Published : 03 Jul 2018 09:53 AM
Last Updated : 03 Jul 2018 09:53 AM

கால்பந்துக் கடவுள்

டீ

கோ மரடோனா - அர்ஜென்டினாவின் கால்பந்துக் கடவுள். மெக்சிகோவில் 1986-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா கோப்பை வெல்லக் காரணமாக இருந்தவர் மரடோனா. அந்த போட்டித் தொடர் முழுக்க ‘எல் டீஸ்’ (எண் 10) என்ற ஜெர்சியின் ஆட்டம் உயரப் பறந்தது.

குறுக்கிட்ட கடவுளின் கை

அர்ஜென்டினா-இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியின் இரண்டாவது பாதி. மேலிருந்து தன்னை நோக்கி வந்த பந்தை இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன் தடுக்க முயற்சித்தார். அப்போது, ஷில்டனைத் தாண்டி கோல் போஸ்ட்டை நோக்கி மரடோனா கையால் பந்தைத் தள்ளிவிட்டார். அன்றைய அர்ஜென்டினா அணியில் மிகவும் குட்டையானவர் மரடோனா (5 அடி 4 அங்குலம்). பொதுவாக தலையால் பந்தை முட்டும் ‘ஹெட்டர்’ உத்தியை உயரமான வீரர்களே சிறப்பாகக் கையாள முடியும்.

03CHVAN_diego-maradona.jpg கோப்பையுடன் மரடோனா

மரடோனாவின் கை பந்தைத் தள்ளியதை தூனிசிய நடுவர் அலி பின் நாசர் பார்க்காமல் போனதால், அதை கோல் என அங்கீகரித்துவிட்டார். இதற்கு இங்கிலாந்து வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“பந்தை என் தலையாலும் சிறிதளவு கடவுளின் கையாலும் தொட்டேன்” என்று மரடோனா பின்னர் குறிப்பிட்டார். அது ‘கடவுளின் கை பட்ட கோல்’ என்று வரலாற்றில் பதிவானது. திறமை மிகுந்த கால்பந்து வீரரான மரடோனாவின் இந்தச் செயல்பாடு, தந்திரமாகக் கருதப்படலாம். ஆனால், அது தவறான முடிவாகவே அமையும்.

நூற்றாண்டின் சிறந்த கோல்

சர்ச்சைக்குரிய அந்த கோலுக்கு நான்கு நிமிடங்கள் கழித்து, மரடோனா இட்ட கோல் கடந்த நூற்றாண்டின் சிறந்த கோலாக ஃபிஃபா நடத்திய ஓட்டெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐந்து இங்கிலாந்து வீரர்களைத் தாண்டி கிட்டத்தட்ட 200 அடி தொலைவுக்குத் தனியாகவே பந்தை நகர்த்திச் சென்று மரடோனா அடித்த கோல் அது. பெல்ஜியத்துக்கு எதிரான அரையிறுதியில் மரடோனா 2 கோல்கள் அடித்தார்.

அர்ஜென்டினாவின் துருப்புச்சீட்டான மரடோனாவின் ஆதிக்கத்தை இறுதிப் போட்டியில் கட்டுப்படுத்துவதில் மேற்கு ஜெர்மனி குறியாக இருந்தது. ஆனாலும் முதல் இரண்டு கோல்களை அடித்து அர்ஜென்டினா வெற்றியை நெருங்கி இருந்தது. ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருந்தபோது ஜெர்மனி கோல்களை சமன் செய்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மரடோனா பந்தை நகர்த்திச் செல்ல, புருசகா கோல் ஆக்கியதால் அர்ஜென்டினா கோப்பையைத் தட்டிச் சென்றது. மரடோனாவின் தனிப்பட்ட திறமையே அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த வெற்றிக்குக் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x