Published : 17 Apr 2018 10:49 AM
Last Updated : 17 Apr 2018 10:49 AM
க
றுப்பு…. பலர் வெறுக்கும் ‘வண்ணம்’, சிலருக்கோ எதிர்ப்பின் நிறம்!
முதலில் கறுப்பு, கொடியாகப் பறந்தது. பிறகு, சட்டை ஆனது. இப்போது, பலூனாகப் பறக்கவிடுகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில், சென்னையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, போராட்டக்காரர்கள் சிலர் கறுப்பு பலூனைப் பறக்கவிட்டதுதான் கடந்த வாரத்தின் ‘கறுப்பு’ செய்தி!
நிகழ்காலத்தில் பறந்த இந்த பலூனுக்கும், வரலாற்றில் பறந்த பலூனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது… ‘பிரச்சினை வருகிறது’ என்பதுதான்.
இன்று இருப்பது போன்ற வேகமான தகவல்தொடர்பு வசதிகள் எல்லாம் முதல் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் இல்லை. அந்தப் போரில் பிரிட்டன் பங்கேற்றிருந்தது. எதிரி நாட்டு ராணுவத்தினர், வான் வழியாக பிரிட்டனில் உள்ள நகரங்களின் மீது குண்டு மழை பொழிந்து வந்தார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பலியானார்கள்.
எதிரிகள் தங்கள் மீது குண்டு வீச்சு நடத்தப் போகிறார்கள் என்ற தகவல், பிரிட்டன் ராணுவ அதிகாரிகளுக்கு முன்பே கிடைத்தாலும், அந்தத் தகவலைத் தங்கள் வீரர்களுக்கு விரைவாகக் கடத்த முடியாத சூழல் இருந்தது. முன்கூட்டியே அவர்களை எச்சரித்து, எதிர்த் தாக்குதல் நடத்த அவர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் பெரும்பாடுபட்டார்கள்.
இந்நிலையில், அவர்கள் மத்தியில் யோசனை ஒன்று உதித்தது. எதிரிகள், தங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடனே, நகரமெங்கும் பலூன்களைப் பறக்க விட வேண்டும். அப்படி, பறக்கும் பலூன்களைப் பார்த்த உடன், தங்கள் வீரர்கள் சுதாரித்துக் கொண்டு, எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு, பிரிட்டன் ராணுவ வீரர்கள், வானில் பலூன்கள் பறப்பதைப் பார்த்தவுடன், பிரச்சினை வரப்போகிறது என்று தெரிந்துகொண்டு, எதிர்த் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள் என்கிறது வரலாறு.
நாளடைவில், ஏதேனும் பிரச்சினை வரப்போகிறது அல்லது நிலைமை ரொம்பவும் சீரியஸாகிவிட்டது என்பதை விளக்குவதற்கு, ஆங்கிலத்தில் ‘The balloon has gone up’ என்றோ அல்லது ‘the balloon goes up’ என்றோ, சொல்லத் தொடங்கினார்கள்.
அப்படிப் பார்த்தால், காவிரிப் பிரச்சினையில் ‘பலூன் பறந்தாச்சு!’ அது காற்றோடு போய்விடாமலும், காற்றுப் போய்விடாமலும் இருக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT