Last Updated : 28 Jul, 2014 09:10 AM

 

Published : 28 Jul 2014 09:10 AM
Last Updated : 28 Jul 2014 09:10 AM

பார்வதி ஆடியது லாஸ்யா நடனம்

பரத முனிவர் கண்டு உணர்ந்து போதித்ததால், அவரது பெயரை நினைவுகூரும் வண்ணம் இப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது எனக் கூறுவர். என்றாலும், பரதத்திற்கு வேறு ஒரு சுவையான விளக்கமும் அளிக்கப்படுகிறது. பரதத்தில் உள்ள ‘ப’, ‘ர’, ‘த’ ஆகியவற்றை நெடிலாக்கினால் பா- பாவம், ரா – ராகம், த- தாளம் என்றாகிறது.

இதில் பாவம் என்பது தகுந்த உணர்வுகளை முகம், உடல் மொழி ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்துவது. இப்பாவங்களை வெளிப்படுத்தப் பக்க பலமாக ராகமும், தாளமும் இருக்கின்றன. பரத நாட்டியம் பெரும்பாலும் பெண்களே ஆடினாலும், ஆடல் அரசராக நடராஜர் பெருமானே வணங்கப்படுகிறார்.

சிவ பெருமானான இந்நடராஜர் ஆடும் நடனம் தாண்டவம். மகிழ்ச்சியின் உச்சத்தைக் காட்டும்போது ஆடுவது ‘ஆனந்த தாண்டவம்’. இவரே தீமையை அழிப்பதற்காக ஆடியது ‘ருத்ர தாண்டவம்’. இந்த இரண்டு உச்சங்களும் இன்றி, மென்மையாக பார்வதி ஆடும் நடனத்திற்கு ‘லாஸ்யா’ என்று பெயர். நளினமான உடல் அசைவுகளுக்கு அடவு என்று பெயர். இவை மொத்தம்120 வகைகள். பல அடவுகளைக் கொண்டது ‘ஜதி’.

பரத நாட்டியத்தைத் தனியாகவும், குழுவாகவும் ஆடுவார்கள். தனியாக ஆடினாலும் பரதநாட்டியத்துக்குப் பாடல், நட்டுவாங்கம், வயலினிசை, மிருதங்கம் ஆகியவை மிக அத்தியாவசியமானவை. இவற்றை இசைப்பவர்கள் பெரும்பாலும் மேடையின் வலப்புற ஓரத்தில் அமர்ந்து இசைப்பார்கள்.

நடனமாடுபவர் மேடையின் மையப் பகுதியில் சுற்றிச் சுழன்று ஆடுவார். சலங்கை அணியும் நடனமணிகள் பிரத்யேக ஆடை, அலங்காரத்துடன் நடனமிடுவர். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் நாட்டிய மங்கை மாதவி ஒரே நிகழ்ச்சியில் பதினொரு வகை ஆடல்களைப் புகுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் இந்தக் கலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்ன மேளம், சதிர் எனப் பல பெயர்களில் இது அழைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x