Published : 14 Aug 2018 10:37 AM
Last Updated : 14 Aug 2018 10:37 AM
கேட்டாரே ஒரு கேள்வி
“அவருக்கென்ன tip-top-ஆ இருப்பார். அவருக்கென்ன tip-top-ஆ டிரஸ் பண்ணிக்கிறார்” என்றெல்லாம் என் தாத்தா கூறக் கேட்டிருக்கிறேன். Tip-top என்பதற்குச் சரியான பொருள் என்ன? பென்சிலின் கூரான முனையைக்கூட tip-top என்று கூறலாமா?”
*************
Poetic license என்றால் என்ன?
ஒரு மொழிக்கு என்று மரபு சார்ந்த இலக்கணம் இருக்கும். ஓர் அழுத்தம் கொடுப்பதற்காகவோ வேறு சில காரணங்களுக்காகவோ அதிலிருந்து ஒரு கவிஞர் மாறுபட்டு எழுதுகிறார் என்றால் அதை Poetic license என்பார்கள்.
*************
Same here என்றால் என்ன பொருள்?
நானும்தான். அல்லது எனக்கும்தான் என்று பொருள். அதாவது இது ஒத்துப்போவதைக் குறிக்கிறது. “I will have Poori” என்று நண்பன் கூற “Same here” என்று நீங்கள் பூரிப்புடன் கூறினால் இருவருமே அந்த ஹோட்டலில் பூரிக்கு ஆர்டர் கொடுக்கப் போகிறீர்கள் என்று பொருள்.
*************
Tip-top ஆன கேள்வியைக் கேட்ட ‘கே.ஒ.கே.’ வாசகரே, tip-top என்றால் மிக உயர்ந்த தன்மை கொண்ட என்று பொருள். Messi is in tip-top condition என்றால், அந்தக் கால்பந்து வீரர் நல்ல ‘ஃபார்மில்’ இருக்கிறார் என்று பொருள். In spite of his old age, he is in tip-top shape.
Tip-top என்பதை பெயர்ச்சொல்லாகப் (noun) பயன்படுத்தும்போது பென்சிலின் கூரான முனையையோ மலையின் உயரமான உச்சத்தையோ அது குறிப்பதில் தவறில்லை.
*************
“பிறரை அவர்களது குறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்பதில் குறைகள் என்பதற்குப் பொருத்தமான சொல் எது?
Flaws, drawbacks, handicaps, deficiencies, faults என்று பல சொற்கள் உண்டு. எனினும், ஆங்கிலத்தில் வேறொரு பயன்பாடு இருக்கிறது. “People must be accepted, warts and all”.
Wart என்ற சொல்லைத் தனியாகப் பயன்படும்போது அதற்குப் பொருள் மரு. இதைப் பேச்சு வழக்கில் பாலுண்ணி என்றும் கூறுவதுண்டு.
Warts and all என்றால் ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையையும் உள்ளடக்கியது என்று பொருள்.
*************
“A father beats up his son because he was drunk. இதில் குடித்திருப்பது யார் அப்பாவா, பிள்ளையா என்று சந்தேகம் வருகிறது. வாக்கியத்தை எப்படி அமைத்திருக்கலாம்?” என்று கேட்கிறார் வாசகர் ஒருவர்.
மதுவின் வசப்பட்டது அப்பா என்றால் ‘he’ என்பதற்கு பதிலாக The former என்று குறிப்பிடலாம். குடித்திருப்பது மகன் என்றால் “he” என்பதற்கு “the latter” என்று குறிப்பிடலாம்.
Former என்றால் வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் இருவரில் அல்லது முதலில் குறிப்பிடப்பட்டவர் அல்லது இரண்டில் முதலில் குறிப்பிடப்பட்டிருப்பது என்று பொருள். Latter என்றால் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர் அல்லது இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டது என்று பொருள்.
பொதுவாக, குடித்திருக்கும் மகனை அப்பா அடிப்பதுதான் இயல்பு. A father beats up his son because the son was drunk என்றும் வாக்கியத்தை அமைக்கலாம். அதாவது ஒரு சொல்லில் ஒரு pronoun-க்குப் பதிலாக மீண்டும் noun-ஐயே பயன்படுத்தலாம்.
*************
Moral - Morale
Moral-morale என்பதற்கு உள்ள வேறுபாடு என்ன எனக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர் .
Moral என்றால் ஒழுக்கநெறி தொடர்பான என்று பொருள். Moral story என்றால் அந்தக் கதை ஒரு படிப்பினை என்று பொருள். காக்கா-வடை-நரிக் கதையின் moral- ‘தன்வினை தன்னைச் சுடும்’ அல்லது ‘நீ ஏமாற்றினால் ஏமாற்றப்படுவாய்’ என்பது.
Morale என்றால் ஒரு நபருக்கோ ஒரு குழுவுக்கோ இருக்கக்கூடிய தன்னம்பிக்கையும் உற்சாகமும். The morale of our hockey team is very high.
Moral என்பதை ‘மார்ல்’ என்றும், morale என்பதை ‘மொரால்’ என்றும் உச்சரிக்க வேண்டும். (என்ன காரணத்தாலோ இவற்றை முறையே மாரல், மொரேல் என்று கூறிப் பழகிவிட்டோம்).
தொடக்கம் இப்படித்தான்
‘Know which side your bread is buttered’ என்று ஒரு சொலவடை உண்டு. உங்களுக்கு ஒரு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் யாரை அணுக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இது ஒருஇட்டிஷ் (Yiddish) நாடோடிக் கதையை அடிப்படையாகக் கொண்டது. (ஜெர்மனியில் ஒரு பிரிவு யூதர்களால் பேசப்படும் மொழி இட்டிஷ்).
போலந்தில் உள்ள ஒரு நகரம் செல்ம் (Chelm). அங்குள்ள மக்கள் மிக மிக முட்டாள்களாக இருந்தார்கள் (பல ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று இப்படிக் கேவலமாகச் சித்தரிக்கும் பழக்கம் கொண்டவை.) நாம் மட்டும் என்ன யோக்கியம், சர்தார்ஜிக்களின் முட்டாள்தனம், செளகார்பேட்டைவாசிகளின் பேச்சுத் தமிழ் அவலம் என்று பல விதங்களில் கிண்டலடிக்கவில்லையா?.
ஒரு நாள் செல்ம் நகரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் தன் கையிலிருந்த ஒரே ஒரு ரொட்டித் துண்டைக் கை தவறிக் கீழே போட்டு விட்டார். அந்த ரொட்டித் துண்டின் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவப்பட்டிருந்தது.
கீழே விழுந்த ரொட்டியின் வெண்ணெய் தடவப்பட்ட பகுதி மேற்புறம் இருந்தது. அனுபவபூர்வமாகப் பார்த்தால் வெண்ணெய் தடவப்பட்ட பக்கம்தான் சாலையை முத்தமிடும் பக்கமாக இருந்திருக்க வேண்டும் (Murphy’s law). பின் எப்படி? இது குறித்து அந்த நகரின்‘அறிஞர்கள்’ கூடி விவாதித்தார்கள். ஒரு வாரம் கழித்துத் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிட்டார்கள். “ரொட்டித் துண்டின் தவறான பக்கத்தில் வெண்ணெய் தடவப்பட்டுள்ளது’’.
சிப்ஸ் # ‘டப்பா அடிப்பது’ என்று பள்ளிப் பருவத்தில் சொல்வார்களே, அதற்கு ஆங்கிலத்தில்? மனப்பாடம் செய்து மட்டுமே கற்றுக்கொள்வதை rote learning என்பார்கள். # பார்த்து நாளாச்சே என்பதை ஆங்கிலத்தில் பேச்சு வழக்கில் எப்படிச் சொல்லலாம்? Long time no see (சிதைக்கப்பட்ட இலக்கணம். என்றாலும் பேச்சு வழக்கில் இது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது). # வருடத்துக்கு இருமுறை, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை - ஆங்கிலத்தில் இவற்றை எப்படிக் குறிப்பிடலாம்? Bi-annual - ஆண்டுக்கு இருமுறை, Biennial - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை |
தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT