Last Updated : 23 Jan, 2018 11:32 AM

 

Published : 23 Jan 2018 11:32 AM
Last Updated : 23 Jan 2018 11:32 AM

ஆளுமை மேம்பாடு: உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பி

றர் மனம் நோகாமல் இனிமையாக நடந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆனால், நல்லவர் என்று பெயரெடுக்கும் முனைப்பில் நம்முடைய இயல்பையும் தனித்துவத்தையும் இழக்காமல் இருக்க வேண்டியது அதைக்காட்டிலும் அவசியம். நம்முடைய விருப்பு வெறுப்பை மறைத்து நம்முடைய நிலைப்பாட்டைப் பிறருக்காக மாற்றிக்கொள்வது தவறான செயல். நம்முடைய இயல்புக்கு எதிரான எந்த ஒரு செயலும் மன உளைச்சலைத்தான் தரும்.

நூலிழை வித்தியாசம்

உறுதியான நிலைப்பாடுதான் கருத்துப் பரிமாற்றத்துக்கான அடிப்படைத் தேவை. எல்லாவற்றிலும் அவரவருக்கு ஒரு நிலைப்பாடு இருக்கும். ஆனால், அதன் உறுதித் தன்மை நமது தெளிவான புரிதலையும் ஆளுமையையும் சார்ந்திருக்கும். இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கும் திமிருக்கும் மெல்லிய நூலிழை அளவுதான் வித்தியாசம்.

நமது நிலைப்பாட்டில் உள்ள தவறைத் தெளிவாகச் சுட்டிக்காட்டிய பின்னும் திமிரானது அதனை ஏற்றுக்கொள்ள அனுமதிக்காது. ஆனால், உறுதியான நிலைப்பாடு தன்னைத் தெளிவாக முன்னெடுத்து வைத்துப் பிறருக்கு அதைப் புரியவைக்க முயலும். பிறரின் கருத்துகளையும் நேர்மையுடன் பரிசீலித்துத் தேவைப்பட்டால் தன்னை மாற்றிக்கொள்ள அது உதவும். சிலருக்கு இயல்பாகவே தனித்துவத்தை இழக்காமல் உறுதியாக இருக்கும் திறன் இருக்கும். மற்றவர்கள் கீழே உள்ள எளிய வழிமுறைகள் மூலம் அதை வளர்த்துக்கொள்ளலாம்.

மனநிலையை மாற்றியமைத்தல்

உறுதியான நிலைப்பாட்டுக்குத் தடையாக இருக்கும் தவறான எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முதலில் அகற்ற வேண்டியது அவசியம். உங்கள் இயல்பை நேர்மையாக வெளிப்படுத்தத் தடையாக இருக்கும் எந்த எண்ணமும் நம்பிக்கையும் உங்களுக்குத் தேவையற்ற ஒன்று என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

எல்லைகளை வரையறுத்தல்

எல்லைகளை வரையறுப்பது மிகவும் எளிதானது. உங்களுக்கென்று எப்போதும் ஒரு சுதந்திரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் எல்லைகள் தானாகவே உருவாகிவிடும். பின் அந்த எல்லைகளைத் தெளிவாகப் பிறருக்கு உணர்த்துவது அவசியம். இந்த எல்லைகள் கண்களுக்குப் புலப்படாத ஒரு பாதுகாப்புக் கவசம். இது அளிக்கும் தைரியம் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு உதவும். எல்லைகள் வரையறுக்கப்படவில்லை என்றால் உங்களது வாழ்க்கை பிறரால் தீர்மானிக்கப்படும்.

விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல்

உங்கள் நிலைப்பாடு மற்றவர்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால், அவர்கள் மறுதலிப்பதற்கான காரணம் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். பெற்றோர்களோ ஆசிரியர்களோ நண்பர்களோ யாராக இருந்தாலும் காரணங்களைத் தெளிவாகக் கேளுங்கள். அவற்றில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் தைரியமாக உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள். ஒருவேளை அது உங்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தினால் நேர்மையுடன் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். நம் தவறுகளைவிடச் சிறந்த ஆசான் கிடையாது. எனவே, அந்த விளைவுகளைப் படிப்பினையாக எடுத்துக்கொண்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

சுருக்கிக்கொள்ளாதீர்கள்

மனதை ஊடுருவி அதனுள் இருப்பதை அறியும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை. எனவே, உங்கள் தேவைகளும் விருப்பங்களும் பிறருக்குத் தானாகவே புரியும் என்று எதிர்பார்க்காதீர்கள். சரியா தவறா என்ற வட்டத்தில் உங்களைச் சுருக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் நினைப்பதை எந்தத் தயக்கமும் இன்றி, தெளிவாகச் சொல்லுங்கள். தயக்கமற்ற வெளிப்பாடு உங்கள் நிலைப்பாட்டை எளிதாகப் பிறரிடம் எடுத்துச் செல்லும்.

மற்றவர் நடத்தைக்கு நீங்கள் பொறுப்பல்ல

உங்களது உறுதியான நிலைப்பாடு பிறருக்குக் கோபத்தையோ வருத்தத்தையோ ஏற்படுத்தலாம். ஆனால், அது அவர்களின் பிரச்சினை. நீங்கள் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பல்ல. பிறரிடம் இனிமையாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் உங்கள் நேர்மையான நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். நிலைப்பாட்டை மாற்றுவதால் உங்களுக்கும் அவர்களுக்கும் எத்தகைய நன்மையும் விளையாது. எனவே, உங்கள் நிலைப்பாட்டில் உண்மை இருந்தால் மற்றவர்களின் தவறான உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புறந்தள்ளி துணிந்து முன்னேறுங்கள்.

விடா முயற்சி

இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் உங்களுக்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் தன்மை வந்துவிடும் என்று எண்ண வேண்டாம். இது விடாமல் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயிற்சி. இது உங்கள் இயல்பாக மாறுவதற்குச் சில காலம் பிடிக்கும். ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லையே!

முதலில் பாதிப்பு குறைவாக இருக்கும்விதமாக உங்கள் நண்பர்களிடம் இதைச் செயல்படுத்திப் பழகலாம். அடுத்து, நட்புவட்டத்துக்கு அப்பால் உங்களுடைய விருப்பு வெறுப்புகளை அவர்களிடம் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லி உங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்த முயலுங்கள். பின் இதனால் பெற்ற ஊக்கத்தைக் கொண்டு படிப்படியாக மற்றவர்களிடமும் இதைச் செயல்படுத்துங்கள்.

பரஸ்பர மரியாதை

உறுதியான நிலைப்பாடு எப்போதும் பரஸ்பர மரியாதையை அளிக்கும். மனதில் எதையும் புதைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசுவதால் தேவையற்ற மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படாது. தனித்துவத்தை இழக்காமல் விரும்பியதைச் செய்வதால் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பேற்பதால் ஆதங்கமும் ஏற்படாது. மொத்தத்தில் இந்தப் பண்பு நல்ல உறவுகளையும் மகிழ்வையும் திருப்திகரமான வாழ்க்கையையும் அளிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x