Published : 06 Feb 2018 12:09 PM
Last Updated : 06 Feb 2018 12:09 PM
பி
ப்ரவரி 1 அன்று, 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரின் பட்ஜெட் தொடக்க உரையில், “அரசால் குழந்தைகளுக்குப் பள்ளிகளை உருவாக்க முடிந்திருக்கிறது. ஆனால், கல்வியின் தரம் இன்னும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. அடிப்படைக் கல்வியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை எனப் பிரித்துப் பார்க்காமல் கல்வியை முழுமையாக அணுக வேண்டும்” என்று தெரிவித்தார். கல்வித் துறைசார்ந்த மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, கல்வி என மூன்று துறைகளுக்கும் சேர்த்து ரூ. 1.38 லட்சம் கோடி இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
உள்கட்டமைப்பு, கல்வி முறைகளின் மறுமதிப்பீடு (RISE) திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தவிருப்பதாக அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின்கீழ் ஆராய்ச்சி, வளர்ச்சிக்காக ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் துறையில் கணினிமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவிருக்கிறது. கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் பலகைக்குக் கல்வித் துறை மாறவிருக்கிறது.
‘திக் ஷா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி பெறாத 13 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. ஒருங்கிணைந்த ‘பி.எட்’ என்ற புதிய திட்டமும் ஆசிரியர்களுக்காகத் தொடங்கப்படவிருக்கிறது.
பழங்குடியினரின் கல்வி தொடர்பாக, 2022-ம் ஆண்டுக்குள் பட்டியல் பழங்குடியினர் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் இடங்களில் நவோதயா பள்ளிகளுக்கு இணையாக ‘ஏகலைவா’ பள்ளிகள் தொடங்கப்படவிருக்கின்றன.
உயர்கல்வியில் ‘பிரதமர் ஆராய்ச்சி உதவி’ திட்டத்தின்கீழ் 1,000 பி.டெக் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.
24 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவிலான மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படவிருக்கிறது.
கட்டிடக் கலைக்கான இரண்டு புதிய கல்வி நிறுவனங்களும் 18 புதிய ஐஐடி, என்ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களும் தொடங்கப்படும் என்றும் இந்த பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் இந்த பட்ஜெட்டில், கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதுபோல அசலுக்கும் அளிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT