Last Updated : 05 Jun, 2018 11:30 AM

 

Published : 05 Jun 2018 11:30 AM
Last Updated : 05 Jun 2018 11:30 AM

சேதி தெரியுமா? - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஐநா கண்டனம்

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மக்கள் மீது தமிழக காவல்துறை மே 22 அன்று நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரிவு நிபுணர்கள் மே 31 அன்று கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

5CHGOW_SHOOTING

இந்த அறிக்கையில் உடல்நலன், சூழல்நலன் கருதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது தமிழ்நாட்டு அரசின் காவல்துறை நடத்திய தூப்பாக்கிச்சூடு மனித உரிமை மீறல் என்று ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்தவும், அனைத்து தொழில்நிறுவனங்களும் சர்வதேச மனித உரிமைகள், சுற்றுச்சூழல் சட்டவிதிமுறைகளைக் கடைபிடிக்கவும் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு மே 28 அன்று அரசாணை வெளியிட்டது.

 

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1: வயது வரம்பு அதிகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு எழுதுபவர்களின் வயது வரம்பை விதி 110-ன் கீழ் மாற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜூன் 1 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி இடஓதுக்கீடு மூலம் தேர்வெழுதும் பட்டியலினத்தவர்களின் வயது வரம்பு 35-லிருந்து 37 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 வயதாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், குரூப் 1 தேர்வு எழுதுபவர்களின் வயது வரம்பு இந்திய அளவில் 11 மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட அதிகமாக 38, 39, 40, அதிகபட்சமாக 45 வயதுவரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டிலும் குரூப் 1 தேர்வு எழுதுபவர்களின் வயது வரம்பை 40-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இடைத்தேர்தல்: பாஜகவுக்குப் பின்னடைவு

நான்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 28 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தல் முடிவுகளை மே 31 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக இந்த 14 தொகுதிகளில் மத்தியில் ஆளும் பாஜக, ஒரு நாடாளுமன்ற தொகுதி, ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. பஞ்சாப், உத்திராகண்ட், கேரளா, பிஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மேகாலயா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, நாகாலாந்து, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மாநிலக் கட்சிகளே வெற்றிபெற்றிருக்கின்றன.

ஆந்திரா: புதிய மாநிலச் சின்னங்கள்

ந்திரப் பிரதேச மாநிலம் 2014-ம் ஆண்டில் ஆந்திரம், தெலங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினையின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திர மாநில அரசு புதிய மாநிலச் சின்னங்களை மே 31 அன்று அறிவித்தது. ஆந்திரா மாநிலத்தின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் இந்தப் புதிய மாநிலச் சின்னங்களை வெளியிட்டுள்ளது. அந்த மாநில மலராக மல்லிகையும், மாநில மரமாக வேப்ப மரமும், மாநிலப் பறவையாகப் பச்சைக்கிளியும், மாநில விலங்காக வெளிமானும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர்

பாகிஸ்தானின் முன்னாள் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நசிருல் முல்க் அந்நாட்டின் இடைக்காலப் பிரதமராக ஜூன் 1 அன்று பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் ஜூலை 2018-ல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நசிருல் முல்க் பிரதமராகப் பதவிவகிப்பார் என்று அரசு, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானின் ஏழாவது இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார் நசிருல் முல்க். பொதுத் தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாகத் அந்த தன் பதவியேற்பு விழாவில் தெரிவித்தார்.

உலகின் முதல் 3டி மனிதக் கருவிழிப்படலம்

லகின் முதல் 3டி-யால் அச்சடிக்கப்பட்ட மனிதக் கருவிழிப் படங்களை இங்கிலாந்தின் நியுகேஸ்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர். கண்தானம் செய்பவர்களின் தட்டுப்பாட்டைக் கையாள்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிய அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான பார்வையிழந்தவர்கள் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் பயனடைவார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். ‘கோலஜென்’ (Collegen) என்னும் புரதத்தையும், ‘அல்ஜினேட்’ (alginate) என்னும் பல்கூட்டுச் சர்க்கரையும் இணைத்து உருவாக்கி இருக்கும் ‘பயோ-இங்க்’ மூலம் 3டி-யில் அச்சடிக்கப்பட்ட இந்த மனிதக் கருவிழிப்படலங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x