Last Updated : 01 May, 2018 10:27 AM

 

Published : 01 May 2018 10:27 AM
Last Updated : 01 May 2018 10:27 AM

ஆங்கிலம் அறிவோமே 211: தலைகால் புரியலை!

கேட்டாரே ஒரு கேள்வி

முட்டாள்களைக் குறிக்க ‘A silly goose’ என்கிறோமே வாத்து என்ன பாவம் செய்தது?”

----------------------

“வெற்றிடம் என்பதற்கான ஆங்கில வார்த்தையை விதவிதமான எழுத்துகளைப் பயன்படுத்தி நாளிதழ்கள் அச்சிடுவதாக” வருத்தப்பட்டிருக்கிறார் நண்பர் ஒருவர். அதாவது spelling mistake என்கிறார்.

நாளிதழ்கள் இருக்கட்டும். நாம் அறிந்துகொள்வோம். வெற்றிடம் என்பதன் ஆங்கில வார்த்தை vacuum. அங்கு எதுவுமே (காற்று உட்பட) இல்லை என்பது இதன் பொருள். லத்தீன் மொழியில் in vacuo என்பது வெற்றிடத்தால் சூழப்பட்ட ஒரு பொருளைக் குறிப்பிடுகிறது. காற்றழுத்தமானியை (Barometer) கண்டுபிடித்தவர் விஞ்ஞானி இவான்ஜெலிஸ்டா டாரிசெல்லி. வெற்றிடம் தொடர்பான பல கண்டுபிடிப்புகளுக்கும் பெயர்பெற்றவர்.

----------------------

Far from cry என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

நீங்கள் ஒரு வீட்டில் வசிக்கிறீர்கள். அந்த வீடு நகரிலிருந்து கொஞ்சம் உள்ளடங்கியதாக இருந்தாலும் அதில் பல வசதிகள் உண்டு. தவிரத் தனி வீடு என்பதால் நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக நீங்கள் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியேற வேண்டிய கட்டாயம். அங்கே இடமும் குறைவு, சுதந்திரமும் குறைவு. அப்போது நீங்கள் இப்படிக் கூறலாம். “This flat is a far cry from the house I lived before”. அதாவது ஒன்றிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒன்றை ‘be a far cry from something’ என்பது வழக்கம். Her role as H.R. manager is a far cry from her previous job as an air hostess.

ஒரு சம்பவம் நடந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் நடந்தது அதிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒன்று என்றால் what you have said is a far cry from the truth.

----------------------

‘Goes bananas’ என்றால் என்ன?

ஒருவிதப் பரவச நிலையை அடைதல். அதாவது ‘தலைகால் புரியாமல் ஆடுதல்’ என்பார்களே அதுபோல இருக்கக் கூடும்.

Whenever I go for movies, I just go bananas.

மாறாக This day was a horrible day at my office. I almost went bananas எனும்போது அதிகப்படி அலுவலக வேலையால் கிட்டத்தட்ட ‘பைத்தியம் பிடிக்கிற நிலைக்குவந்து விட்டேன்’ என்பதை இது குறிக்கிறது.

கேட்டாரே ஒரு கேள்வி வாசகரே, தமிழில்கூட “அவன் ஒரு சரியான வாத்து மடையன்” என்று சொல்கிறோமே!

What is sauce for the goose is sauce for the gander. இதன் பொருள் ஒருவருக்குப் பொருந்தும் சிகிச்சை மற்றவருக்கும் பொருந்தும் என்பதுதான்.

Killing the goose that lays the golden eggs என்பது பொன் முட்டை இடும் வாத்தை வெட்டுவதைக் குறிக்கிறது. அதாவது பேராசையால் உருவாகும் முட்டாள்தனம்.

Goose chase என்றால் பயனில்லாத, நேரத்தை வீணடிக்கும் செயல்.

----------------------

‘Equable’ என்று ஒரு வார்த்தையைப் படித்தேன். Equal, Equitable போன்ற வார்த்தைகளுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

Equal என்றால் சமம்.

Equitable என்றால் நியாயமான என்று பொருள்.

ஒருவர் தனது சொத்தைத் தன் மகன்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தால் அது ‘equal distribution’. ஏழை மகனுக்குக் கொஞ்சம் அதிகமாகவும், பணக்கார மகனுக்குக் கொஞ்சம் குறைவாகவும் பிரித்துக் கொடுத்தால் அது equitable distribution. அந்தப் பணக்கார மகன் இந்த வார்த்தை அங்கு பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் என்பது வேறு விஷயம்.

இப்போது equable என்ற வார்த்தைக்கு வருவோம். He has an equable temperament என்றால் அவர் அமைதியானவர் என்று பொருள். அவரை எளிதில் கோபப்படுத்திவிட முடியாது என்றும் அர்த்தம்.

வெப்ப நிலையில் அதிக மாற்றம் இல்லை என்றால் அதை ‘An equable climate’ எனலாம்.

----------------------

“Mean என்றால் மட்டமான என்பதுதான் பொருளா?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

What do you mean sir? மிகவும் mean ஆக இருப்பது என்றால் கருமித்தனமாக இருப்பது என்று பொருள்படுவது உண்மைதான். Mean என்றால் பொருள் (meaning) என்ற அர்த்தமும் உண்டு. When he said that, he meant it என்றால் நிஜமாகவே அவர் உணர்ந்து சொல்கிறார் என்று அர்த்தம்.

Mean என்றால் சராசரி என்ற அர்த்தமும் உண்டு. 3, 6, 0, 7, 9 ஆகிய ஐந்து எண்களின் mean 5 ஆகும்.

வேறொரு வகையான சராசரியும் உண்டு. அது median. அதாவது எண்களை ஏறுவரிசைப்படுத்தினால் நட்ட நடுவே இருக்கும் எண்தான் median. மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் ஆறு என்பதுதான் median.

----------------------

தொடக்கம் இப்படித்தான்

Guy என்ற வார்த்தை சுருக்கமானது, எளிமையானது. ஆனால், இந்த வார்த்தைக்கு ஒரு ‘பயங்கரமான’ பின்னணி உண்டு தெரியுமா?

லண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடமான வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையைத் தகர்க்கத் தீட்டப்பட்ட சதி ஒன்று 1605 நவம்பர் 5 அன்று அம்பலமானது. அந்தக் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் 36 உருளைகளில் வெடி மருந்து நிரப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் உரையாற்ற இருந்தார். ஆக அது நாடாளுமன்றக் கட்டிடத்தை மட்டுமல்ல மன்னரையும் கொல்வதற்கான சதி. இந்தச் செயலில் ஈடுபட்ட Guy Fawkes சிறைப்பிடிக்கப்பட்டார்.

இவர் ஒரு தீவிர ரோமன் கத்தோலிக்கர். அப்போது இங்கிலாந்தில் பிராடஸ்டென்ட் பிரிவினரின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறைப்பட்ட அவர் தூக்கிலிடப்பட்டார். இந்தப் பயங்கரச் சதித் திட்டத்தைக் கேள்விப்பட்டு மக்கள் அதிர்ந்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5 அன்று அந்தக் குற்றவாளியின்உருவ பொம்மை தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விசித்திரமான உருவ பொம்மைகளை guy என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

இங்கிலாந்தில் guy என்பது இப்படி எதிர்மறைப் பொருள்கொண்ட வார்த்தை. அமெரிக்காவிலோ guy என்பது ஏதோ ஒரு ஆணைக் குறிக்கும் சொல், அவ்வளவுதான். பொதுவாக ஒரு adjectiveவுடன் தான் guy பயன்படுத்தப்படுகிறது. Nice guy, wise guy, handsome guy, tough guy.

சிப்ஸ்

Praising someone to the skies என்றால் தமிழிலுள்ள அதே பொருள்தானா?

ஆமாம். வானளாவப் புகழ்வது.

None too clean என்றால்?

Not at all clean. The towels were none too clean.

Quite a lot என்பதன் எதிர்ப்பதம்தானே quite a few?

நம்புங்கள். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான்.

இந்தத் தொடரின் 209-ம் பகுதியில் Hysterectomy என்றால் ‘கருவை நீக்குதல்’ என்று குறிப்பிடப்பட்டுவிட்டது. அது ‘கருப்பையை நீக்குதல்’ என்று இருந்திருக்க வேண்டும். தவறைச் சுட்டிக் காட்டிய அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x