Published : 27 Feb 2018 10:51 AM
Last Updated : 27 Feb 2018 10:51 AM
இ
த்தாலியைச் சேர்ந்த கக்லீல்மோ மார்க்கோனி அட்லாண்டிக் கடல் பரப்பில், இன்றைய கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டுக்கும் இங்கிலாந்தின் கான்வெல்லுக்கும் இடையில் 1901 டிசம்பர் 12-ல் கம்பியில்லாச் செய்தியை அனுப்பி, தொலைத் தொடர்புத் துறையில் இமாலயச் சாதனை செய்தார். இன்றைக்குள்ள எல்லாத் தொலைதொடர்புக்கும் இந்தக் கண்டுபிடிப்பு முன்னோடியானது.
அறிவியலின் மகத்தான இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புக்கான மூலவர், ஒரு இந்தியர். இன்னும் சொன்னால், அவர் மார்க்கோனிக்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு உரித்தானவரும்கூட. அவர்தான் சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.
தாவரவியல், இயற்பியல் ஆகிய இரு துறைகளிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். முதன் முதலில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பைக் கண்டுபிடித்தவர் இவர்தான். அதற்கு ஐந்தாண்டுளுக்குப் பிறகுதான் மார்க்கோனி தனது கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவிக்கிறார்.
போஸின் கண்டுபிடிப்பு
ஹோஹெரர் (Coherer) என்னும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது கம்பியில்லாத் தொலைத்தொடர்பில் முக்கியமானது. ஆனால், இந்தக் கருவியைப் பயன்படுத்தி கம்பியில்லாத் தொடர்பை போஸுக்கு முன்னர் யாரும் செய்திருக்கவில்லை. அன்றைய கொல்கத்தாவில் போஸின் தனிப்பட்ட ஆய்வுக்கூடத்தில் தனியொரு மனிதனாக மின்காந்த அலைகள் குறித்த ஆராய்ச்சியின் மூலம் உலகின் முதல் கம்பியில்லாச் செய்தியைச் சோதித்து வெற்றிகண்டார்.
ஒரு ‘U’ வடிவ இரும்புக்கு இடையில் குறைகடத்திப் (semiconductor) பொருளான பாதரசத்தை வைத்தார். இந்த இரும்புக் கம்பியின் ஒரு முனை மின் இணைப்பில் இருக்கும். ஒன்றின் மூலம் மின் காந்த அலைகள் ஈர்க்கப்படும். ஈர்க்கப்படும் நேரத்தில் இந்த இரு இரும்புகளுக்கும் இடையில் பாதரசத்தின் வழி மின்சாரம் கடத்தப்படும். இதுதான் போஸ் கண்டுபிடித்த ஹோஹெரர்.
அதாவது, மின்காந்த அலைகளைப் பெறும் உபகரணம். இதைக் கொண்டு 1896-ல் அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் முன்னிலையில் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலிருந்து கொல்கத்தா அறிவியல் கல்லூரிவரைக்கும் 3 கி.மீ. தொலைவுக்கு மின்காந்த அலைகளை அனுப்பி சோதித்தார்.
ஆனால், போஸ் இதற்கான உரிமைத்தை உடனடியாக வாங்கவில்லை. இந்த உபகரணத்தில் எப்படிப் பாதரசம் பயன்பட்டதோ அப்படித்தான் மார்க்கோனியும் பயன்படுத்திஇருக்கிறார்.
தொலைதூர மின்காந்த அலைகளை ஈர்க்க போஸ் படிகத்தைப் பயன்படுத்தினார். பின்னால் படிக டையோடு (Crystal Diode) கண்டுபிடிக்கப்பட போஸின் கண்டுபிடிப்பு ஆதாரமாக இருந்தது. டையோடு தொழில்நுட்பத்திலிருந்துதான் டிரான்ஸிஸ்டர் எனப்படும் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இவைதான் மின்னணுவியல் கண்டுபிடிப்புகளில் பல ஆச்சரியங்களுக்கும் அடிப்படைக் காரணம்.
எப்படிக் கசிந்தது போஸின் கண்டுபிடிப்பு?
1899-ம் ஆண்டு போஸ், ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டனில் உரை நிகழ்த்துவதற்காக லண்டன் சென்றார். அங்கு தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கினார். அந்த உரையை மார்க்கோனியின் அறிவியல் ஆலோசகரான ஜான் அம்புரோஸ் பிளெம்மிங் உட்பட அறிஞர்கள் பலர் கேட்டனர். இந்தக் காலத்தில் மார்க்கோனி இங்கிலாந்தில் இருந்தார்.
இரண்டாண்டுகளில் 1901-ல் மார்க்கோனி தனது கம்பியில்லாத் தொலைத்தொடர்பு சாதனையை நிகழ்த்தினார். ஆனால், அவர் மின்காந்த அலைகளைப் பெறும் உபகரணம் செயல்படும் விதம் பற்றிய விளக்கத்தைச் சொல்ல முடியவில்லை. அப்படியான கேள்விகளுக்கு அவருடைய நண்பரான கப்பல் பொறியாளர் சொலரி உருவாக்கித் தந்தது என்று சொல்லிவந்தார். ஆனால், சொலரியாலும் அதை விளக்க முடியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலட்ரானிஸ் இன்ஜினீயரிங் மையத்தின் மூத்த உறுப்பினர் பி.கே.பந்தோபாத்யா இதைத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
1980-ம் ஆண்டு ‘தி நியூயார்க் டைம்’ஸில் வெளியான கட்டுரை மார்க்கோனி, தனக்கு மட்டும் என இந்தக் கண்டுபிடிப்பைச் சொந்தம் என்று சொல்ல முடியாது எனக் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து மனமுடைந்த மார்க்கோனியின் மகளான மார்க்கோனி ப்ரகா கேட்டுக்கொண்டதற்கிணங்க, பந்தோபாத்யா இந்த அறிவியல் மோசடியை ஆராயத் தொடங்கினார். அதன் முடிவு மார்க்கோனியின் அறிவுத் திருட்டை அம்பலப்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT