Last Updated : 12 Jun, 2018 10:36 AM

 

Published : 12 Jun 2018 10:36 AM
Last Updated : 12 Jun 2018 10:36 AM

ஓர் உலகக் கோப்பையின் பயணம்!

லகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி தொடங்க இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் போட்டியைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்தத் தருணத்தில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் வரலாற்றை அறிவோமா?

சங்கத்தோடு தோன்றிய போட்டி

1863-ம் ஆண்டு கால்பந்து சங்கம் தொடங்கியதில் இருந்துதான் சர்வதேசக் கால்பந்து விளையாட்டு போட்டிகளின் வரலாறும் தொடங்குகிறது. இந்தச் சங்கம்தான் கால்பந்து விளையாட்டுக்கான விதிகளை உருவாக்கியது. இந்த அமைப்பு தோன்றிய பிறகு 9 ஆண்டுகள் கழித்து முதல் சர்வதேசக் கால்பந்து போட்டி 1872-ல் நடைபெற்றது.

கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் மோதின. தொடக்கக் காலத்தில் இங்கிலாந்து உட்படப் பிற ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அமைப்புகள் மூலம் தொடர்ந்து கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றுவந்தன. 1900, 1904 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்கூடப் பதக்கம் வழங்கப்படாத பிரிவுகளில் கால்பந்து விளையாட்டும் இடம்பெற்றிருந்தது.

julies remid ஜூல்ஸ் ரிமெட் கோப்பை

இன்று உலகக் கோப்பையை முன்னின்று நடத்தும் சர்வதேசக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிபா) 1904-ல் முறைப்படி உருவானது. அந்தக் காலகட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்காத கால்பந்து அமைப்புகளுக்காகக் கால்பந்து தொடரை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு 1914-ல் அப்படியான ஒரு தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரை ‘உலகக் கால்பந்து’ போட்டி என ‘ஃபிபா’ அங்கீகரித்தது.

88 ஆண்டு காலக் கதை

இதைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியைத் தாண்டி சர்வதேசக் கால்பந்து தொடரை நடத்த அன்றைய ஃபிபா தலைவர் ஜூல்ஸ் ரிமெட் முயன்றார். பல கட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, அன்றைய சாம்பியன் நாடான உருகுவேயில் முதல் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்த ஃபிபா முடிவு செய்தது. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு உலக விளையாட்டு ரசிகர்களை ஓரிடத்தில் கட்டிப்போடும் போட்டியாக உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி உருவெடுத்திருக்கிறது.

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் 13 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இறுதியாட்டத்தில் உருகுவேயும் அர்ஜெண்டினாவும் மோதின. 4-2 என்ற கோல் கணக்கில் வென்று முதல் உலகக் கோப்பையை வசப்படுத்தியது உருகுவே. 1934-ல் இத்தாலியிலும், 1938-ல் பிரான்சிலும் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்றன.

அதன் பின்னர் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், 12 ஆண்டுகள் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடத்தப்படவேயில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் 1950-ல் பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. பல நாட்டு அணிகள் பங்கேற்பது பற்றிய விதிமுறை அப்போதுதான் அமல்படுத்தப்பட்டது.

இதுவரை நடைபெற்றுள்ள 20 உலகக் கோப்பைகளில் அதிகபட்சமாகக் கோப்பையை வென்ற நாடு பிரேசில். 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருக்கிறது பிரேசில் அணி. உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய மற்ற இரு அணிகள் இத்தாலியும், ஜெர்மனியும். இதில் இத்தாலி அணி 1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றது.

ஜெர்மனி அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் வென்றது. அர்ஜெண்டினா (1978, 1986), உருகுவே (1930, 1950) ஆகிய நாடுகள் இருமுறை கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து (1966), பிரான்ஸ் (1998), ஸ்பெயின் (2010) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றிருக்கின்றன. இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதற்காக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் அடுத்த ஒரு மாதம் காத்திருப்பார்கள்! 

தங்கக் கோப்பை

உலகக் கோப்பையில் மூன்று முறை கோப்பையை வெல்லும் நாட்டுக்கு நிரந்தரமாக கோப்பை வழங்குதை அப்போது வழக்கமாக வைத்திருந்தார்கள். இதன்படி 1970-ல் மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற பிரேசில் அணிக்கு ‘ஜூல்ஸ் ரிமெட் கோப்பை’ வழங்கப்பட்டது. இதன்பின் 1974-ல் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக இத்தாலிக் கலைஞர் சில்வியோ கஸ்ஸானிகா வடிவமைத்த கோப்பைதான் இப்போதைய கோப்பையின் தோற்றம்.

முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்தக் கோப்பை, 36 செ.மீ. உயரமும் 4.9 கிலோ எடையும்கொண்டது. 2038-ம் ஆண்டுவரை நடைபெறும் உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களைக் கோப்பையில் பொறிக்க முடியும். இக்கோப்பை சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பிடமே இருக்கும். வெற்றி பெறும் அணிக்குத் தங்கமுலாம் பூசப்பட்ட பிரதிதான் வழங்கப்படுகிறது.

உலகக் கோப்பைத் துளிகள்

Miroslav Klose மிரோஸ்லாவ் குளோஸ் right# அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களுக்குத் தங்கக் காலணி வழங்கும் முறை 1930-ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது.

# நாகரிகமாக விளையாடும் அணிகளுக்கு வழங்கப்படும் சிறந்த அணிக்கான விருது 1978-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

# மெக்சிகோவைச் சேர்ந்த அன்டனியோ கர்பயால், ஜெர்மனியைச் சேர்ந்த லோதர் மாட்டாஸ் ஆகியோர் தலா 5 முறை உலகக் கோப்பையில் விளையாடியிருக்கின்றனர்.

# உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜெர்மனியின் மிராஸ்லாவ் குளோஸ் (Miroslav Klose). இவர் 4 உலகக் கோப்பை போட்டிகளில் 24 ஆட்டங்களில் பங்கேற்று 16 கோல்களை அடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x