Last Updated : 28 Aug, 2018 11:46 AM

 

Published : 28 Aug 2018 11:46 AM
Last Updated : 28 Aug 2018 11:46 AM

இணையவழிக் கல்வி: மனதை ஆளப் படிக்கலாம்!

விந்தையானது, புதிரானது, அளவிட முடியாதது, அடக்க முடியாதது, புரிந்துகொள்ள முடியாதது என மனிதனின் மனம் பற்றி விவரித்துக்கொண்டே செல்லலாம். அந்த மனதைப் பற்றியும் அதன் சிந்தனை வீச்சைப் பற்றியும் அதன் எண்ண ஓட்டங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள முயல்வதுதான் உளவியல்.

எம்.பி.பி.எஸ். படித்த பிறகு படிக்கக்கூடிய மனநல மருத்துவமானது Psychiatry எனப்படுகிறது. மறுபுறம் பிளஸ் டூ முடித்து உளவியல் படிப்பைக் கலை அறிவியல் பாடமாகவும் படித்துப் பட்டம் பெறலாம். B.Sc Psychology, B.A. Psychology ஆகிய உளவியல் படிப்புகளைக் கல்லூரிகளில் மட்டுமின்றி இணையம் வழியாகவும் படிக்கலாம். அதுவும் இலவசமாகக் கற்றுக்கொடுக்க பல இணைய வகுப்புகள் உள்ளன. அத்தகைய வகுப்புகளில் ஒன்று, https://www.edx.org/learn/psychology

விருப்பதுக்கு ஏற்ப

உளவியல் என்பது ஆழமான கடலைப் போன்றது. அந்தக் கடலின் அடிமட்டம்வரை செல்வதற்கான வகுப்புகளும் வழிமுறைகளும் edx-ல் உள்ளன. உளவியலின் பல கூறுகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் நேரடியாக இங்கே கற்றுக்கொடுக்கின்றன. இதன் வகுப்புகள் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி சிக்கலற்ற மொழி நடையில் சுவாரசியமாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரின் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப வகுப்புகள் இருப்பதுதாம் edx-ன் முக்கியச் சிறப்பு.

உளவியல் பிரிவுகள்

‘கிளினிக்கல்’, ‘டெவலப் மெண்டல்’, ‘சோஷியல்’ என உளவியலை மூன்று வகைக்குள் அடக்கிவிட முடியும். மனநல பாதிப்புகள் பற்றியும் அவற்றின் சிகிச்சை முறைகள் பற்றியும் கிளினிக்கல் சைக்காலஜியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பவர்களால், நோயாளிகள் என்ன வகை மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். பாதிப்புக்கு உள்ளானவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.

டெவலப்மெண்டல் சைக்காலஜியில் சமூக இயல்பு, மனித உணர்வுகள், சிந்தனையின் தொடர் கண்ணிகள், எண்ணத் தெளிவின் அளவு ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. குழந்தை வளர்ப்பில் இந்தப் பிரிவின் பங்கு முக்கியமானது.

சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் உள்ள உறவு பற்றியும் மனிதன் எப்படித் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் சிந்திக்கிறான் என்பது குறித்தும் சரி - தவறு ஆகிய கற்பிதங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும் சோஷியல் சைக்காலஜியில் கற்பிக்கப்படுகிறது. மனிதனின் சிந்தனை முறை, சமூகத்தில் மனிதன் இயங்கும் முறை உள்ளிட்டவை இதில் அலசி ஆராயப்படுகின்றன.

வகுப்புகளின் வடிவமைப்பு

உளவியல் குறித்த எளிதான அறிமுகத்துடன் வகுப்புகள் தொடங்குகின்றன. அதன்பின் உளவியலின் பிரிவுகள் விளக்கப்படுகின்றன. பின் அந்தப் பிரிவுகளின் உட்கூறுகள் தனித்தனியாக விவரிக்கப்படுகின்றன. பின் அந்த உட்கூறுகளின் பயன்பாடுகள் தனித்தனியே உணர்த்தப்படுகின்றன.

ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் சிறு தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. இறுதியில் ஒட்டுமொத்தமாக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அந்தத் தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் உங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சில பல்கலைக்கழகங்கள் டிப்ளமோ பட்டத்தையும் இளநிலைப் பட்டத்தையும் உயர்நிலைப் பட்டத்தையும் edx மூலம் அளிக்கின்றன.

வேலை வாய்ப்புகள்

கூட்டுக் குடும்ப அமைப்பில் மனநல மருத்துவம் என்பது மக்களுக்குத் தேவையற்றதாகக் கருதப்பட்டது. இன்று சாய்வதற்கும் ஆறுதல் பெறுவதற்கும் தேவையான தோள்களை மனநல ஆலோசகரிடமோ மனநல மருத்துவரிடமோ இளைய தலைமுறையினர் தேடுகின்றனர். தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவரை அணுகுவது போன்று சிறு சிறு பிரச்சினைகளுக்கும் மனநல மருத்துவரையோ உளவியலாளரையோ அணுகும் போக்கு அதிகரித்துள்ளது.

பல பிரச்சினைகளுக்கான தீர்வு, சார்பற்றுக் கேட்கும் திறன் கொண்ட காதுகள்தாம். பிரச்சினைகளுக்கு இன்று பஞ்சம் இல்லை என்பதால், சார்பற்றுக் கேட்கும் தன்மையுள்ள காதுகளை உருவாக்கும் உளவியல் படிப்புக்கும் அது தொடர்பான வேலைவாய்ப்புக்கும் பஞ்சம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x