Last Updated : 28 Aug, 2018 11:47 AM

 

Published : 28 Aug 2018 11:47 AM
Last Updated : 28 Aug 2018 11:47 AM

சேதி தெரியுமா? - முதல்வர் மீது ஊழல் புகார்

நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் வழங்கியதில் ரூ.4,800 கோடிவரை முறைகேடு நடந்திருப்பதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜூன் 22 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கூறி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 24 அன்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்திருக்கும் இந்த வழக்கில், முதல்வர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கத் தொடங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருக்கிறது. இரண்டு மாதம் கடந்தவிட்ட நிலையில் இன்னும் ஏன் வழக்கு விசாரணையை முடிக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, அரசு தரப்பு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 4 அன்று வழக்கை ஒத்திவைத்தார்.

 

ஏழு புதிய ஆளுநர்கள்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் ஏழு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை ஆகஸ்ட் 21 அன்று நியமித்தார். இதில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்றுவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பிஹார் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. 

பிஹாரின் புதிய ஆளுநராக உத்தரப்பிரதேச பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான லால்ஜி டான்டானும் சிக்கிம் ஆளுநராக கங்கா பிரசாத்தும், மேகாலயா ஆளுநராகத் தாதகத் ராயும் திரிபுராவின் ஆளுநராக கப்தான் சிங் சோலங்கியும் ஹரியாணாவின் ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யாவும் உத்தராகண்ட் ஆளுநராக பேபி ராணி மவுரியாவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

 

சக்கை உணவுக்குத் தடை

junkjpg100 

நாட்டின் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சக்கை உணவு விற்பதற்குத் தடை விதிக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு ஆகஸ்ட் 21 அன்று அறிவுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி பல்கலைக் கழக மானியக் குழு அறிவிப்பை வழங்கியிருக்கிறது.

மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்காகவும் சக்கை உணவுகளுக்குத் தடைவிதிக்கப்படுவதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மாணவர்களிடம் சக்கை உணவுகளைத் தவிர்க்க வேண்டிய காரணங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

இணையத் தாக்குதல் நடத்தும் சீனா

இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் 35 சதவீதம் சீனாவிலிருந்து நடத்தப்படுவதாக இந்தியக் கணினி அவசரக் குழு (CERT-in) தேசியப் பாதுகாப்புக் குழு செயலகத்துக்கு சமீபத்தில் அறிக்கை அனுப்பியிருக்கிறது. இந்த அறிக்கையில் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளங்களில் நடத்தப்படும் தாக்குதல்களில் சீனா (35%) முதலிடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (17%), ரஷ்யா (15%), பாகிஸ்தான் (9%), கனடா (7%), ஜெர்மனி (5%) போன்ற நாடுகளும் இருக்கின்றன.

இந்த இணையத் தாக்குதல்களில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஆர்.சி.டி.சி., பஞ்சாப் தேசிய வங்கி, எஸ்.பி.ஐ. வங்கி, தேசிய தகவல் மையம் போன்ற இணையதளங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற தாக்குதல்களை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 

குறையப்போகும் குழந்தைகள் எண்ணிக்கை

1kuzhandhaigaljpg100 

இந்தியாவின் மக்கள்தொகை 2050-ம் ஆண்டில் 170 கோடி எட்டும் என்று கணக்கிடப்பட்டிருக்கும் நிலை யில், குழந்தைகளின் (15 வயதுக் குட்பட்டவர்கள்) எண்ணிக்கை அடுத்த 32 ஆண்டுகளில்  20 சத வீதம் குறையும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம், இதே காலகட்டத்தில் நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ‘பாப்புலேஷன் ரெஃப்ரென்ஸ் பீரோ’ இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறது. தற்போது நாட்டில் 28 சதவீதமாக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2050-க்குள் 19 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 6 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை

இந்தியாவில் ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்புகொண்ட முதல் நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 23 அன்று ஆனது. அந்நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 38 சதவீதம் உயர்ந்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் உயர்ந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அந்நிறுவனத்தின் சந்தை வளர்ச்சிக்குக் காரணமாக டிராய் (TRAI) தெரிவித்திருக்கிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 97 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாக இணைத்திருக்கிறது. இதனால், ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 21.5 கோடியைத் தாண்டி உள்ளது. கடந்த மே மாதம் டிசிஎஸ் நிறுவனம் ரூ. 7 லட்சம் கோடி சந்தை மதிப்புகொண்ட நிறுவனமாக மாறியது. 

 

இந்தியாவில் சமத்துவமற்ற தினக்கூலி

diankkuliojpg100 

புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்திய பிறகும் இந்தியாவில் சமத்துவமற்ற தினக் கூலி முறை நீடிப்பதாக ஆகஸ்ட் 20 அன்று வெளியான சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் ஆய் வறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையை மாற்ற குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தும் வலிமையான சட்டங்களை இந்தியா இயற்ற வேண்டும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்திருக்கிறது. தேசிய மாதிரி ஆய்வகம் (NSSO) 2011-12-ம் ஆண்டில் நடத்திய வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பின்மை ஆய்வுத் தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தத் தினக்கூலி தொடர்பான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

2012-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அரசும், தேசிய மாதிரி ஆய்வகமும் தினக்கூலி தொழிலாளர்களைப் பற்றி அதிகாரபூர்வமான ஆய்வை மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 2011-12-ம் ஆண்டில் இந்தியாவின் சராசரி ஊதிய மதிப்பு ரூ. 247. ஆனால், இந்தியாவில் 62 சதவீதமாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 143-ஆக இருக்கிறது.

 

அரசியல் தலைவர்களை மதிப்பிடும் செயலி

இந்தியாவின் அரசியல் தலைவர்கள், அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் மதிப்பீடு செய்யும் செயலியை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 24 அன்று டெல்லியில் அறிமுகம் செய்திருக்கிறார்.  ‘நேத்தா’ (Neta-தலைவர்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் செயலியை பிரதம் மிட்டல் என்ற 27 வயது இளைஞர் வடிவமைத்திருக்கிறார். இந்தச் செயலி வாக்காளர்களைத் தங்கள் தொகுதியின் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிப்பீடு, விமர்சனம் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியின்  பீட்டா பதிப்பில் இதுவரை 1.5 கோடி வாக்காளர்கள் தங்கள் உள்ளூர் அரிசியல்வாதிகளை மதிப்பீடும் விமர்சனமும் செய்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x