Published : 03 Apr 2018 10:36 AM
Last Updated : 03 Apr 2018 10:36 AM
கேட்டாரே ஒரு கேள்வி
Tie the knot என்றால் திருமணம் செய்துகொள்வதைக் குறிக்கிறது. ஐரோப்பியர்களுக்குத் திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் கிடையாது. பின் எப்படி?
இது மூன்று முடிச்சு தொடர்பானது அல்ல வாசகரே.
ரோமானியப் பேரரசில் ஒரு காலத்தில் திருமணச் சடங்கின்போது இறுக்கமான ஒரு உடையை மணப்பெண் அணிந்து வருவார். அதன் இரு முனைகளில் தொங்கும் சிறு கயிறுகளை (belt) மணமகன் முடிச்சுபோடுவார். இப்படிச் செய்தால் அந்தத் திருமணம் நடந்துவிட்டதாக அர்த்தம். ஐரோப்பாவில் வசிக்கும் செல்டிக் (Celtic) மொழி பேசுகிறவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் திருமணச் சடங்கின்போது மணமக்களின் கைகளை இணைத்து துணியால் கட்டி அவர்களது உறவினர்கள் முடிச்சுபோடுவார்கள். அப்போது திருமண ஒப்பந்தத்தில் தாங்கள் ஈடுபடுவதாக மணமக்கள் சொல்ல வேண்டும். இல்லைஎன்றால் அந்தத் திருமணம் சட்டப்பூர்வமானதாக ஆகாது. இதிலிருந்தும் ‘tying knot’ என்பது உருவாகியிருக்கலாம்.
************
He is ailing என்றால் என்ன பொருள்?
அவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று பொருள். She had been ailing for years and died yesterday. சங்கடம் அல்லது பிரச்சினைகள் உருவாவதையும் ail என்கிறார்கள். What ails the country? The Government seems to have no understanding.
Hail என்பது வேறு. மழைபோல பொழியும் ஆலங்கட்டிகளை hails என்பதுண்டு.
A hail of bullets, a hail of insults எனும்போது hail என்பதற்கான பொருள் கூட இந்த அர்த்தத்தில்தான் கூறப்படுகிறது.
************
“The richest places in the world are bonsai states - Singapore, Brunei, Monaco” என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். Bonsai என்ற அர்த்தத்தைவைத்துப் பார்க்கும்போது இந்த மூன்று நாடுகளையும் சிறியவை என்ற பொருளில்தானே குறிப்பிடுகிறார்கள்?”.
ஒருவிதத்தில் உண்மைதான். ஜப்பானிய மொழியில் போன்சாய் என்றால் ‘சிறிய மரம்’ என்று பொருள். அதாவது தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள். சிறியதாக மட்டுமில்லாமல் முழுமையான (அதாவது வளம் நிரம்பிய) நாடுகளாக இருப்பதால்தான் இந்த மூன்று நாடுகளையும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். (தொட்டிகளில் வளர்ந்தாலும் அது மரக்கிளை அல்ல, முழுமையான மரம்தான்). மற்றபடி சிறிய நாடு என்பதை மட்டுமே அளவீடாகக் கொண்டால் வேறு பல சிறிய பரப்புள்ள நாடுகளை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியும்.
************
“I have given you a blank cheque” என்று ஒரு ஆங்கில நாவலில் தந்தை தன் மகளைப் பார்த்து சொன்னதாக ஒரு வசனம் வருகிறது. இரண்டு இளைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்டு இவர்களில் ஒருவரை இன்னும் ஒரு வாரத்தில் தான் மணமுடிக்கத் தேர்ந்தெடுக்கப் போவதாகக் கூறுகிறார் மகள். அதற்குத்தான் அப்படி அப்பா பதிலளிக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? ஒரு blank cheque-க்குக்கு என்ன மதிப்பு இருந்துவிட முடியும்?
வாசகரே Blank Cheque என்றால் முழுவதும் வெற்றுக் காசோலை அல்ல. அது கையெழுத்து (மட்டும்) இடப்பட்ட காசோலை. எனவே, மவுசு அதிகம். இப்படி ஒரு காசோலையை ஒருவர் உங்களுக்குக் கொடுத்தால், அதில் நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நிரப்பி அந்தத் தொகையை அவர் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல ஒருவருக்கு blank cheque கொடுக்கப்படுகிறது என்றால் எந்த முடிவை அவர் எடுத்தாலும் தனக்குச் சம்மதம் என்றும் பொருள். நீங்கள் சொன்ன கதையில் இரு இளைஞர்களில் தனக்கு யார் பொருத்தமானவர் என்பதை மகள் தேர்ந்தெடுக்கலாம், அதில் தனக்கு முழுச் சம்மதம் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் Blank Cheque என்ற வார்த்தையைத் தந்தை பயன்படுத்துகிறார்.
************
பலரும் தவறாக உச்சரிக்கும் வார்த்தை என்று எதைக் குறிப்பிடலாம் என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
எந்தக் கணக்கெடுப்பும் நடத்தவில்லை. ஆனால், பளிச்சென்று நினைவுக்கு வருவது creche என்ற வார்த்தைதான். குழந்தைகள் காப்பகம் என்பதை உணர்த்தும் இந்த வார்த்தையை ‘க்ரீச்’ என்கிறார்கள். அதை ‘க்ரெஷ்’ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.
“Casino என்பதில் sin இருப்பதாக ஒரு வாசகர் குறிப்பிட்டதை நீங்கள் பகிர்ந்துகொண்டீர்கள். அதை விடுங்கள். Slaughter என்பதில் laughter இருப்பதைக் கவனித்தீர்களா?” என்கிறார் ஒரு வாசகர்.
Slaughter என்பது வெட்டிக் கொல்லுதல். அந்த வார்த்தைக்குள் பெரும் சிரிப்பு ஒளிந்திருப்பது வினோதம்தான்.
ஆனால் நண்பரே, தோழருக்குள் பேய் இருக்கிறதே! அலைந்து திரிவதற்குள் ஒரே இடத்தில் தங்குவது இருக்கிறதே! விருந்துக்குள் பட்டினி இருக்கிறதே! இதற்கெல்லாம் என்ன சொல்வீர்கள்?
************
Cleaning, cleansing ஆகிய இரு வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
Clean, cleanse ஆகிய இரு வார்த்தைகளின் அர்த்தமும் சுத்தப்படுத்துவது - அதாவது அழுக்கை அகற்றுவது என்பதுதான்.
Clean என்பது செயல்முறையில் சுத்தப்படுத்துவதைக் குறிக்கப் பயன்படுகிறது. cleaning the floor, cleaning the dishes என்பதுபோல.
Cleanse என்பது ஓர் உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. Cleansing your soul, cleansing of a bad memory என்பதுபோல.
‘சுத்தமாக்குதல்’ என்ற அர்த்தத்தோடு நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாத ஒரு விதத்திலும் cleanse என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு பகுதியிலிருந்து குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த மக்களை நீக்குவதையும் cleanse என்று குறிப்பிடுவதுண்டு.
************
Putting words into someone’s mouth என்பதன் பொருள் என்ன?
“I never said you should resign. Do not put words in my mouth” என்றால் ‘நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்று நான் கூறவில்லை. நான் கூறியதாக நீங்களாகவே எதையோ சொல்ல வேண்டாம்’ என்று அர்த்தம். அதாவது ஒருவர் கூறியதைத் தவறாகத் திரித்துக் கூறுவது என்று இதற்குப் பொருள்.
சாட்சி கூற வந்ததை வழக்கறிஞர் திரித்துக் கூறுவதை நீதிபதி கண்டிக்கலாம். The lawyer was scolded for putting words into the witness’ mouth.
************
இந்த இதழின் முன்னொரு கேள்வி தொடர்பாக நான் குறிப்பிட்ட வார்த்தைகள் – Friend – fiend, Stray – stay, Feast – fast ஆகியவைதான் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.
தொடக்கம் இப்படித்தான்
அமெரிக்காவை Big Brother என்கிறார்களே அதற்குப் பொருள் என்ன எனக் கோருகிறார் வாசகர் ஒருவர்.
பிரபல ஆங்கில நாவலாசிரியரான ஜார்ஜ் ஆர்வெல் ‘1984’ என்ற தலைப்பில் ஒரு புதினத்தை எழுதினார். அதில் இடம் பெற்ற ஒரு சர்வாதிகாரியின் பெயர்தான் Big Brother. தன் நாட்டின் அனைத்துக் குடிமக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் Big Brother. ஒரு மின்னணு சாதனத்தின் மூலம் ஒவ்வொருவரின் அசைவுகளையும் அவரால் கவனிக்க முடிகிறது. எதிராளி எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் பயனில்லாமல்போகிறது. இதனால், அதிகாரம், கொடுங்கோன்மைக்குக் குறியீடாக Big Brother என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.
மற்றபடி அமெரிக்கா Big Brother-ஆ, இல்லையா என்பது இந்தத் தொடருக்கு அப்பாற்பட்ட விஷயம்.
சிப்ஸ்
# Nice love என்பதன் anagram என்னவென்று தெரிகிறதா?
அட ஆமாம், violence!
# அரதப் பழசான கதைகளை நாவல் என்று கூறுவது அபத்தமாக இல்லையா?
Novel என்றால் ‘புதுமையான’ என்ற கோணத்தில் யோசிக்கும்போது உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
# சிறிய வார்த்தைகள் இருக்கும்போது நீளமான வார்த்தைகளை எதற்குப் பயன்படுத்த வேண்டும்?
வேண்டாம்தான். எனக்கும் Hippopotomonstrosesquippedaliophobia உண்டு. (இந்த வார்த்தைக்குப் பொருள் வார்த்தைகள் பற்றி அதீதப் பயம்).
- தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT