Published : 07 Aug 2018 10:23 AM
Last Updated : 07 Aug 2018 10:23 AM
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.வி. உமா உள்ளிட்டோர் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேடு காரணமாக ஆகஸ்ட் 3 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், உமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 2017 ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற தேர்வில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த 3,02,380 மாணவர்களில் 73,333 மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர்.
16,636 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்குப் பிறகு, அதிக மதிப்பெண் பெற்றனர். மறுமதிப்பீட்டில் தேர்ச்சியடைவதற்காக மாணவர்கள் ரூ.10000 லஞ்சம் வழங்கியதாக எழுந்த புகாரின்பேரில் இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியிட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமாவுடன், உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அதிமுக பலம் 115 ஆகக் குறைந்தது
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 2 அன்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 69. இதையடுத்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆகக் குறைந்துள்ளது. 2016-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் டிடிவி தினகரன் அணிக்குப் பிரிந்து சென்றனர். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 116 ஆனது. திருப்பரங்குன்றம் தொகுதி 2016க்குப் பிறகு மூன்றாம் முறையாகத் தேர்தலைச் சந்திக்க உள்ளது.
சிறந்த நாடாளுமன்றவாதிகள் விருது
2013-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை, நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து நாடாளுமன்றவாதிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 1 அன்று விருதுகளை வழங்கினார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா (2013), மக்களவை உறுப்பினர் ஹுக்கும்தேவ் நாராயண் யாதவ் (2014), மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் (2015), மக்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி (2016), மக்களவை உறுப்பினர் பர்த்ருஹரி மஹதப் (2017) ஆகியோர் சிறந்த நாடாளுமன்றவாதிகள் விருது பெற்றிருக்கின்றனர். சிவ்ராஜ் பட்டேல் 1992-ம் ஆண்டு மக்களவை சபாநாயகராக இருந்தபோது ‘சிறந்த நாடாளுமன்றவாதிகள் விருது’ அறிமுகப்படுத்தப்பட்டது.
எஸ்சி, எஸ்டி மசோதா சட்டத் திருத்தம்
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பழைய அம்சங்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 1 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் மார்ச் 20 அன்று எஸ்சி, எஸ்டி சட்டம், 1989 –ல் இருந்து நீக்கிய அம்சங்களை இணைத்து மீண்டும் நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நீர்த்துபோய்விட்டதாக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் ஆகஸ்ட் 9 அன்று ‘பாரத் பந்த்’ போராட்டம் நடத்த அழைப்புவிடுத்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பிங்கலி வெங்கையாவின் 141வது பிறந்தநாள்
சுதந்திர போராட்ட வீரரும் இந்திய தேசியக் கொடியின் வடிவமைப்பாளருமான பிங்கலி வெங்கையாவின் 141-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 2 அன்று கொண்டாடப்பட்டது. ஆந்திர தேசியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த இவர், 1918-ம் ஆண்டிலிருந்து 1921-ம் ஆண்டு வரை, இந்தியாவுக்கான தனி தேசியக் கொடியின் தேவையைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநாடுகளில் வலியுறுத்திவந்தார். காந்தியின் அறிவுறுத்தலின்படி, 1921-ம் ஆண்டு பிங்கலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார். இவர் வடிவமைத்த கொடிதான், 1931-ம் ஆண்டு சில மாறுதல்கள் செய்யப்பட்ட இந்திய தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1876-ம் ஆண்டு, ஆந்திராவில் பிறந்த இவர், 1963-ம் ஆண்டு மறைந்தார்.
ஜிம்பாப்வே: மீண்டும் அதிபரனார் எமர்சன்
ஜிம்பாப்வே பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரபூர்வமாக ஆகஸ்ட் 3 அன்று அறிவிக்கப்பட்டது . 37 ஆண்டுகளுக்குப் பின், ஜனநாயக முறையில் ஜூலை 31 அன்று அந்நாட்டின் 10 மாகாணங்களுக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு 50.8 சதவீத ஓட்டும் எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசாவுக்கு 44.3 சதவீத ஓட்டும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அதிபராக எமர்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி நிராகரித்துள்ளது.
பூமிக்கு அருகில் செவ்வாய்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியும் செவ்வாய் கிரகமும் ஜூலை 31 அன்று அருகருகே தோன்றின. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வில் 5.76 கோடி கிலோமீட்டர் தொலைவில் பூமியும் செவ்வாயும் சந்தித்துக்கொண்டன. இந்த நிகழ்வு ‘ரத்த நிலா’ நிகழ்வான சந்திர கிரகணத்துடன் இணைந்து நடைபெற்றது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, பூமியும் செவ்வாயும் அருகருகே தோன்றியிருக்கின்றன. இதே போன்று, மீண்டும் 2020 அக்டோபர் 6 அன்று செவ்வாயும் பூமியும் அருகருகே தோன்றவிருக்கின்றன.
டிரில்லியன் டாலர் நிறுவனமானது ஆப்பிள்
அமெரிக்காவின் முதல் டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் ஆகஸ்ட் 2 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 அன்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 2.8 சதவீதம் உயர்ந்தது. இதனால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 9 சதவீதம் லாபம் கிடைத்தது. பங்குச்சந்தையில் எதிர்பார்த்ததைவிட அந்நிறுவனத்தின் பங்குகள் அதிகமான லாபத்தை ஈட்டியதால் ஜூன் காலாண்டில் தனது 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளைத் திரும்ப வாங்கியிருக்கிறது. 1976-ம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT