Published : 11 Aug 2014 10:00 AM
Last Updated : 11 Aug 2014 10:00 AM
வேலையில் சேர அல்லது சேராதிருக்க எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால் அந்த தாயார் சொன்ன காரணம் எனக்கு முக்கியமாகப்பட்டது.
“என் மகன் ஐ.டி. கம்பனியில மட்டும் சேர வேண்டாம். வேற எந்த வேலைன்னாலும் பரவாயில்லை.”
ஏன் இந்த வெறுப்பு என்று கேட்டேன். வெறுப்பு இல்லை, பயம் என்றார். ஐ.டி கம்பனியில் பணியாற்றும் தன் சகோதரி மகனுக்கு முப்பது வயதிலேயே ரத்தக்கொதிப்பு வந்தது. அது அவரை மிகவும் பாதித்திருந்தது. “ஒரே இடத்துல பத்து மணி நேரம் உக்காந்துட்டு ஒரே இடத்தைப் பாத்து வேலை செஞ்சால் நோய் வராம என்ன பண்ண முடியும்? என்று கேட்டார். அதனால்தான் இந்த முடிவு” என்றார்.
எல்லாத் துறைகளிலும் இப்போது கம்ப்யூட்டர் பயன்பாடு உண்டு. அதையே பார்த்து வேலை செய்தல் பெரும்பாலான இடங்களில் தவிர்க்க முடியாது. இன்றைய வாழ்க்கை முறையில் இயந்திரங்கள் இல்லாத இடமே இல்லை என்றெல்லாம் என்னுடன் இருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் அந்தக் கிராமத்துத் தாய் தீர்மானமாகச் சொன்னார்: “ஆரோக்கியம் கெடும்னா அந்த வேலையே வேண்டாம்!”
அவரது பயத்திலும் பிடிவாதத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் யதார்த்தத்தில் எந்த வேலையையும் ஆரோக்கியம் காரணமாகப் புறக்கணிக்க முடியாத பொருளாதார நிர்பந்தங்களில்தான் பலர் இருக்கிறோம்.
எதிர்பார்ப்புகள்
தொழில்நுட்ப நிறுவனங்கள் மாணவர்களிடமும் இளைய தலைமுறையினரிடமும் மிகுந்த கவர்ச்சிகரமான எதிர்பார்ப்புகளை வளர்க்கின்றன. ஒரு கனவு லோகத்தை எதிர்பார்த்து அவர்கள் அங்கு உள்ளே நுழைகிறார்கள்.
எல்லாச் சலுகைகளும் வசதிகளும் ஒரு மாதத்தில் அலுத்துவிடுகின்றன.
உடலின் பெரும்பான்மையான உறுப்புகளுக்கு வேலை இல்லை; சில பகுதிகளுக்கு அளவுக்கு அதிகமான பளு எனும் போது வலிகள் மூலம் அந்த உடல் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. அது தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது நோய்கள் மூலம் ஒத்துழையாமையைக் காட்டுகிறது. ஆனால் நம்மவர்கள் இந்த உடலின் மொழி புரியாமல் அதன் நலனுக்கு எதிராகவே பணியாற்றுகிறார்கள்.
இதில் விந்தையான விஷயம் என்னவென்றால் கணினி பயன்படுத்தப்படும் எல்லா நவயுக நிறுவனங்களிலும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகம் உண்டு. அலுவலகத்திலேயே ஜிம் இருக்கும். டயட் லஞ்ச் கிடைக்கும். யோகா கிளாஸ் நடத்துவார்கள். ஆனால் இவை ஒரு சதவீத மக்களைக் கூட போய்ச்சேருவதில்லை என்பது தான் வருத்தமான உண்மை.
உடல்நலக் கேடுகள்
என் கருத்து இதுதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலையில் என்னென்ன உடல் நலக் கேடுகள் வரும் சாத்தியங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளுதல் அவசியம். பணி சார்ந்த இடர்பாடுகளும் ஆபத்துகளும் பெரும்பாலும் வேலை தேடலின் போது இங்கு பேசப்படுவதே இல்லை.
அதிகம் பயணம் செய்யும் விற்பனைக்காரர்களுக்குப் பயிற்சி தரும் போதெல்லாம் அவர்கள் ஆரோக்கியம் பற்றியும் நிறைய பேசுவேன். புதிதாக வேலைக்குச் சேருவோர்க்கு அதன் பணி சார்ந்த இடர்பாடுகள் பற்றி எடுத்துரைத்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் சொல்லித் தர வேண்டியது நிறுவனங்களின் கடமை.
தாம் செய்யப்போகும் வேலையின் நிறைகுறைகளை நன்கு உணர்ந்து வேலைக்குச் சேருவோர் அவ்வளவு விரைவில் வேலையை விட்டு விலக மாட்டார்கள்.
சமீபத்தில் ஒரு பஞ்சாலையில் ஆய்வு நடத்தினோம். அங்கு பணிக்குச் சேருவோரில் பலர் முதல் நாளே பணியைவிட்டு விலகுவதாக அறிந்தோம். ஏன் என்று காரணத்தைத் தெரிந்துகொள்ளக்கூட மறு நாள் அவர்கள் வேலைக்கு வந்தால்தானே நமக்குத் தெரியும்.அதுவும் கிடைக்காத நிலை. பிறகு ஊர் பக்கத்தில் போய்ப்பேசியபோதுதான் தெரிந்தது.பஞ்சாலையின் இரைச்சலான சத்தத்திற்குப் பயந்தே பெரும்பாலான சின்ன வயது பெண்கள் மறு நாளே வேலையை விட்டு சென்றுள்ளனர்.
இதைப் பற்றி பேசும் போது மில்காரர்கள், முன்பிருந்த ஒலி அளவும் தூசும் மிகப் பெருமளவுக்கு குறைந்துவிட்டது இந்தக் குற்றச்சாட்டு நியாயமில்லை என்றார்கள். ‘வரலாறு நமக்குத் தெரியும் வந்து சேரும் பெண்கள் வீட்டின் சத்தத்தையும் மில் சத்தத்தையும் தான் ஒப்பிடுவார்கள்’ என்று சொன்னேன். வேலைக்கு ஆள் எடுக்கும் போது நாம் அளிக்கும் வசதிகள் எல்லாம் சொல்கின்றபோது இதையும் சேர்த்துச் சொல்லியிருந்தால் நம் மக்கள் மனதளவில் தயார் நிலையில் வருவார்கள் என்று பரிந்துரைத்தேன்.
முன்னரே சொல்லுங்கள்
இது எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். உங்கள் பணியிடம் அல்லது துறையின் இடர்பாடுகளையும் ஆரோக்கியக்கேட்டிற்கான சாத்தியக்கூறுகளையும் வேலைக்கு சேரும் முன் எடுத்துச் சொல்லுங்கள். அதைக் கையாள உங்கள் நிறுவனம் என்ன செய்கிறது என்றும் சொல்லுங்கள்.
பக்கத்து சீட் பெண்ணுடன்
லவ் பண்ணுவதும் பாதி நேரம் காபி குடிப்பதும் அரட்டை அடிப்பதும் தான் ஐ.டி. கம்பனி வாழ்க்கை என்று தொலைக்காட்சி சீரியல் பார்த்துவிட்டு நினைக்கும் சாமானிய மாணவர்கள், ஒரு இண்டர்ன்ஷிப்பிற்காவது ஒரு நிஜக் கம்பனியை நேரில் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் நிதர்சனம் புரியும்.
எல்லா வேலைகளிலும் பாதுகாப்பு, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் உண்டு. ஆங்கிலத்தில் Safety, Health & Environment (SHE) என்று சொல்வார்கள். இதை வேலைக்குச் சேர்வோர்
முதலில் புரிந்து கொள்ளவேண்டும். நிறுவனங்களும் வேலைக்கு சேரும் முன்னரே இவற்றைப் புரியவைப்பது அவர்கள் கடமை.
மவுலிவாக்கம் விபத்து
(அது விபத்தா?) எவ்வளவு கொடூரமானது? அங்கு பணியாற்றிய யாருக்காவது தங்கள் பணியின் பாதுகாப்பு பற்றியோ ஒரு ஆபத்தில் என்ன செய்ய வேண்டும் என்றோ தெரிந்திருக்குமா? எத்தனை உயிர்கள் பறிபோயின இதனால்?
என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் எல்லா நிலைப் பணிகளிலும் ஆபத்து உள்ளது. சட்டம் கட்டாயப்படுத்தினாலன்றி பாதுகாப்பு பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை நிறுவனங்கள். பணியால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் இங்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நீங்கள் விரும்பும் வேலையில் என்னெவெல்லாம் பாதிப்புகள் நேரலாம் என்று அறிந்து கொள்வது அவசியம்.
அலைகளின் வேகம் தெரிந்து விட்டால் அதற்கேற்ப கட்டுமரம் செலுத்தலாம் அல்லவா?
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT