Last Updated : 14 Aug, 2018 10:38 AM

 

Published : 14 Aug 2018 10:38 AM
Last Updated : 14 Aug 2018 10:38 AM

சேதி தெரியுமா? - ராஜீவ் கொலை வழக்கு: விடுதலை இல்லை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆகஸ்ட் 10 அன்று தெரிவித்தது. இந்தக் கொலை வழக்கில் 24 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசும் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பாக வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்ற மத்திய அரசின் முடிவைத் தெரிவித்தார்.

நல்லாசிரியர் விருது: எண்ணிக்கை குறைப்பு

சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுகள் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு 25 லிருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டுவரை, மாநில அரசு 25 ஆசிரியர்களை நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வுசெய்து அனுப்பிவந்தது.

ஆனால், இந்த ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் ஆசிரியர்களை நல்லாசிரியர் விருதுக்கு நேரடியாக விண்ணப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறது. அத்துடன், தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு அளிக்கும் விருது எண்ணிக்கையையும் ஆறாகக் குறைத்திருக்கிறது. தகுதியானவர்களுக்கு மட்டும் விருது அளிப்பதற்காக இந்த எண்ணிக்கைக் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதாக மத்திய மனிதவளத்துறை விளக்கம் அளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை, ஒடிசா, உத்தராகண்ட் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாகப் பதவி வகித்துவந்த இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம். ஜோசப் ஆகியோர் ஆகஸ்ட் 7 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மூன்று நீதிபதிகளுக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி வகித்துவந்த இவர்கள் மூவரும் பணி மூப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூவரின் பதவியேற்புக்குப் பின், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆகியிருக்கிறது.

மாநிலங்களவை புதிய துணைத் தலைவர்

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்ற மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் 125 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார். ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர். மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பிஜே குரியன் ஜூலை 1 அன்று ஒய்வுபெற்றதால், அந்தப் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

கேரள வெள்ளப் பாதிப்பு: 37 பேர் பலி

கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் 37 பேர் பலியாகி இருப்பதாகவும், 54,000 பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் அம்மாநில அரசு அதிகாரிகள் ஆகஸ்ட் 12 அன்று தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் வட கேரளத்தின் ஏழு மாவட்டங்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் ஆகஸ்ட் 8 –லிருந்து தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்துவருகிறது.

இதனால் 40 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், 26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் அரசு ஏற்பாடு செய்திருக்கும் 531 வெள்ள நிவாரண முகாம்களில் வீடுகளை இழந்த 60,622 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முப்படைகளின் உதவியுடன் கேரளத்தில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

46 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு விழா

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா 46 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்றது. 2017 ஜனவரி 1 முதல் 2018 ஜூன் 30 வரையான காலப்பகுதியில் முனைவர் பட்டப்படிப்பை முடித்த 400 மாணவர்களுக்கு இந்த விழாவில் பட்டங்கள் அளிக்கப்பட்டன. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வி.கே. சரஸ்வத் பட்டமளிப்பு விழாவின் உரை நிகழ்த்தி, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

1969-ல் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா 1972-ம் ஆண்டு நடைபெற்றது. அன்றைய மாணவர் சங்கத் தலைவர் வி.சி. கோஷியின் உரை சர்ச்சையை எழுப்பியதால் அதற்குப் பிறகு பட்டமளிப்பு விழாவே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறாமல் இருந்தது.

2 ஆண்டுகளில் 237 புலிகள் இறப்பு

நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 237 புலிகள் இறந்திருப்பதாக மக்களவையில் மத்திய அரசு ஆகஸ்ட் 10 அன்று தெரிவித்தது. 2016-ல் 122 புலிகளும், 2017-ல் 115 புலிகளும் இறந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா மக்களவையில் தெரிவித்தார். இதில், 2012-17-ம் ஆண்டு வரை நிகழ்ந்த புலிகளின் இறப்பில் 55 சதவீதம் இயற்கையானது, 23 சதவீதம் சட்டவிரோதமான வேட்டையின் காரணமாக நிகழ்ந்தது. ஆனால், இந்த மரணங்கள் புலிகளின் ஆண்டு வளர்ச்சி சதவீதத்தைப் பாதிக்கவில்லை. தற்போது சராசரியாக 5.8 சதவீதமாகப் புலிகளின் ஆண்டு வளர்ச்சி இருக்கிறது.

2050: முதியவர்கள் மக்கள்தொகை 34 கோடி

இந்தியாவில் முதியவர்களின் மக்கள்தொகை 2050-ம் ஆண்டுக்குள் 34 கோடியாக அதிகரிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் ஆகஸ்ட் 10 அன்று தெரிவித்தார். அதனால், முதியவர்களின் நலனைப் பேணுவதற்காக அரசு ‘முதியவர்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம்’ தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் முதியவர்களுக்கு நீண்ட காலத்துக்குத் தரமான சுகாதார வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x