Last Updated : 10 Apr, 2018 11:44 AM

 

Published : 10 Apr 2018 11:44 AM
Last Updated : 10 Apr 2018 11:44 AM

இணைய வழிக் கல்வி: வந்துவிட்டார்கள் ‘ஹைபிரிட்’ ஆசிரியர்கள்!

ற்பித்தல் என்னும் கலை எல்லா ஆசிரியர்களுக்கும் எளிதில் கைகூடிவிடுவதில்லை. எவ்வளவு கடினமான பாடமாக இருந்தாலும் அதை வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் புரிந்துகொள்ளும்படி நடத்த ஒரு தேர்ந்த ஆசிரியரால் மட்டுமே முடியும். மாணவர்களின் அறிவாற்றலின் அளவையும் கற்கும் திறனையும் மீறி அனைவரையும் படிப்பில் மேம்படுத்த அவர்களால் முடியும். ஆனால், எல்லாப் பள்ளிகளிலும் அத்தகைய திறன்மிக்க ஆசிரியர்கள் இருப்பதில்லை. இணைய வழிக் கல்வி இந்த இடைவெளியை இட்டு நிரப்ப உதவுகிறது.

இணைய வழிக் கல்வி என்றால்?

திறன்மிக்க ஆசிரியர்களின் விளக்க உரைகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி வீடியோக்கள் அதற்கென இருக்கும் குறிப்பிட்ட இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு, எட்டாம் வகுப்பு அறிவியல், ‘ஹீட் அண்ட் மாஸ் டிரான்ஸ்பர்’, ‘ஜாவா ஸ்கிரிப்ட்’ ஆகியவை.

மேலும், அந்தத் தளங்களில் கல்வி மட்டுமில்லாமல் தொழில்நுட்பம், பொது அறிவு, பொழுதுபோக்கு ஆகியவை குறித்த விளக்க வீடியோக்களும் இருக்கும். உதாரணத்துக்கு, ஒளிப்படம் எடுப்பது எப்படி?, கணினியை ஒன்றிணைப்பது எப்படி?, கைப்பேசியில் இருக்கும் சில ஆப்களைப் பயன்படுத்துவது எப்படி?

இணைய வழிக் கல்வி வகைகள்

பாடங்கள் அனைத்தையும் இணையத்தின் வழிதான் படிக்கிறோம் என்றாலும், அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்ட காலம் மட்டும் ஆசிரியருடனான நேரடி தொடர்பு ஆகியன சார்ந்து அதைப் பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகையில் பாட வீடியோக்கள் முன்பே எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இரண்டாம் வகையில் வீடியோ லைவ் ஆக, அதாவது நடப்பு காலத்தில் நிகழ்கிற ஒன்றாக இருக்கும். இந்த இரண்டு வகை கல்விதான் இணையத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

மூன்றாம் வகையில் வீடியோவில் படிப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது அந்த ஆசிரியரையும் நேரில் சந்திக்கும்படி இருக்கும். இது ஹைபிரிட் கல்வி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹைபிரிட் கல்வியை மேல் நாடுகளில் பிரபலப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துகின்றன.

எப்படிப் பயன்படுத்தலாம்?

எல்லா இணையதளங்களிலும் இத்தகைய விளக்க வீடியோக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால், ஆசிரியரின் திறன் மட்டும் அவருடைய வீடியோக்களுக்கு இருக்கும் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் சில இணையதளங்களில் சில வீடியோக்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அனைத்து வீடியோக்களின் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் கொடுத்து இருக்கும் மதிப்பீடுகள் அவற்றின் அருகில் ஒளிர்ந்துகொண்டிருக்கும். அதன் அடிப்படையில் நீங்கள் விரும்பும் பாடங்களுக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் ஏமாற்றம் அளிக்காது.

ஒருவேளை அவை கட்டண வீடியோவாக இருந்தால், கட்டணம் செலுத்தும்முன் அதன் மாதிரி வீடியோக்களைப் பார்த்துவிட்டு வாங்குவது நல்லது. ஏனென்றால், எல்லோருக்கும் பிடிக்கும் ஆசிரியர் உங்களுக்கும் பிடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கல்வியின் வடிவமைப்பு

உதாரணத்துக்கு ஜாவா ஸ்கிரிப்ட்டை எடுத்துக்கொள்வோம். இதற்கான வீடியோ 180 நிமிடங்கள் ஓடும் என்று வைத்துக்கொள்வோம். மூன்று மணிநேரம் திரைப்படம் பார்ப்பதே அலுப்பாக மாறியுள்ள இன்றைய காலத்தில் மூன்று மணி நேரம் படிப்பு சம்பந்தப்பட்ட வீடியோ என்பது எவ்வளவு அலுப்பானதாக இருக்கும்? ஆனால், இந்த வீடியோ ஒரு நொடி கூட அலுப்பு ஏற்படாமல் இருக்கும்படி நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

முதலில் ஜாவா ஸ்கிர்ப்ட் 20 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பிறகு அதன் ஒவ்வொரு பகுதியும் பத்து தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அதாவது ஒரு தலைப்புக்கு ஒன்றரை நிமிடம், பத்து தலைப்புகள் உள்ளடக்கிய ஒரு பகுதிக்கு 9 நிமிடங்கள், 20 பகுதிகள் உள்ளடக்கிய மொத்த பாடத்துக்கு 180 நிமிடங்கள். இதில் ஆசிரியரின் முகத்தை மட்டும் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் அவசியம் இருக்காது. இணையவழி என்பதால், அந்தப் பாடத்துக்குத் தொடர்புடைய சில வீடியோக்களும் உங்களுக்கு விளக்கமளிக்கப் பயன்படுத்தப்படும். இது உங்கள் கற்றலை எளிதாக்கி அலுப்பை நீக்கிப் படிப்பைச் சுவாரசியமானதாக மாற்றும்.

வீடியோ கேம் போலத் தேர்வு

இணையவழிக் கல்வியிலும் தேர்வுகள் உண்டு. ஆனால், அந்தத் தேர்வுகள் உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்வதற்காக மட்டும்தான் இருக்கும்.எனவே, புற அழுத்தம் ஏதுமின்றி, வீடியோ கேம் விளையாடுவது போன்று எளிதாகவும் விளையாட்டாகவும் நீங்கள் தேர்வு எழுதி மகிழலாம்.

ஒவ்வொரு தலைப்புக்கும் ஒன்றரை நிமிடத்துக்கு ஒரு முறை, ஒரு நிமிடமே பிடிக்கும் ஒரு சிறு தேர்வு இருக்கும். அந்தத் தேர்வு எளிதானதாகத்தான் இருக்கும். ஒருவேளை ஏதேனும் கேள்விக்குத் தவறாக விடையளிக்க நேர்ந்தால், அந்தக் கேள்விக்கு விடை இருக்கும் வீடியோவின் பகுதிக்கு உங்களை அழைத்துச் சென்று உங்களுக்கு விளக்கமளித்து மீண்டும் தேர்வுக்கு அழைத்து வரும்படி அதன் வடிவமைப்பு இருக்கும். எப்படி ஒவ்வொரு தலைப்புக்கும் தேர்வு இருக்கிறதோ அதைப் போல் ஒவ்வொரு பகுதிக்கும் மொத்த பாடத்துக்கும் தனித் தனித் தேர்வு இருக்கும்.

ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கலாம்

நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி, இன்றும் பள்ளிகளின் தரத்தைத் தீர்மானிப்பது அவற்றின் தேர்ச்சித் திறன்தான். ஆனால், அந்தத் தேர்ச்சித் திறனைத் தீர்மானிப்பதோ ஆசிரியரின் கற்பிக்கும் திறன். பள்ளியையோ கல்லூரியையோ தேர்ந்தெடுக்க முடிந்த மாணவர்களாலும் பெற்றோராலும் அந்தப் பள்ளியின் ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இணையவழி கல்வியில் என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? என்பதோடு, எந்த ஆசிரியரிடம் படிக்கலாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்க முடியும். முக்கியமாக ஆசிரியரை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x