Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM
ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய இளம் தலைவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பெருமையைப் பெற்ற துபாய் வாழ் இந்தியரான சாரா இக்பால் அன்சாரி, மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் பிறந்தவர். சமீபத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் துபாயிலும் பல்வேறு நாடுகளிலும் நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக் கருத்தரங்குகளிலும் பங்குபெற்றிருக்கிறார்.
சிக்கலான கணிதப் புதிர்களை விடுவிக்கும் மனக் கணிதத் திறன் மேம்பாட்டு தேர்வான அபாகஸ் (ABACUS)-ஐ முடித்த பட்டதாரி என்ற சிறப்பையும் இந்தச் சிறுவயதிலேயே பெற்றுள்ளார். இந்தப் பயிற்சியை மலேசியாவில் உள்ள யூ.சி.மாஸ் (UCMAS) நடத்துகிறது. குழந்தைகளின் நினைவுத் திறன், வேகமான சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குக் கொடுக்கப்படும் பயிற்சி இது.
பன்முகம் கொண்ட தாரகை
“ஓவியம் வரைவதும் விவாதங்களில் கலந்துகொள்வதும் இயற்பியலும் எனக்கு விருப்பமானவை” என்று கூறும் சாரா தற்போது துபாயில் உள்ள மில்லெனியம் பள்ளியில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஓவியப் பாடங்களைப் பிரதானமாகப் படித்து வருகிறார். குவாண்டம் இயற்பியலாளராகும் விருப்பம் இவருக்கு உள்ளது. ஆனாலும், காலப்போக்கில் எது தன்னை ஈர்க்கிறதோ, அதில் பணியாற்ற விரும்புவதாகக் கூறுகிறார். அவரது கனவுகள், லட்சியங்கள் குறித்து மேலும் கேட்டபோது, குழந்தைத்தனமும் சேர்ந்தே வெளிப்படுகிறது. “ஓவியர், பேராசிரியர், அவ்வளவு ஏன் ஐ.நா. தூதுவராககூட ஆகலாம்” என்கிறார்.
பல்வேறு ஓவியத் தொழில்நுட்பங்களில் திறன் பெற்றிருக்கும் சாரா, எம்பிராய்டரி, தாள் வடிவமைப்புக் கலை (quilling)-ல் ஈடுபாடு மிக்கவர். தனது திறன்களைக் கொண்டு இலங்கை, இந்தியா, ஐக்கிய அராபிய எமிரேட் நாடுகளுக்குச் சென்று வசதி வாய்ப்பற்றவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். நீச்சலிலும் வல்லவர்.
இந்தியாவில் பெண்கல்வி
“மாதிரி ஐக்கிய நாடுகள் சபை கருத்தரங்குகளில் பங்கேற்பதை நான் மிகவும் விரும்புகிறேன். பொது மேடை உரை, விவாதங்களைக்கொண்ட நிகழ்ச்சிகளாக அவை இருக்கும். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குப் போகிறேன். ஹார்வர்டில் நடைபெற இருக்கும் மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக் கருத்தரங்கிலும் பங்குபெற உள்ளேன். ஹார்வர்டுதான் மற்ற மாதிரி ஐக்கிய நாடுகள் கருத்தரங்குகளின் தொடக்கமும் மையமுமாகும்” என்கிறார்.
இந்தியா பற்றி மிகவும் கவனத்துடனேயே பேசுகிறார். “நான் இந்தியாவில் நீண்டகாலம் இருந்ததில்லை. குடும்ப உறவினர்களும், தாத்தா, பாட்டியும் சொன்னதன் வழியாகத்தான் தெரியும். இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் சிறப்பு என்று தெரியும். ஆனால், தற்போதைய இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறதென்று தெரியாது. அடுத்த முறை இந்தியாவுக்குச் செல்லும்போது மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்கிறார்.
பண்புமிக்கக் குடும்பச் சூழலில் வளர்ந்த சாரா, கல்வியைப் பொறுத்தவரை இளமைக்காலம் மிக முக்கியமான பங்கு வகிப்பதாகக் கூறுகிறார். “உலகின் அனைத்துச் சமூகங்களும் கல்வி மூலமாகவே முன்னேறியிருக்கின்றன. இந்தியாவில் கல்வியறிவு விகிதத்தைப் பார்க்கும்போது பெண் கல்வி மோசமான நிலையில் உள்ளதென்று தெரிகிறது. உயர்நிலைப் பள்ளி அளவிலும் கல்லூரியிலிருந்தும் மாணவர்கள் இடைநிற்கும் விகிதம் அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதுபோன்ற நிலைமைகள் ஆரோக்கியமற்ற சமூகத்தையே உருவாக்கும்” என்கிறார்.
சர்வதேசியம், ஜனநாயகம், சுற்றுச்சூழலியல், சாகசம், தலைமைத்துவம், சமூகச் சேவை என ஆறு அம்சங்களை வைத்து உலகப் பள்ளிகளை இணைக்கும் இங்கிலாந்து அமைப்பான ரவுண்ட் ஸ்கொயர் அமைப்பின் உறுப்பினர் இவர். 15 வயதுக்குள் அவர் வாங்கிய விருதுகளும் பெற்ற வெற்றிகளும் நீளமானவை.
“பணிகளில் கடினமாகத் தொடர்ந்து ஈடுபடுவதுடன், நமது குறிக்கோள்களில் கவனத்துடன் இருந்தால் வெற்றிபெறுவதை யாரும் தடுக்கவே முடியாது” என்கிறார் சாரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT