Published : 12 Jun 2018 10:40 AM
Last Updated : 12 Jun 2018 10:40 AM
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 அன்று ‘சிபிஎஸ்இ’யால் நடத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வை தமிழ்நாட்டிலிருந்து 1,14,302 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 45,366 (39.55%) மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர். 2017-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு எழுதிய 83,859 மாணவர்களில் 32,750 பேர் தேர்ச்சிபெற்றார்கள். நாடு முழுவதும் 12.69 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7.14 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். இவர்கள் நாட்டின் மருத்துவ, பல் மருத்தவப் படிப்புகளுக்கான மொத்தமுள்ள 66,000 இடங்களில் நிரப்பப்படுவார்கள். இந்தத் தேர்வில் உத்தரப்பிரதேசம் (76,778 மாணவர்கள்), கேரளா (72,682), மகாராஷ்டிரம்(70, 184) ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
2019-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கப்போவதாக உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. பிளாஸ்டிக் பைகள், கப்கள், ஸ்ட்ராக்கள், தண்ணீர் பாக்கெட்கள் போன்ற பொருட்களுக்கு 2019 ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பால், தயிர், எண்ணெய், மருந்துகளை அடைத்து தரும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
49, 329 தமிழக நிறுவனங்கள் மூடல்
தமிழ்நாட்டில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் 49,329 சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஜூன் 7 அன்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதனால், சென்ற நிதியாண்டில் தமிழ்நாட்டின் தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சி 18.45 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 2,67,310 சிறு, குறு, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால், 2017-18-ம் நிதியாண்டில் தொழில்நிறுவனங்களின் பதிவு எண்ணிக்கை 2,17,981 ஆகச் சரிந்திருக்கிறது. அத்துடன் 2017-18-ம் நிதியாண்டில் சுமார் 50,000 சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டதால் 5,19,075 பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றனர்.
மின் கழிவு உற்பத்தியில் இந்தியா முன்னணி?
உலக அளவில் மின் கழிவை அதிகமாக உற்பத்தி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக ‘அசோசாம்-என்இசி’ ஜூன் 4 அன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவுடன் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் 5 சதவீத மின் கழிவை மட்டுமே மறுசுழற்சி செய்யப்படும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. நாட்டில் அதிகமாக மின் கழிவுவை உற்பத்திசெய்யும் மாநிலங்களாக மகாராஷ்டிரம் (19.8%), தமிழ்நாடு (13%), உத்தரப்பிரதேசம் (10.1 %), கர்நாடகம் (8.9%), குஜராத் (8.8 %) ஆகியவை இருக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில்: அமெரிக்க ஆய்வு
இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்வதற்காக 20 பேர் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் (NOAA) குழு கோவாவுக்கு ஜூன் 8 அன்று வந்திருக்கிறது. இந்தக் குழு, இந்திய விஞ்ஞானிகளுடன் இணைந்து அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல், வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) கப்பலில் இந்தியப் பெருங்கடலை ஆய்வுசெய்கிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், இந்தியப் பெருங்கடலில் உருவாகும் பருவகாலத்தை நம்பியிருக்கிறார்கள்.
அதனால், இந்தியப் பெருங்கடலின் பருவகாலத்தை இந்தியாவும், இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதால் இந்தப் பெருங்கடல் ஆய்வை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். இந்த ஆய்வு உலகின் பருவநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இஸ்ரோ திட்டங்களுக்கு ரூ. 10, 000 கோடி நிதி
இஸ்ரோவின் அடுத்த நான்கு ஆண்டுகள் விண்வெளித் திட்டத்தின்கீழ் விண்ணில் செலுத்தப் படவிருக்கும் 30 பிஎஸ்எல்வி, 10 ஜிஎஸ்எல்வி எம்கே III ஏவுகணைகளுக்கு ரூ. 10,469 கோடி நிதி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஜூன் 7 அன்று ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இஸ்ரோவின் இந்தச் செயற்கைக்கோள்கள் அனைத்தும் 2019-ம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன. பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, கடல்சார் தகவல்தொடர்பு, விண்வெளி அறிவியல் தொடர்பான செயற்கைக்கோள்கள் இந்தத் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படவிருக்கின்றன.
49-வது ஆளுநர்கள் மாநாடு
நாட்டின் 49-வது ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 5 அன்று நிறைவுற்றது. இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு ஆளுநர்களிடம் கூறினார். இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் உரையாற்றினார்கள். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான திட்டங்களை இந்த மாநாட்டில் ஆளுநர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ஏர் இந்தியாவின் 70 ஆண்டுகள்
ஏர் இந்தியா நிறுவனம், தன் முதல் விமான சேவையை மும்பை - லண்டன் வழித்தடத்தில் 1948 ஜூன் 8 அன்று தொடங்கியது. அந்த முதல் விமானம் 42 பயணிகளுடன் கெய்ரோ, ஜெனீவா வழியாக லண்டனில் 1948 ஜூன் 10 அன்று தரையிறங்கியது. ஏர் இந்தியாவின் இந்த முதல் விமானப் பயணத்தில் நாட்டின் சில முக்கியமான ‘நவாப்’களும் அரசர்களும் பயணம்செய்தனர். ஏர் இந்தியா நிறுவனம், இந்தியா-பிரிட்டன் இடையேயான விமான சேவையில் 70 ஆண்டுகள் நிறைவுசெய்ததை இந்த மாதம் இறுதியில் கொண்டாடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT