Last Updated : 19 Jun, 2018 10:49 AM

 

Published : 19 Jun 2018 10:49 AM
Last Updated : 19 Jun 2018 10:49 AM

சேதி தெரியுமா? - 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

அதிமுகவின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை ஜூன் 14 அன்று வழங்கினர். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இதில், இந்திரா பானர்ஜி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது. இந்தத் தீர்ப்பால், தமிழக சட்டப்பேரவையில் முன்பிருந்த நிலையே நீடிக்கவிருக்கிறது.

 

ராஜீவ் வழக்கு: விடுதலை மனு நிராகரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூன் 15 அன்று நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனைக் கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவைக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே நிராகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும்’

‘நிதி ஆயோக்’ (NITI AAYOG) அமைப்பு, ‘கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை’ (Composite Water Management Index) ஜூன் 14 அன்று வெளியிட்டது. இந்தியா கடும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன், நாட்டின் தண்ணீர் பிரச்சினை இதே விதத்தில் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

19 நாட்கள் நாடாளுமன்றம் வந்த மோடி

நான்கு ஆண்டுகளில், 19 நாட்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றம் வருகைதர உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூன் 12 அன்று பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார்.

அத்துடன், சிலமுறையே மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் பாஜகவின் 800-க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

19CHGOW_SHUJAAT_காஷ்மீர்: பத்திரிகை ஆசிரியர் கொலை

ஸ்ரீநகரில் ‘ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஜூன் 14 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 50. லால் சவுக்கில் நடக்கவிருந்த இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வதற்காக அவர் சென்றபோது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஷுஜாத் புகாரியின் தனிப் பாதுகாப்பாளரும் கொல்லப்பட்டார்.

காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நாடு முழுவதுமுள்ள பத்திரிகையாளர்கள் ஷுஜாத் புகாரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். காஷ்மீரின் அமைதிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த மூத்த பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி கொலை செய்யப்பட்டிருப்பதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

டிரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று சந்தித்துப் பேசினர். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை உலக நாடுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு என வரவேற்றிருக்கின்றன. இந்தச் சந்திப்பில், “கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத கைவிடலுக்கு” ஒப்புக்கொள்வதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்புதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியிருக்கிறார். இது தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்த மாநாடு வெற்றிபெற்றதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றிருக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ரஷ்யா வருமாறு வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்.
 

19CHGOW_CHINA_INDIArightசீன அதிபருடன் மோடி சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாடு சீனாவின் குயிங்தாவோ நகரில் ஜூன் 9 அன்று தொடங்கியது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 10 அன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில், இரண்டு தலைவர்களும் சந்திக்கும் 14-வது சந்திப்பு இது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளான உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டு அதிபர்களையும் பிரதமர் மோடிச் சந்தித்து பேசினார். மாநாட்டின் இறுதியில் குயிங்தாவோ ஒப்பந்தம் கையெழுத்தானது.

11-வது உலக இந்தி மாநாடு

11-வது உலக இந்தி மாநாடு மொரிசியஸில் ஆகஸ்ட் 18 முதல் 20 வரை நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த மாநாட்டுக்காக ‘இந்தி உலகமும் இந்தியக் கலாச்சாரமும்’ என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் இந்தி மொழி அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக இந்தி மாநாட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்துகிறது. 10-வது உலக இந்தி மாநாடு, 2015-ம் ஆண்டு போபாலில் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x