Last Updated : 04 Jun, 2018 05:53 PM

 

Published : 04 Jun 2018 05:53 PM
Last Updated : 04 Jun 2018 05:53 PM

ஆங்கில​ம் அறிவோமே 216: கேட்பதற்கே மகிழ்ச்சியா இருக்கு!

கேட்டாரே ஒரு கேள்வி

காசோலை பற்றிய ஒரு புத்தகத்தில் drawer என்ற வார்த்தையைப் படித்தேன். ‘Drawer of the cheque’ என்று காணப்பட்டது. ​மேஜைக்கு drawer இருக்கலாம். காசோலைக்கு எப்படி?

----------------------

Fatality, Mortality ஆகிய இரு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தானா?

Fatal என்றால் இறப்பை விளைவிக்கக்கூடிய அல்லது இறப்பை விளைவித்த என்று பொருள். A fatal accident என்றால் அந்த விபத்தினால் ஓர் உயிராவது பறிக்கப்பட்டிருக்கிறது. Scorpion sting can be fatal to humans என்றால் தேள் கடியின் காரணமாக மனிதர்கள் உயிரிழக்கக்கூடும் என்று அர்த்தம்.

Mortal என்பதும் fatal என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறதுதான். A mortal disease என்றால் உயிரைப் பறிக்கக்கூடிய நோய். இதை அமங்கலமாகவும் பயன்படுத்துவதுண்டு. This scandal has struck a mortal blow to the government என்றால் அந்த ஊழல் காரணமாக அ​ரசுக்கு மிகப் பலத்த அடி என்று அர்த்தம். அதாவது அடுத்த முறை ஆட்சிக்கு வருவதே கஷ்டம் அல்லது இப்போதேகூட அந்த அரசு கலைக்கப்படலாம்.

‘All men are mortal’ என்றால் நாம் அனைவருமே ஒரு நாள் இறக்கக் கூடியவர்கள்தான் என்று பொருள் (All men are fatal என்று சொல்வதில்லை). Mortal remains என்று இறந்தவரின் சாம்பலைக் குறிப்பிடுவார்கள்.

Immortal என்றால் இறப்பே இல்லாதது அல்லது இறப்பே இல்லாதவர்.

Drawer-ஆல் குழப்பம் கொண்டுள்ள வாசகரே. காசோலையைப் பொருத்தவரை யார் அதிலுள்ள உத்தரவைப் பிறப்பிக்கிறாரோ அவர்தான் drawer (காசோலையைப் படித்திருப்பீர்கள். ‘Pay to’ என்ற உத்தரவோடு அது தொடங்குவதைக் கவனித்திருப்பீர்கள்). யாரை நோக்கி அந்த உத்தரவு இருக்கிறதோ அவர் drawee (அதாவது உங்கள் வங்கி). காசோலையில் நீங்கள் குறிப்பிடும் நபருக்குக் குறிப்பிட்ட தொகையை அளிக்குமாறு நீங்கள் உத்தரவிடுகிறீர்கள். அப்படிக் குறிப்பிடப்படும் நபர் payee.

----------------------

ரோஜர் என்ற வார்த்தையை ரேடியோ தகவல் தொடர்பில் அதிகமாகக் கேட்க முடியும். ​‘நீங்கள் கூறிய தகவல் எனக்குச் சரியாக வந்து சேர்ந்துவிட்டது’ என்று இதற்குப் பொருள். என்றாலும் ஆமாம் என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘ரோஜர்’ என்பதைப் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதுபோன்ற உரையாடல்களில் ‘Wilco’ என்று பயன்படுத்தப்பட்டால், “நீங்கள் கூறியதைப் போலவே நடந்துகொள்கிறேன்” என்று பொருள்.

----------------------

போட்டியில் கேட்டுவிட்டால்?

His --------- reply made me happy

a) acrimonious

b) camouflaged

c) candid

d) guarded

ஒருவரது பதில் நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்றால் அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? கொடுக்கப்பட்டிருக்கும் விடைகளைக் கொஞ்சம் பார்ப்போம்.

Acrimonious என்றால் கோபமான, கசப்பான. இந்தத் தன்மை கொண்ட பதில் நமக்கு மகிழ்ச்சியை அளிக்காது.

Camouflaged reply என்றால் அது நேரடியான பதில் அல்ல. ராணுவ வீரர்கள் பச்சையும் மஞ்சளுமான ஓர் உடையை அணிவது வழக்கம். அப்போதுதான் அவர்கள் மரங்கள் மற்றும் புற்களுக்கு நடுவே மறைந்து கொள்ளும்போது தூரத்தில் இருக்கும் எதிரிப் படைகளுக்கு அவர்கள் தெரிய மாட்டார்கள். Camouflage என்றால் உருவ மறைவு என்று தோராயமாகக் கூறலாம். Camouflaged reply என்றால் உண்மையை மறைத்துக் கூறுவது எனலாம்.

Guarded reply என்றால் பாதுகாப்பான பதில். அதாவது, கொஞ்சம் சாமர்த்தியமாக, முழு உண்மையையும் வெளிப்படுத்தாத பதில் எனலாம்.

Candid என்றால் வெளிப்படையான, உண்மையான என்று பொருள். இந்த வகை பதில்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தவே வாய்ப்பு அதிகம். எனவே சரியான விடை His candid reply made me happy என்பதுதான்.

சிப்ஸ்

# ​Did​n’t அல்லது Did’nt இந்த இரண்டுக்குமிடையே எனக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

எங்கே ‘o’ நீக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தில்தான் அதற்குப் பதிலாக ‘apostrophe’. எனவே Didn’t என்பதே சரி.

# Content என்றால்?

பொருளடக்கம். போதுமென்ற மனம்.

# Dipsomaniac என்றால் என்ன?

மதுவுக்கு அடிமையானவர். No one would employ a dipsomaniac as a barman.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x