Last Updated : 22 May, 2018 11:06 AM

 

Published : 22 May 2018 11:06 AM
Last Updated : 22 May 2018 11:06 AM

ஆங்கிலம் அறிவோமே 214: கை கொடுக்கும் கை!

கேட்டாரே ஒரு கேள்வி

மலர்களைப் பூங்கொத்தாக அழகாக உருவாக்கித் தருபவர்களை floorist என்கிறார்கள். Flowerist என்றுதானே குறிப்பிட வேண்டும்?

----------------------

‘Appeal to’ என்று படித்திருக்கிறேன். ‘Appeal for’ என்பதையும் பார்க்கிறேன். இரண்டில் எது சரி?

ஒரு வார்த்தைக்குப் பிறகு எப்போதுமே ஒரு குறிப்பிட்ட preposition-தான் இடம்பெறும் என்று கூறிவிட முடியாது. ‘Appeal to’, ‘appeal for’ ஆகிய இரண்டுமே தவறல்ல. ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்புக்காக appeal செய்யும்போது அது appeal to. எதற்காக appeal செய்கிறோமோ அது appeal for. கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள்.

The prisoner appealed to the judge.

The prisoner appealed for mercy.

The prisoner appealed to the judge for mercy.

மேலும் தெளிவு பெற:

He applied to the Government.

He applied for medical leave.

He applied to the Government for medical leave.

----------------------

‘காமதேனு’ இதழில் ‘ஐவரி’ என்ற தமிழ் வடிவத்தை கவிஞர் மதன் கார்க்கி அறிமுகப்படுத்துவதாகக் கூறுகிறார். ஆங்கிலத்தில் இதுபோன்ற முயற்சிகள் உண்டா?

Limerick என்பது ஐந்து வரிச் செய்யுள். பெரும்பாலும் நகைச்சுவை கலந்ததாக இருக்கும். முதல், இரண்டாவது, ஐந்தாவது வரிகள் ஒரேமாதிரி முடியும். மூன்றாவது, நான்காவது வரிகள் வேறு தளைகளுடன் நீளம் குறைந்ததாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு,

There once was a young lady named bright

Whose speed was much faster than light

She set out one day

In a relative way

And returned on the previous night.

----------------------

For god’s sake என்கிறோம். ஆனால், இயேசுவைக் குறித்துச் சொல்லும்போது ‘For Jesus sake’ என்கிறோம். ‘Jesus’s sake’ என்று குறிப்பிடுவதில்லையே ஏன்?

தொடர்ந்து ‘s’ இடம்பெற்றால் உச்சரிக்கும் நாக்கு சுளுக்கிக்கொள்ளலாம் என்பதால் பொதுவாக ‘s’ என்ற எழுத்தைத் தொடரும் ‘s தவிர்க்கப்படுகிறது. இன்னொரு எடுத்துக்காட்டு:- For goodness sake.

கேட்டாரே ஒரு கேள்வி வாசகரே, அந்தப் பூங்கொத்துக்காரரை florist என்றுதான் குறிப்பிட வேண்டும். Floorist அல்லது flourist என்று வார்த்தைகள் இல்லை. பூக்கள் தொடர்பான வணிகத்தில் ஈடுபடுபவர்களை florist என்பார்கள். அதில் நீங்கள் குறிப்பிடுபவரும் அடக்கம்.

----------------------

Arm என்பது கையை மட்டும் குறிக்கும் சொல்லா, காலையும் குறிக்கும் சொல்லா? விலங்குகளுக்கு Arms உண்டா?

Arms என்பது கைகளைக் குறிக்கும் சொல். Arm Chair என்பது கைகளைக்கொண்ட நாற்காலி. அதாவது கைகளை வைத்திருப்பதற்கென்ற அமைப்பு கொண்ட நாற்காலி.

She held the baby in her arms என்பதை நினைவில்கொண்டால் arms என்பது கால்களைக் குறிக்காது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

நாய், பூனை போன்றவற்றின் முன்னங்கால்களை arms என்று சொல்வதில்லை. தமிழிலேயேகூட அவற்றைக் கால்கள் என்றுதான் குறிப்பிடுவோமே தவிர, கைகள் என்று அல்ல.

முதுகெலும்பில்லாத விலங்குகளின் உடலில் அமைந்துள்ள நன்கு அசையக்கூடிய பகுதிகளை arm என்பதுண்டு. எடுத்துக்காட்டு, ஆக்டோபஸின் எட்டு ‘arms’.

நன்கு பந்து வீசக்கூடியவரை He has a good arm என்று புகழ்வதுண்டு.

மற்றபடி ‘arm of the tree’ என்பதுபோல் கவிஞர்கள் கிளையைக் குறிப்பிடுவதுண்டு. The long arm of law என்றால் சட்டத்தின் மிக நீண்ட கை. அதாவது குற்றம் இழைத்தவர்கள் எவ்வளவு தூரத்தில் மறைந்திருந்தாலும் அவர்களைத் தனக்கு முன்கொண்டு வந்து நிறுத்தும் சட்டத்தின் ‘பிடி’. 1956-ல் ‘The long arm of the law’ என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் தொடர் கொள்ளைகளை ஸ்காட்லாந்து யார்டு துப்பறிந்து கண்டுபிடிக்கும்.

----------------------

“எங்கள் வீட்டு கட்டுமானத்துக்கு வந்தவர்களில் ஒரு இளைஞன் மண்வாரி என்பதற்கும், செங்கற்களுக்கு மேலும், அவற்றின் இடைவெளிகளிலும் சிமெண்டைப் பயன்படுத்த உதவும் கருவிக்கும் ஆங்கிலத்தில் என்ன வார்த்தைகள் என்று கேட்டான். எனக்குத் தெரியவில்லை. உதவுங்களேன்”.

மண்வாரியை Shovel என்பார்கள். மண்வெட்டியை spade என்பார்கள். நீங்கள் இரண்டாவதாகக் குறிப்பிடுவது சாந்து அகப்பை அல்லது கொல்லறுவாக இருக்க வாய்ப்பு உண்டு. அதன் ஆங்கிலப் பெயர் Trowel.

----------------------

தொடக்கம் இப்படித்தான்

கிரிக்கெட் மட்டையை bat என்கிறோம். ஆனால், டென்னிஸ், பேட்மிண்டன், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தும் மட்டையை racket என்கிறோம். இது ஓவல் வடிவத்தில் அல்லது வட்ட வடிவில் இருக்கும். உள்ளே நைலான் போன்ற வயர்கள் பின்னப்பட்டிருக்கும். இதற்கு நீளமான கைப்பிடி இருக்கும்.

இதற்கு racket என்று ஏன் பெயர் வந்தது? அரபு மொழியில் rahat என்றால் உள்ளங்கை என்று பொருள். உள்ளங்கையில் பிடித்துக்கொண்டு ஆடுவதால் இதற்கு racket என்று பெயர் வந்திருக்க வேண்டும். விண்கலங்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல உதவும் rocket என்பதோடு இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

சிப்ஸ்

# லிச்சி (Lychee) என்ற பழத்தின் தமிழ்ப் பெயர் என்ன?

வினச்சிப் பழம் என்பார்கள். சிலர் விழுதி என்றும் கூறுவதுண்டு.

# லிப்ட் கேட்கும் ஒருவரை காரில் ஏற அனுமதிக்கும்போது “Get on my car” எனலாமா? அல்லது “Get in my car” என்பதுதான் சரியா?

Please get into my car என்பதே சரி.

# Copious என்றால் என்ன?

எக்கச்சக்கமான.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x