Published : 30 Oct 2018 01:00 PM
Last Updated : 30 Oct 2018 01:00 PM

அந்த நாள் 07: தொட்டுத் தொடரும் பானைப் பாரம்பரியம்

வணக்கம் செழியா,

பதில் கடிதம் எழுதியதற்கு நன்றி. இந்த வாரம், உன்னோட பதில் கடிதத்துக்காக நான் காத்திருக்கலை. தீபாவளி வருது இல்லையா, அதனால என்னோட ஆராய்ச்சிக் களத்துலேர்ந்து புறப்பட்டுச் சொந்த ஊருக்குப் போறேன். அதனால, சீக்கிரமே கடிதத்தை எழுதுறேன்.

சிந்துவெளி நாகரிகத்தின் ஆதாரங்கள் பத்தி ஆரம்பத்துலேர்ந்தே நீ நிறையக் கேள்வி கேட்டு வந்திருக்க. அதற்கான சிறந்த பதில்களை, அந்த நாகரிகத்தின் முக்கிய ஆதாரங்களான சதுரமான, சிறு கல் முத்திரைகள் தருகின்றன. அவற்றைப் பற்றி இந்த முறை சொல்றேன். அவை 'சோப் ஸ்டோன்' எனப்பட்ட சவர்க்காரக் கல்லால் செய்யப்பட்டவை.

இந்த முத்திரைகளின் ஒரு பக்கத்தில் வடிவங்கள் செதுக்கப்பட்டு, அவற்றுக்கு மேலே ஒரு வரி எழுதப்பட்டிருக்கு. இந்திய மாடுகளுக்கே உரித்தான பெரிய திமில், கொம்புகள், தொங்கும் தாடைத் தோடல் ஆகியவற்றுடன் கூடிய எருது, காண்டாமிருகம், ஒற்றைக்கொம்பு வெளிமான் போன்றவை இந்த முத்திரைகளில் சுவாரசியமானவை.

andha-4jpgright

இந்த முத்திரைகளில் இடம்பெற்றுள்ளவை, சித்திர எழுத்துகள். இதுவரை 500 சித்திர எழுத்துகள் பற்றித் தெரிய வந்துள்ளன. ஆனால், அவை எவற்றை உணர்த்துகின்றன என்பதைத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் இன்னும் திட்டவட்டமாகத் தீர்மானிக்க முடியலை. அதேநேரம் அந்தக் கால மக்கள் பத்தியும், அவங்க எப்படி வாழ்ந்தாங்க என்பது குறித்த சித்திரமும் இந்த முத்திரைகள் மூலம் நமக்குக் கிடைக்குது.

இந்த முத்திரைகளை எதற்காக உருவாக்கினாங்க, எப்படிப் பயன்படுத்தினாங்க அப்படீங்கிறதும் புரியாத புதிராவே இருக்கு. நாணயங்கள் - அரச முத்திரைகள் எவையும் கண்டறியப்படாத நிலைல, சிந்துவெளி நாகரிகத்தில் இந்த முத்திரைகள் முக்கியமானவையா இருந்திருக்கணுங்கிறது மட்டும் நிச்சயம்.

அமைதி விரும்பிகள்

இவ்வளவு வளமாகவும் அறிவுபூர்வமாகவும் தழைத்திருந்த சிந்துவெளி மக்களுக்கு இரும்பைப் பற்றித் தெரிந்திருக்கவேயில்லை. செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தியிருக்காங்க. வெண்கலத்தில் வாணலிச் சட்டிகளைச் செஞ்சிருக்காங்க. அதோட தங்கம், வெள்ளியைப் பயன்படுத்தி வளையல், தோடுகள், கழுத்தணிகளைப் பொற்கொல்லர்கள் உருவாக்கியிருக்காங்க. அங்கிருந்து கிடைத்த மணிக்கற்களால் செய்யப்பட்ட சில கழுத்தணிகளைப் பார்க்கும்போது, அரிய கற்களைப் பளபளப்பாக்க அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குன்னு புரியுது. அப்புறம் அந்தக் கற்களைச் சேர்த்துப் பூட்டி கழுத்தணியாக்கி இருக்காங்க.

எல்லாவற்றுக்கும் மேலாகச் சிந்துவெளி மக்கள், பெரிய அமைதி விரும்பிகள். கிடைத்த எல்லாத் தொல்பொருட்களிலும் ஆயுதங்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. அந்த ஆயுதங்களும் வலுவற்ற வெண்கலத்தால் செய்யப்பட்டவை. அந்தக் காலத்துல போருக்கு அவசியமா இருந்த குதிரைகளும் அவங்கள்ட்ட கிடையாது.

andha-3jpg

கல் முத்திரைகள், வெண்கலப் பொருட்கள் போன்றவையெல்லாம் இருந்தும்கூட, நாணயம் இருந்ததா அப்படீங்கிற கேள்வி உனக்கு வந்திருக்கும். இல்லை. சிந்துவெளியின் ஓரிடத்தில்கூட நாணயம் கண்டறியப்படலை. அப்படின்னா, அங்கே பண்டமாற்று முறைதான் நடைமுறையில் இருந்திருக்கணும்.

பிரிக்க முடியாத பானையும் தமிழகமும்

அது பண்டமாற்று முறை நிலவிய சமூகம் என்றால், நமது கிராமங்கள்ல முன்பு இருந்ததைப் போல வேளாண்மையைத் தாண்டி நிறைய தொழில்கள் அங்கேயும் இருந்திருக்கணும். பானை வனைபவர்கள், நெசவாளர்கள், மணிக்கற்களை உருவாக்குபவர்கள், தச்சர்கள் போன்ற கைவினைக் கலைஞர்கள்னு பல்வேறு தொழில்களைச் செஞ்சவங்க இருந்திருக்காங்க.

இன்னைக்கு இருக்கிறது மாதிரியே மட்பாண்டம் செய்றதுக்குக் குயவர்கள் சக்கரத்தைப் பயன்படுத்தி இருக்காங்க. கிண்ணம், குவளை, தட்டு, நீண்ட கழுத்து ஜாடி, ஆழமற்ற சட்டி போன்றவற்றை வனைஞ்சிருக்காங்க. மட்பாண்டங் களையும் பொம்மைகளையும் செங்காவி, கறுப்பு வண்ண அலங்கார வடிவங்களால் அலங்கரிச்சிருக்காங்க. மீன், பறவை, பூ, இலைனு இன்றைய ஓவிய அலங்காரங்களின் தொடக்கத்தை அவை பிரதிபலிக்கின்றன.

குயவர்களும் அவர்கள் உருவாக்கும் மண் சட்டிப் பானைகள், மண் பொம்மைகள் போன்றவையும் 4,000 ஆண்டுகளைத் தாண்டி இன்றைக்கும் நம்மிடையே ஒரு மரபாகத் தொடர்வதை யோசிச்சுப் பார்த்தா, சிந்துவெளிக்கும் நமக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இன்னும் தெளிவாப் புரிஞ்சுக்க முடியும்னு தோணுது.

அன்புடன்,

குழலி
 

வால்காவிலிருந்து கங்கை வரை

andha-2jpg100 

சிந்துவெளி பற்றி மட்டுமில்லாமல், உலக வரலாற்றின் முக்கிய அம்சங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள ராகுல்ஜி என்று அறியப்பட்ட பிரபல தத்துவவியல்-பயண எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கைவரை' புத்தகத்தைப் படிக்கலாம். இந்த இந்தி நூலுக்குத் தமிழ்ப் புத்தகாலயத்தின் கண.முத்தையா மொழிபெயர்ப்பு, பாரதி புத்தகாலயத்தின் முத்து மீனாட்சியின் மொழிபெயர்ப்பு என இரண்டு மொழிபெயர்ப்புகள் உள்ளன.


தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x