Last Updated : 28 Aug, 2018 11:45 AM

 

Published : 28 Aug 2018 11:45 AM
Last Updated : 28 Aug 2018 11:45 AM

சுதந்திர இந்தியாவின் சாட்சியாளர்

சுதந்திர இந்தியாவில் நடந்த பெரிய நிகழ்வுகள் பெரும் பாலானவற்றை ஒரு செய்தி யாளராகப் பதிவு செய்தவர் குல்தீப் நய்யர். அன்றைய பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டில் 1923-ம் ஆண்டு பிறந்து இதழியலைப் பட்டப் படிப்பாகப் பயின்ற குல்தீப் நய்யர் தன் வாழ்நாளின் இறுதிவரை இந்திய- பாகிஸ்தான் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து செயல்பட்டார்.

சுதந்திரமும் ஆக்ரோஷமும் கொண்ட சுயாதீன ஊடகச் செயல்பாடுகள் இல்லாமல் பொருள்பொதிந்த ஜனநாயகம் சாத்தியமில்லை என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் குல்தீப் நய்யர்.

உலகை உலுக்கிய செய்தி

யு.என்.ஐ.-ன் சார்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தாஷ்கண்டில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை நிகழ்வுகளைப் பதிவுசெய்யச் சென்றபோதுதான் நாடு முழுவதும் பிரபலமானார். 1965-ம் ஆண்டு தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில், அது தொடர்பான செய்திகளை நள்ளிரவில் இந்திய, பாகிஸ்தான் செய்திப் பத்திரிகைகள் அச்சடித்துக்கொண்டிருந்தன.

அந்த வேளையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தைச் செய்தித்தாள்களுக்கு அறிவித்தது இவர்தான். ஏற்கெனவே அச்சடித்த முதல் பக்கத்தை நீக்கிப் புதிதாக முன்பக்கம் அச்சடிக்கப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆவதற்கு முன்னரே அவரிடம் நட்புடன் இருந்ததால் தாஷ்கண்ட் ஒப்பந்தம் குறித்து அவர் அறைக்குத் மேலதிக விவரங்களைக் கேட்கச் சென்ற போதுதான், அவரது மரணம் குறித்து குல்தீப் நய்யருக்குச் செய்தி கிடைத்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாளுக்காகப் பணியாற்றியபோது, ஜனவரி 16, 1977-ல் குல்தீப் நய்யர் வெளியிட்ட செய்தி இந்தியாவையே உலுக்கியது. நெருக்கடி நிலை இருந்த சூழலில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தலை அறிவிக்க இருக்கிறார் என்ற செய்திதான் அது. அந்தச் செய்தியை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா வெளியிடச் சம்மதித்தாலும் அந்தச் செய்தி ஒரு வேளை தவறாகி இருந்தால் குல்தீப் நய்யர், வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இரு தரப்பு மீதான நம்பிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கும்.

ஊடக சுதந்திரப் போராளி

குல்தீப் நய்யர் தனது பத்திரிகையாளர் பணியில் ஊடகச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் தரும் அரசு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை எதிர்த்த பத்திரிகை யாளர்களில் இவரும் ஒருவர். 1988-ம் ஆண்டு அவமதிப்புக்கு எதிரான மசோதாவை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவர முயன்றபோது, ஊடக சுதந்திரத்தைப் பாதிக்குமென்று கூறி கடுமையாக எதிர்த்தார். ஒருகட்டத்தில் ராஜிவ் காந்தி தனது முடிவிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.

இந்தியப் பிரதமர்கள் லால் பகதூர் சாஸ்திரி, வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். 1997-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயல்பட்டவரும் கூட.

சிக்கலற்ற எழுத்து நடை,

விமர்சனக் கூர்மை, ஆக்ரோஷத்துக்காக அவரது கட்டுரைகள் வாசகர்களிடம் புகழ்பெற்றவை. அரசியல் இதழியலை (Political Journalism) அவருடைய எழுத்துகள் வரையறை செய்தன.குல்தீப் நய்யரின் பங்களிப்பு

> உருது பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கியவர். பிரபல ஆங்கில நாளிதழ் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’-ன் டெல்லி பதிப்பு ஆசிரியராக இருந்து யு.என்.ஐ.-ன் தலைவராக ஆனார்.

> 1971-ல் வங்கதேச விடுதலைக்குக் காரணமாக இருந்த இந்திய- பாகிஸ்தான் போரைக் களத்துக்குச் சென்று பதிவுசெய்த பத்திரிகையாளர்.

> 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பின்னர் நிகழ்த்தப்பட்ட அரசு சார்பான மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தியதால் கைது செய்யப்பட்டுத் திகார் சிறைக்குச் சென்றார்.

> மனித உரிமை ஆர்வலர் அமைதிச் செயல்பாட்டாளர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தலைமை வகித்தார்.

> அவரது புகழ்பெற்ற பத்தியான ‘பிட்வீன் தி லைன்ஸ்’-ல் ஊடகச் சுதந்திரத்தைப் பற்றி அவர் எழுதிய எழுத்துகள் புகழ்பெற்றவை.

> 1996-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா சார்பில் சென்ற குழுவின் உறுப்பினர். இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியிருக்கிறார்.

> ‘பியாண்ட் தி லைன்ஸ்’ என்ற பெயரில் இவர் எழுதிய சுயசரிதை பிரபலமானது. ‘இந்தியா ஆஃப்டர் நேரு’, ‘வால் அட் வாஹா’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.குல்தீப் நய்யர்- 1923-2018

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x