Last Updated : 02 Oct, 2018 12:44 PM

 

Published : 02 Oct 2018 12:44 PM
Last Updated : 02 Oct 2018 12:44 PM

வெற்றிக் கொடி: நட்சத்திரங்களைத் தொட்ட குலாப் ஜாமுன்

‘குலாப் ஜாமுன் செயற்கைக்கோள்’ என்ற பெயருடன் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய, எடை குறைவான செயற்கைக்கோள்; விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகின் முதல் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட செயற்கைக்கோள்; நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய மாணவ செயற்கைக்கோள் பின்பு 'கலாம்சாட்’ ஆனது எப்படி என்பதைக் கதைபோல வர்ணிக்கிறது, ‘From Gulab Jamun to the Stars’ புத்தகம்.

22 ஜூன் 2017 அன்று விண்வெளியில் வெற்றிகரமாகப் பாய்ந்த 64 கிராம் குட்டி செயற்கைக்கோள் ‘கலாம்சாட்’. இதன் மூலம் விஞ்ஞான உலகத்தின் கவனம் அந்தச் செயற்கைக்கோள் உருவான இடமான சென்னைப் பக்கம் திருப்பியது. ஆனால், தமிழ்நாட்டிலோ சில ஊடகங்களைத் தவிரப் பெரும்பாலானவை இந்தச் சாதனையைக் கண்டுகொள்ளவில்லை. இப்படியான வருத்தத்துடன் இந்தப் புத்தகத்தைத் தொடங்கியுள்ளார் இஸ்ரோவின் பல சாதனைகள் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கும் ஸ்ரீநிவாஸ் லக்ஷ்மன்.

இவர் ஏற்கெனவே அப்துல் கலாமின் வாழ்க்கைச் சரித்திரம், இந்தியாவின் முதல் நிலவு செயற்கைக்கோளான 'சந்திரயான் 1’ குறித்த ஒரு புத்தகம், செவ்வாய் கிரகத்தில் இந்தியா தடம் பதிக்க செலுத்திய மங்கள்யான் பற்றி 2 புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த இவர், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த முகமது ரிஃபாக் ஷாரூக் என்ற இளைஞர்தான் 'கலாம் சாட்’ செயற்கைக்கோளை சென்னையில் வடிவமைத்தார் என்று கேள்விப்பட்டு சென்னை வருகிறார்.

தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’வில் (‘Space Kidz India’) ரிஃபாக் தற்போது தலைமை விஞ்ஞானியாக இருப்பது அறிந்து பூரிப்புடன் அந்நிறுவனத்தின் செயல் அதிகாரியைச் சந்திக்கிறார். அந்த நொடியில் இருந்து ‘கலாம் சாட்’ உருவான கதை புத்தக வடிவமெடுக்கிறது.

இதற்கிடையில் இந்தியா-ரஷ்யாவுக்கு இடையிலான விண்வெளி ஆராய்ச்சி நட்புறவு, பூமிப் பந்துக்கு மேலே 400 கிலோ மீட்டர் உயரத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கும் 39 ஆயிரம் கிலோ எடைகொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கால்பதித்த தருணம் உள்ளிட்ட பல கிளைக் கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

From Gulab Jamun to the Stars | Srinivas Laxman

The Write Place, Umang tower, 2nd Floor,
Mindspace, Off Link Road, Malad West,
Mumbai - 400064
 

‘வெற்றி நூலக’த்துக்குக் கல்வி, அறிவியல் தொடர்பாகப் புதிதாக வெளியான புத்தகங்களை அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, இந்து தமிழ் நாளிதழ்,கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x