Last Updated : 08 May, 2018 10:40 AM

 

Published : 08 May 2018 10:40 AM
Last Updated : 08 May 2018 10:40 AM

ஆங்கில​ம் அறிவோமே 212: தொண்டையில் தவளை எதற்கு?

கேட்டாரே ஒரு கேள்வி

1. I will meet you at 4.30 p.m.

2. I will meet you at 4.30 p.m..

இந்த இரண்டில் எது சரி?

------------------

“Ante என்பதற்கும், Anti என்பதற்கும் உள்ள வேறுபாடை விளக்குங்களேன்?”

Before அல்லது in front of என்ற பொருளைக் கொடுப்பது Ante.

Anteroom என்றால் அறைக்கு முன்னே உள்ள பகுதி. பெரும்பாலும் வருபவர்கள் காத்திருக்கும் இடம்.

Anteambulo என்றால் ஒருவருக்கு முன்னால் நடந்து செல்பவர் என்று பொருள். அதாவது சில திரையரங்குகளுக்குள் நீங்கள் நுழைந்ததும் திரையரங்கு ஊழியர் ஒருவர் உங்களை அழைத்துச் சென்று உங்களுக்கான இருக்கையைக் காட்டுவார் இல்லையா, அவரை anteambulo என்றும் அழைப்பதுண்டு.

அதேபோல உங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தபடி முன்னால் செல்பவரும் anteambulo-தான்.

வி.ஐ.பி.க்களை மேடைக்கு அழைக்கும்போது (அவருக்கு மேடைக்கு வர வழி தெரியாததாலோ என்னவோ) அவரை மேடைக்கு ‘வழிநடத்தி’ அழைத்து வருவாரே அவரும் anteambulo-தான்.

Post dated cheque என்பதை அறிந்திருப்பீர்கள். இன்றைக்கு மே தினம் என்று வைத்துக்கொள்வோம். ஒருவருக்குக் காசோலை அளிக்கிறீர்கள். “இன்னும் நாலு நாளைக்கு என் சேமிப்பு கணக்கில் போதிய பணம் இல்லை. அப்புறம்தான் கிரெடிட் வரும். அதனாலே ஐந்து நாள் கழித்து இந்தக் காசோலையை உன் கணக்கில் போடு” என்று அவரிடம் கூறுகிறீர்கள். என்றாலும் உங்கள் மனதில் ஒரு குறுகுறுப்பு. ‘மறந்துபோய் இந்தக் காசோலையை அவர் நாளைக்கே தன் கண​க்கில் போட்டுவிட்டால்?’ என்றெண்ணி முன்னெச்சரிக்கையாகக் காசோலையில் தேதியை 5.5.2018 என்று எழுதுகிறீர்கள். அதற்குமுன் அவர் அந்தக் காசோலையைத் தன் கணக்கில் போட முடியாது. இது Post dated cheque.

இதற்கு நேர்மாறானது ante-dated cheque. மேற்படி காசோலைக்கான தேதியை நீங்கள் ஏப்ரல் 20, 2018 என்று குறிப்பிட்டால் அது ante-dated cheque.

இப்போது anti என்பதற்கு வருவோம்.

Anti என்றால் எதிராக என்று பொருள்.

‘என்னது இரும்புக் கம்பி குத்திடிச்சா? செப்டிக் ஆயிடப்போவுது. Antisceptic ஊசி ஒண்ணு போட்டுக்கோ’.

‘அவன் எப்பவும் சமூகத்துக்கு எதிராகவே செயல்படுவான். He is an anti social element’.

அத்தை, சித்தி, மாமி, பெரியம்மா போ​ன்றோரை auntie என்போம். பேச்சுவழக்கில் auntie என்றாலும் formal-ஆக எழுதும்போது aunt என்றே எழுதுவது வழக்கம்.

------------------

இந்தப் பகுதியில் ‘கேட்டாரே ஒரு கேள்வி’யைப் படித்ததும் உங்களுக்குக் குழப்பம் வந்ததா? எனக்கும்தான். கூர்ந்து கவனித்தபோதுதான் இரண்டாவது வாக்கியத்தின் இறுதியில் இரண்டு புள்ளிகள் இருப்பதை உணர முடிந்தது.

அதாவது abbreviations-ஐத் தொடர்ந்து புள்ளி இடம்பெறும். அந்த abbreviation வாக்கியத்தின் இறுதியில் இடம்பெற்றால் abbreviation-க்காக ஒரு புள்ளி, வாக்கியம் முடிந்ததற்காக ஒரு புள்ளி என்று இரண்டு புள்ளிகள் இடம்பெற வேண்டுமா என்பதுதான் அந்த வாசகரின் ஐயம்.

வாக்கியத்தின் இறுதியில் abbreviation இடம்பெற்றால் அதன் இறுதியில் உள்ள புள்ளியே வாக்கியம் முடிந்ததை உணர்த்துவதாகக் கொள்ளலாம். எனவே, வாக்கியம் முடிந்ததற்காகத் தனியாக ஒரு முற்றுப்புள்ளியை அளிக்க வேண்டிய தேவையில்லை. ஆக, வாசகர் குறிப்பிட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் முதல் வாக்கியமே சரியானது.

‘Black Hat’ என்றால் என்ன என்பது வாசகர் ஒருவரின் கேள்வி.

அந்தக் காலத்தில் கவுபாய் படங்களில் கறுப்புத் தொப்பி அணிபவர்க​ள் தீயவர்களாகவும், வெள்ளைத் தொப்பி அணிபவர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள். இதையொட்டி ஒரு குறிப்பிட்ட சூழலில் தீயவராக இருப்பவரை Black hat என்றும், நல்லவராக இருப்பவரை White hat என்றும் குறிப்பிடுவதுண்டு.

வட அமெரிக்காவில் ஆடு, மாடுகளைப் பராமரிப்பவரை Cowboy என்பார்கள்.

பின்னர் கவுபாய் என்பது பொ​றுப்பில்லாத ஒருவரைக் குறிப்பதாக மாறியது. காலப்போக்கில் போதிய அனுபவமோ திறமையோ இல்லாமல் வணிகம் நடத்துபவரையும், நேர்மையற்றவரையும் குறிக்க இந்தச் சொல் பயன்பட்டது. Fortunately such cowboy firms are becoming rarer.

கவுபாய் திரைப்படக் களன்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் மேற்குப் புறத்தில் நடப்பதாக இருக்கும்.

இதுபோன்ற படங்களில் கதாநாயகன் உட்படப் பலரும் குதிரைகளில் சவாரிசெய்வார்கள். தொப்பி அணிந்திருப்பார்கள், பூட்ஸ் போட்டிருப்பார்கள்.

------------------

“ஒரு பெரிய ​நூலின் பின்புறத்திலுள்ள glossary பகுதியில் p.22 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது page 22 என்பதை உணர்ந்தேன். ஆனால், வேறொரு இடத்தில் pp.45 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த pp. என்பது எதை உணர்த்துகிறது?”

நண்பரே, pp.45 என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்காது. அது ‘pp.45-49’ என்பதுபோல் குறிப்பிடப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. Pages என்பதைத்தான் pp. என்று குறிப்பிடுகிறார்கள். ​நூலின் அந்தப் பகுதியின் pp.45-49 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்கு எதிரே குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை பக்கம் 45-லிருந்து பக்கம் 49-ல் உள்ள தகவல்களில் காணப்படுகிறது என்று பொருள்.

அதேபோல் l.18 என்றால் வரி (line) 18 என்றும், ll.18-25 என்றால் வரிகள் என்றும் பொருள்.

------------------

தொடக்கம் இப்படித்தான்

“Have a frog in your throat” என்று ஒரு சொலவடை உண்டு. தொண்டையில் தவளை எதற்கு?

முன்னொரு காலத்தில் ஐரோப்பாவில் இப்படியொரு நம்பிக்கை நிலவியது. தவளை முட்டை கலந்துள்ள தண்ணீரைக் குடித்தால் உங்கள் வயிற்றுக்குள் அது தவளையாக வளரும். அவை எப்படியாவது உங்கள் தொண்டை வழியாக வெளியேறத் துடிக்கும். இதன் காரணமாக நீங்கள் கடுமையாக இருமுவீர்கள். அல்லது உங்கள் தொண்டை பாதிக்கப்படும்.

அதாவது உங்கள் தொண்டை பாதிப்பு காரணமாக உங்களால் தெளிவாகப் பேச முடியவில்லை என்றால் உங்களைப் பார்த்து யாராவது “You have a frog in your throat” என்று கூறக் கூடும்.

I always had raspy voice. Even when I was a child, other children would ask if I had a frog in my throat.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x