Published : 24 Jul 2018 10:33 AM
Last Updated : 24 Jul 2018 10:33 AM
அடிப்படைவசதி, கல்வி, பொருளாதார நிலை இப்படி எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு நம்மால் முடிந்த திறன்களைச் சொல்லிக் கொடுப்போம் என்னும் நோக்கத்தோடு, ‘பயணம்’ அறக்கட்டளையை பாஸ்கர், விநோத் உள்ளிட்ட சில நண்பர்கள் கடந்த 2012-ல் தொடங்கினர்.
“இந்தச் சமூகத்திலிருந்து நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை விளிம்புநிலை குடும்பங்களில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்குத் தருவதற்காக எங்களின் பயணத்தைத் தொடங்கினோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக திருநீர்மலையை அடுத்துள்ள வழுதலம்பேடு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி, விளையாட்டு, தனித் திறன் பயிற்சிகளை வழங்கிவருகிறோம்” என்கிறார் பயணம் அமைப்பின் நிறுவனர் பாஸ்கர்.
கதைசொல்லி மாணவர்கள்
பள்ளிப் பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பது, ஓவியம், நடனம், இசை போன்ற கலைகளில் அவர்களின் திறனை வளர்ப்பது, சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தைப் புரியவைப்பது, கணினிப் பயிற்சி, கதைகளைக் கேட்பதோடு மாணவர்களையே கதைசொல்லிகளாக மாற்றுவது போன்ற பல்வேறு பணிகளைச் செய்கிறது இந்த அமைப்பு.
அதுமட்டுமின்றி, மாணவர்களின் பல்வேறு கலைத் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்திப் பரிசளிப்பது, ஆங்கிலம் பேசுவதற்கு ஏற்படும் தயக்கத்தைப் போக்குவது, மாணவர்கள் விரும்பும் பல்வேறு விதமான விளையாட்டுகளில் அந்தந்த விளையாட்டு நிபுணர்களைக் கொண்டே பயிற்சி அளிப்பது, பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளை அடிக்கடி நடத்துவதன்மூலம் அவர்களுக்கு இடையே பாலமாக இருப்பது என இவர்களுடைய பணி நீள்கிறது.
இதுதவிர, ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குத் தேவைப்படும் சமையல் பொருட்களையும் வாங்கித் தருகின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டுமே கொண்டிருக்கும் 30 குழந்தைகளின் கல்விக் கட்டணங்களை இவர்கள் செலுத்திப் படிக்கவைக்கின்றனர். “எங்களின் உதவியோடு படித்துப் பட்டம் வாங்கித் தற்போது பணியில் இருப்பவர்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் பாஸ்கர்.
இணைந்த கைகள்
நான்கு ஐந்து நபர்களால் தொடங்கப்பட்ட பயணம், சீரிய செயல்பாட்டின் மூலமாக அடுத்தடுத்துக் கல்லூரி மாணவர்களை ஈர்த்து, அவர்களையும் இந்தப் பணியில் கைகோக்க வைத்திருக்கிறது. தற்போது 40-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சேவைப் பயணத்தில் தன்னார்வலர்களாக இணைந்திருக்கின்றனர்.
மாற்றுத் திறனாளி மாணவர்களின் விருப்பமான விளையாட்டுகளில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறார்கள். இதன்மூலம் அவர்களின் போராட்டக் குணமும் தன்னம்பிக்கையும் எவருக்கும் சளைத்தது இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துகிறார்கள். மரம் நடும் பணியிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவர்களால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்படியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இவர்களால் நடப்பட்டிருக்கின்றன.
தொடர்புக்கு: 9941169610
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT