Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

வரலாறு தந்த வார்த்தை 31: மரணத்தை ‘உதை’த்தவர்கள்..!

டந்த ஒரு மாதமாக ரசிகர்களைக் குதூகலிக்க வைத்த ‘ஃபிஃபா’ உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்துப் போட்டி, எத்தனையோ விஷயங்களுக்காக நினைவுகொள்ளப்பட்டாலும், அந்த விளையாட்டுடன் தொடர்புடைய இன்னொரு சம்பவமும் வரலாற்றில் வரவு வைக்கப்படும். தாய்லாந்து குகைக்குள் 17 நாட்கள் மாட்டிக்கொண்ட கால்பந்து விளையாட்டு ‘வீர’ சிறுவர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம்தான் அது!

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டது ஒரு புறம் சந்தோஷம் என்றாலும், இன்னொரு புறம் அவர்களை மீட்கச் சென்ற மீட்புப் பணி வீரர் ஒருவர் உயிரிழந்தது, பரிதாபகரமானது. ஆனால் பரிதாபப்படத் தேவையில்லை. ஏனென்றால், அவர் ‘Kicked the bucket..!’

இறப்பிலிருந்து ஒரு பிறப்பு

முன்பெல்லாம், ஒருவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்தால் தங்களிடம் இருக்கும் வாளியைக் கவிழ்த்துப் போட்டு, அதன் மேல் ஏறி நின்று, தூக்குப் போட்டுக்கொள்வார்கள். கயிறு, அவர்களின் கழுத்தை இறுக்கும்போது, அவர்கள் தங்களின் கால்களை வேகமாக உதைப்பார்கள். அப்போது கீழிருக்கும் வாளியில் அவர்களது கால்கள் படும். அதைப் பார்ப்பதற்கு, அவர்கள் வாளியை உதைப்பது போலத் தோற்றம் தரும். இதிலிருந்துதான் ‘கிக் தி பக்கெட்’ (kick the bucket) என்ற சொற்றொடர் பிறந்தது. அதாவது, இறப்பிலிருந்து ஒரு பிறப்பு!

பல காலத்துக்கு, தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களை ‘அவர் இறந்துவிட்டார்’ என்று நேரடியாக, அமங்களமாகச் சொல்வதற்குச் சங்கடப்பட்டு, நாசுக்காக ஆங்கிலத்தில் சொல்வதற்கு மேற்கண்ட சொற்றொடரைப் பயன்படுத்தி வந்தார்கள். உதாரணத்துக்கு, He/She kicked the bucket. காலப்போக்கில், எதிர்பாராதவிதமாக இறப்பவர்கள், நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள் ஆகியோரைப் பற்றிச் சொல்வதற்கும் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினார்கள்.

பாராட்டியே ஆக வேண்டும்

இந்தச் சொற்றொடர் பிறந்ததற்கு வேறு ஒரு வரலாறும் சொல்லப்படுகிறது. அதாவது, 16, 17-ம் நூற்றாண்டுகளில், இறந்தவர்களின் கால்களுக்குப் பக்கத்தில் ஒரு வாளியில் புனித நீர் வைத்திருக்கும் வழக்கம், கத்தோலிக்க தேவாலயங்களில் பின்பற்றப்பட்டது. அந்தத் துக்க நிகழ்வுக்கு வருபவர்கள், அந்த வாளியிலிருந்து சிறிது நீரை எடுத்து, இறந்தவரின் உடல் மீது தெளித்துவிட்டுப் போவார்களாம்.

தான் செய்ய விரும்புகிற பணிகள் என்று எல்லோருக்கும் ஒரு பட்டியல் இருக்கும். அதை ஆங்கிலத்தில் ‘பக்கெட் லிஸ்ட்’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. அந்தச் சொற்றொடரும்கூட ‘கிக் தி பக்கெட்’ என்ற சொற்றொடரிலிருந்து பிறந்ததுதான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

‘நாங்கள் அந்தச் சிறுவர்களைப் பத்திரமாக மீட்போம்’ என்று, தான் மீட்புப் பணிக்குச் செல்வதற்கு முன் சொன்ன அந்த வீரரின் ‘பக்கெட் லிஸ்ட்’ நிறைவேறியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் நிஜமாகவே அவர் ‘கிக்டு தி பக்கெட்’தான்!

மேலும், 17 நாட்கள், உணவில்லாமல், குடும்பத்தினரைப் பிரிந்து, துணிவுடன் மரண பயத்தைப் பந்தாக இல்லாமல், ‘பக்கெட்’ ஆக்கி, ‘உதை’த்திருக்கும் அந்தச் சிறுவர்களையும் அவர்களுடைய பயிற்சியாளரையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x