Published : 07 Aug 2018 10:21 AM
Last Updated : 07 Aug 2018 10:21 AM
மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் நோபல் பரிசு கணிதத்துக்கு வழங்கப்படுவதில்லை. கனடா நாட்டுக் கணித அறிஞர் ஜான் ஃபீல்ட்ஸ் (ஆல்ஃபிரட் நோபலைப் போல) தனது சொத்தைத் தானமாக வழங்கிக் கணிதத்தில் ஒரு பரிசை ஏற்படுத்த திட்டமிட்டார்.
அதன்படி, 40 வயதுக்குள் மிகச் சிறந்த கணிதப் பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஃபீல்ட்ஸ் பெயரில் ஒரு கணிதப் பரிசு 1936-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவருகிறது.
கணிதத்துக்கு எனத் தனியாக நோபல் பரிசு இல்லையென்றாலும் அதற்கு இணையான பரிசாகக் கருதப்படுகிறது ‘ஃபீல்ட்ஸ் பதக்கம்’ (Fields Medal). நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேசக் கணித மாநாட்டின் தொடக்க விழாவில் அளிக்கப்படும் இந்த பரிசைப் பெறுவதே ஒவ்வொரு இளம் கணிதவியலாளரின் கனவாகும்.
சர்வதேசக் கணித மாநாடு
பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 1 அன்று தொடங்கிய சர்வதேசக் கணித மாநாடு 9-ம் தேதிவரை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் அக்ஷய் வெங்கடேஷ், பீட்டர் ஷோல்ஸ், கவ்ஷர் பிர்கார், அலசியோ பிகாலி ஆகிய நான்கு இளம் கணித வியலாளர்களுக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்தியக் கணித நாயகன்
பகுப்பாய்வு எண்ணியல், ஒரேபடித்தான இயக்கவியல், இயல்பு மாறா வடிவியல், உருவமைப்பியல் போன்ற கணித உட்பிரிவுகளில் அளப்பரிய சாதனைகளைப் படைத்ததற்காக அக்ஷய் வெங்கடேஷுக்கு ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவர் டெல்லியில் பிறந்து, இளம் வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்.
தனது ஆய்வை அமெரிக்காவில் நிகழ்த்திய அக்ஷய் வெங்கடேஷின் கணிதப் பங்களிப்புகளுக்கு ஏற்கெனவே சலீம் பரிசு, சாஸ்திரா ராமானுஜன் பரிசு, இன்ஃபோசிஸ் பரிசு, ஒஸ்டராவ்ஸ்கி பரிசு போன்ற உயரிய கணித விருதுகள் கிடைத்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற சர்வதேசக் கணித மாநாட்டில் இந்திய வம்சாவளி கணிதவியலாளர் மஞ்சுல் பார்கவா ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய வம்சாவளியில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்ற இரண்டாம் நபராக அக்ஷய் வெங்கடேஷ் விளங்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT