Published : 26 Jun 2018 11:47 AM
Last Updated : 26 Jun 2018 11:47 AM
கேட்டாரே ஒரு கேள்வி
புதைகுழிக்கு ஆங்கிலத்தில் quick sand என்று பெயர் வைத்தது ஏன்?
புதைகுழியை quicksand என்று கூறும்போதே வேறு சில தெளிவுகளையும் பெறலாமே.
Quick sand என்று பிரித்து எழுதக் கூடாது. அது ஒரே சொல்தான்.
எழுதும்போது பெரும்பாலும் quicksands என்று குறிப்பிடுகிறார்கள்.
கவர்ந்திழுத்து ஒருவரை அழிக்கக்கூடிய வஞ்சகச் சூழலையும் quicksand என்பார்கள்.
புதைகுழியில் சிக்கிய ஒருவர் கைகளையும் கால்களையும் வேகமாக ஆட்டினால் (சினிமாவில் பாத்திருப்பீர்களே) புதைமணலுக்குள் வேகமாக ‘மூழ்கி’விடுவார். அதனால் இதற்கு quicksand என்ற பெயர் வந்திருக்க வாய்ப்பு உண்டு.
------------------------------
Mops & brooms என்பது இந்த இருவகைப் பொருட்களை மட்டும் குறிக்குமா அல்லது இதற்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா?
தனிப்பட்ட முறையில் mop என்பதும் broom என்பதும் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்கள். ஆனால், mops & brooms என்று இணைத்துக் கூறும்போது அது குடிகாரனின் நிலைமையை உணர்த்துகிறது. I found him mops & brooms on the new year eve. புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தன்று குடித்திருந்த நிலையில் அவனைப் பார்த்தேன் என்று பொருள். அளவுக்கு அதிகமாகக் குடித்தவன் இருந்த இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்ற கோணத்தில் இது உருவாகியிருக்கக்கூடும்.
------------------------------
“Pick and choose என்கிறார்களே. Choose and pick என்றுதானே இருக்க வேண்டும்” என்று வியப்படைகிறார் வாசகர் ஒருவர்.
ஒருவர் தேங்காய் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோமே. ஒவ்வொன்றையும் எடுத்துத் தட்டிப் பார்த்துவிட்டுத் தேர்ந்தெடுக்கிறார்!
பலவற்றிலிருந்து ஒன்றை வெகு கவனமாகத் தேர்வு செய்வதைத்தான் pick and choose என்பார்கள்.
“You take what you are given. You cannot pick and choose”. அதாவது தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்க்காதே’ என்பதுபோல.
You only live twice என்பதற்கான விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
பெண்களுக்கு இரண்டு பிறவிகள் என்பார்கள். பிறக்கும்போது ஒன்று, பிரசவத்தின்போது மற்றொன்று. அதாவது பிரசவத்தில் உயிரிழக்க சாத்தியம் உண்டு என்பதால் நல்லபடி பிரசவம் நடந்தால் அது மறுபிறவி என்ற அர்த்தத்தில் இப்படிக் கூறுவதுண்டு.
ஆனால், you only live twice என்பது இயான் ஃபிளெமிங் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு வாசகம். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கித் தனது பல புதினங்களில் உலவவிட்டவர் இவர். You only live twice என்ற பெயரில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் புதினத்தை இவர் எழுதியதுண்டு. அதில் ஜேம்ஸ் பாண்ட் தன் நண்பர் டைகர் தனகாவுக்கு எழுதும் ஒரு கடிதத்தில் ஒரு ஹைக்கூவைப் பயன்படுத்துவார் அது.
You only live twice:
Once when you are born
And once when you look death in the face
இந்த ஹைக்கூ ஜப்பானியக் கவிஞர் மட்சுவோ பஷோ என்பவரால் எழுதப்பட்டது என்பவர்கள் உண்டு.
------------------------------
“Take with a grain of salt” என்பதற்குப் பொருள் என்ன?
ஒருவர் எதையோ உங்களுக்கு விளக்குகிறார். ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே வருகிறீர்கள். ஆனால், அவர் நடுவில் கூறும் ஒரு தகவல் நம்ப முடியாததாக இருக்கிறது. அப்போது you are listening the explanation with a grain of salt. அதாவது நீங்கள் அதை முழுவதுமாக நம்பவில்லை எனலாம். இதை take with a pinch of salt என்றும் கூறுவதுண்டு.
------------------------------
‘Enervated’ என்ற சொல்லின் பொருளை அகராதியில் அறிந்தபோது மிகவும் வியப்படைந்ததாக ஒரு நண்பர் கூறினார்.
உண்மைதான். Enervated என்றால் ஏதோ புதிய சக்தி கிடைத்ததுபோல என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், அதற்குப் பொருள் ‘சக்தியையெல்லாம் இழந்த நிலை’ என்பதுதான். கத்தரி வெயிலை ‘Enervating heat’ என்று கூறலாம்.
‘This war consumes the heart and enervates the soul’ என்ற அழகான வாக்கியத்தை எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.
இதேபோல ‘Noisome’ என்ற சொல்லின் பொருளும் வியப்பு அளிப்பதுதான். இதற்குப் பொருள் ‘மிகவும் அதிருப்தியையும் எரிச்சலையும் அளிக்கக்கூடிய’. அதாவது இது ஒலி சம்பந்தப்பட்டது அல்ல. A noisome area with narrow streets filled with pigs. பெரும்பாலும் தாங்க முடியாத துர்நாற்றத்தை விவரிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
------------------------------
போட்டியில் கேட்டுவிட்டால்?
Thirty kilometers __________ in these days of fast moving vehicles.
a) are not a great distance
b) is not a great distance
c) is not a distance
d) aren’t a great distance
இங்கே 30 கிலோ மீட்டர் என்பது ஒரு singular subject. ஒவ்வொரு கிலோமீட்டரையும் குறிக்காமல் ஒட்டுமொத்தமாக 30 கிலோமீட்டரையும் குறிக்கிறோம். எனவே அதற்குப் பக்கத்தில் is என்பதுதான் வர வேண்டும்.
“வேகமான வண்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் இந்நாட்களில் 30 கிலோ மீட்டர் என்பது ஒரு ‘பெரிய’ தூரமே அல்ல” என்பதுதான் சரியான விடையாக இருக்கும். ஆனால், வண்டிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால்தான் ஒரு கிலோ மீட்டரை கடக்கக்கூட அதிக நேரமாகிறது என்பது வேறு விஷயம்!.
எனவே Thirty kilometers is not a great distance in these days of fast moving vehicles என்பதுதான் சரியான விடை.
தொடர்புக்கு - aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT