Last Updated : 03 Jul, 2018 09:53 AM

 

Published : 03 Jul 2018 09:53 AM
Last Updated : 03 Jul 2018 09:53 AM

வெற்றி முகம்: சவாலும் சிக்கலும் மகிழ்ச்சியே! - வாகனத் தொழிற்துறையின் முதல் பெண் சி.எஃப்.ஓ.

‘எப்போதெல்லாம் ஒரு பெண் ‘C-Suite’ நிலையை அடைகிறாளோ, அப்போதெல்லாம் அத்தருணம் கொண்டாடப்பட வேண்டும்’. அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (சி.எஃப்.ஓ.), சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திவ்யா சூர்யதேவாரா வெளிப்படுத்திய பெருமிதம் இது.

இந்த 39 வயது சென்னைப் பெண் கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்ததற்கு இன்னும் காரணங்கள் உள்ளன. 110 வயதை எட்டியிருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக உயர்ந்திருக்கும் முதல் பெண் இவர். சொல்லப்போனால் வாகனத் தொழிற்துறையில் இந்தப் பதவியை ஏற்றிருக்கும் முதல் பெண்ணும் இவர்தான். அது மட்டுமின்றி ‘ஃபார்ச்சூன்’ வணிக இதழின் ‘உலகின் முன்னணி 500 நிறுவனங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி ஆகிய இரண்டு பொறுப்புகளையும் பெண்களே வகிக்கும் இரண்டு நிறுவனங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று.

திவ்யா என்ற ஆளுமை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முதுநிலை பட்டப் படிப்பை முடித்த பிறகும் திவ்யாவுக்கு வாகனத் தொழிற்பிரிவில் ஈடுபடும் எண்ணம் இருந்திருக்கவில்லை. அவருடைய தந்தையின் திடீர் மரணமும் தாயின் உழைப்பும் அவருக்குக் கற்றுத் தந்த பாடம்: சவால்களையும் சிக்கல்களையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளவேண்டும்!

கல்விக் கடன் பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு வணிகப் பள்ளியில் 22 வயதில் எம்.பி.ஏ. படிப்பை மேற்கொண்டார். ஆரம்பத்தில் மன அழுத்தத்தாலும் அமெரிக்காவின் கலாச்சாரத்துடன் ஒன்ற முடியாமலும் தத்தளித்தார். ஆனால், 2002-ல் உலக வங்கியில் பணிப்பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்த பிறகு, தனக்குள் இருக்கும் அபாரமான திறமையைக் கண்டுணர்ந்தார்.

divyaright

25 வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தபோது, அமெரிக்காவை வாய்ப்புகள் கொழிக்கும் தேசமாகத் துல்லியமாகப் புரிந்துகொண்டார். பணியில் சேர்ந்த ஒன்பது ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் சொத்து மேலாண்மைப் பிரிவின் தலைமை முதலீட்டு அதிகாரியாகவும் முன்னேறினார்.

2015-ல் அந்நிறுவனத்தின் பொருளாளர், நிதித் துறையின் துணைத் தலைவர் (vice president) ஆகிய இரண்டு பதவிகளையும் வகித்தார். அதுவும் ஒரே நேரத்தில் நியூயார்க் நகரத்துக்கும் டெட்ராய்ட் நகரத்துக்கும் சேர்த்து பொறுப்புகள் தரப்பட்டன.

இதனால் வாரந்தோறும் 1,500 கிலோ மீட்டரைக் கடந்து இங்கும் அங்குமாகப் பயணித்துத் தன் பணிகளைத் திறம்பட நிர்வகித்தார். அப்போதுதான் திவ்யா என்கிற ஆளுமையை வாகனத் தொழில் உலகம் அடையாளம் காணத் தொடங்கியது. ‘ஃபார்ச்சூன்’ இதழின் 2015-ம் ஆண்டின், ‘40 under 40 list’ என்ற வர்த்தகத்தில் செல்வாக்கு மிகுந்த இளைஞர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் திவ்யா.

2017-ல் கார்ப்பரேட் நிதிப் பிரிவின் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இன்று திவ்யா அடைந்திருப்பது பணிவாழ்க்கையின் அடுத்த முகடு மட்டும்தான். அதை உணர்ந்த அமைதி அவரிடம் உள்ளது. அடுத்து, சிகரத்தை நோக்கி இடைவிடாது பயணித்துக்கொண்டிருக்கிறார் இந்தச் சாதனைப் பெண்.

‘C-Suite’ அல்லது ‘C-Level’ என்பது தலைமை செயலதிகாரி (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO), தலைமை இயக்க அதிகாரி (COO), தலைமை தகவல் அதிகாரி (CIO) உள்ளிட்ட தலைமை பொறுப்பு நிலைகளைக் குறிக்கும் அமெரிக்கப் பதமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x