Published : 20 Feb 2018 11:15 AM
Last Updated : 20 Feb 2018 11:15 AM
விளிம்பு நிலையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பள்ளிப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதுடன், உள் ஒளி மையங்களின் மூலமாகக் குழந்தைகளுக்குத் தற்காப்புப் பயிற்சி, ஆங்கில மொழிப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகளை அளித்துவருகிறது, ‘ரூரல் ஆர்கனைசேஷன் ஃபார் ஆக்ஷன் அண்ட் டெவலப்மெண்ட்’ (ரோட்) தொண்டு நிறுவனம்.
ஆசிரியராகும் வேலையில்லாப் பட்டதாரி
1979-ல் கடலூரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் தற்போதைய செயலர் அமிர்தவல்லி கூறும்போது, “முறைசாராக் கல்வி மையங்களைத் தொடங்கி வாய்ப்பு மறுக்கப்பட்ட பல குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கியது ரோட் அமைப்பின் பணி. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளிம்புநிலை மக்களில் பலர் பட்டதாரிகளாக இருந்தாலும் சுனாமிக்குப் பிறகு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக மாறியது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பட்டதாரிகளின் மூலம் கல்வி வழங்க உள் ஒளி மையங்களை அமைத்தோம்.
பள்ளிப் பாடங்களைப் படிப்பதற்கு ஒரு மணி நேரம், ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு ஒரு மணி நேரம் என்ற விதத்தில் கல்வி அளிக்கிறோம். 15 கிராமங்களில் உள் ஒளி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்குத் தாய்-தந்தை இருவரும் இருக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து ரூ.300 கட்டணம் பெறப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.1,500 மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் பங்கேற்புடன் எங்களுடைய மையங்கள் செயல்பட்டுவருகின்றன” என்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் ஆதிவராக நல்லூர், கோதண்டராமபுரம், பண்ணப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவஸ்தானப் பள்ளி, உத்தனப்பள்ளி உட்பட ஏறக்குறைய 15 கிராமங்களில் இவர்களின் உள் ஒளி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. “தற்போது எங்கள் அமைப்பின் மூலம் 900 குழந்தைகள் பயனடைகின்றனர். இதில் எச்.ஐ.வி. பாதிப்புள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்குச் சத்துணவையும் அளிக்கிறோம்.
நேரடிப் பணியாளர்களாக 20 பேரைக் கொண்டும் தேவைக்கு ஏற்ப 5 சிறப்புப் பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டும் குழந்தைகளுக்கு நீச்சல் உட்படப் பல பயிற்சிகளை அளிக்கிறோம்” என்கிறார் அமிர்தவல்லி. தேசியத் திறனறித் தேர்வில் இதுவரை இவர்கள் உருவாக்கிய 31 மாணவர்கள் தேர்வடைந்துள்ளனர் என்பது இவர்களுடைய விடாமுயற்சிக்கான சான்று!
தொடர்புக்கு: 9489050701
‘ரோட்’-ன் மைல்கல்
# 2015-2016-ம் ஆண்டில் 47 மாணாக்கர்களுக்குத் தேசிய திறனறித் தேர்வு பயிற்சியளித்து, தேர்வெழுதவைத்தது.
# 2015 - 2016-ம் ஆண்டில், விளையாட்டு விடுதிகளில் மாணாக்கர்களுக்குப் பயிற்சியளித்து மாவட்ட தேர்வில் 42 குழந்தைகளை வெற்றிபெறச் செய்தது.
# 2016 – 2017-ம் ஆண்டில் ‘பெண்களைப் பாதுகாப்போம் படிக்க வைப்போம்’ திட்டத்தின் மூலம் 1,100 பெண் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்தது.
# இருளர், ஆதி திராவிட நலப் பள்ளிகள் மூலம் பெண் குழந்தைகளுக்குப் பயற்சியளித்து அவர்களைத் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவைத்தது.
# கடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘தி இண்டஸ் ஸ்கூல் ஆஃப் லீடர்ஷிப்’ (ISL) உடன் இணைந்து மாணவர்கள், ஆதரவற்ற விளிம்புநிலைக் குழந்தைகளுக்கு, தலைமைப்பண்புக்கான பயிற்சியளித்தது. இதனால் பள்ளி விழாக்களில் பங்கேற்கத் தயங்கும் குழந்தைகள்கூட மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சிகள், மாநில தேசிய போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT