்ந்து படித்தல் நல்லது. அதற்குப் பதிலாக ஜன்னலையோ, கதவையோ பெரிய அறையையோ பார்த்து உட்கார்ந்தால் கவனச்சிதறல் ஏற்பட வேறேதும் தேவை இல்லை.

5. படிக்க உட்காருவதற்கு முன்கூட்டியே தேவையானதைத் திட்டமிடுங்கள். தேவையான தாள், பேனா அல்லது கழிப்பறைக்குச் செல்லுதல், தண்ணீர் குடித்தல் போன்ற அத்தனை வேலைகளையும் செய்து முடித்துவிட்டுப் படிக்க உட்காருங்கள்.

6. இன்றைய அதிநவீனச் சாதனங்களின் தொல்லையால் பதின்பருவத்தினரின் மனம் ஒருமுகப்படக்கூடிய கால அவகாசம் 12 நிமிடங்கள் மட்டுமே. ஆக, ஒரு தலைப்பை 12 நிமிடங்களுக்கு ஆழ்ந்து வாசித்தால் நீங்களே தானாக 2 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குள் கழிப்பறை செல்லுதல், தண்ணீர் குடித்தல் அல்லது ‘Brain Gym’ போன்ற எளிய மூளைப் பயிற்சிகளைச் செய்து முடித்துவிடுங்கள்.

7. ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்யுங்கள். இசையைக் கேட்டபடியே படிப்பது மனம் லயித்துக் கற்க உதவும் என்பதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்று பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை நம்ப வேண்டாம். படித்து முடித்துவிட்டு உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள இசை கேட்கலாமே தவிர, இடையில் இசை கேட்டல் அல்லது எந்தவொரு பொழுதுபோக்கும் படிக்க உதவாது.

வேலையைத் திட்டமிடுங்கள், திட்டமிட்டதைச் செயல்படுத்துங்கள்!

தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x