Published : 07 Jul 2014 04:15 PM
Last Updated : 07 Jul 2014 04:15 PM
நீரில், கடலில் மீன் இனம் மட்டுமே வசிப்பதாக நினைக்கிறோம். ஆனால், கடலிலும் பாலூட்டிகள் வாழ்கின்றன. ராமேஸ்வரம் அருகே, மன்னார் வளைகுடாவில் இரண்டு முக்கியமான, சுவாரசியமான கடல் பாலூட்டிகள் வாழ்கின்றன.
ஓங்கில், ஓங்கி (Dolphin)
டால்ஃபின் என்ற ஆங்கிலப் பெயரால் அறியப்பட்டாலும் மீனவர்கள் இதை ஓங்கில் என்றே அழைக்கிறார்கள். பளபளப்பான தோற்றமுடைய இந்தக் கடல் பாலூட்டி, நீருக்கு மேலே கரணமடித்துப் பார்ப்பவர்களை வியக்கச் செய்யும். நன்கு நீந்தும்.
பறவைகளின் அலகைப் போன்ற மூக்கும், கூம்பு வடிவப் பற்களும் இதற்கு உண்டு. ஊனுண்ணிகளான இவை பெரும்பாலும் கூட்டமாக இரைதேடும். சிறு மீன்கள், கண வாய்கள் (Squid), இழுதுமீன் (ஜெல்லி ஃபிஷ்), ஆக்டோபஸ் என்ற எண்காலிகளை உண்ணும்.
உலகிலுள்ள அனைத்துப் பெருங்கடல்களிலும் வசிக்கிறது. தமிழகக் கடற்கரை, குறிப்பாக மன்னார் வளைகுடாவிலும் இதைப் பார்க்கலாம்.
கடலின் ஆழமான பகுதி வரை மூழ்கும் திறன் கொண்ட இது, வளிமண்டல காற்றைச் சுவாசிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கடலின் மேற்பரப்புக்கு வந்து காற்றில் தாவி, குட்டிக்கரணம் அடிக்கும்.
ஓங்கில்கள் திமிங்கில இனத்தைச் சேர்ந்தவை. அவற்றைப் போலவே தலையில் உள்ள சுவாசத் துளை வழியாகவே சுவாசிக்கின்றன.
அறிவுக்கூர்மைக்குப் புகழ்பெற்ற இவை, மீயொலி அலைகள் மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன. பொழுது போக்குப் பூங்காக்களில் பயிற்சியளிக்கப்பட்ட ஓங்கில்களின் விளையாட்டுகளையும், குட்டிக்கரணங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். மனிதர்களுடன் மிகவும் நட்புத்தன்மை கொண்ட உயிரினம் அது.
ஆவுளியா, ஆவுளி (Dugong)
மெதுவாக நகரும் தன்மை கொண்ட மிக அமைதியான கடல் உயிரினம், தாவர உண்ணி. இதனால் கடல் பசு என்ற பட்டப் பெயரும் இதற்கு உண்டு. சாம்பல் நிறம், சராசரியாக 2.4 - 3 மீ. நீளம். எடை 230 - 300 கிலோ. திமிங்கிலங்களைப் போல இதன் உடல் கொழுப்பால் போர்த்தப்பட்டிருப்பதால், பார்ப்பதற்கு உருண்டையாகத் தோன்றும்.
கடல் புல், கடல் பாசியே உணவு. இரவில் இரையுண்ணும், பகலில் ஓய்வெடுக்கும். கடல் புற்கள் அதிகமுள்ள வெதுவெதுப்பான ஆழமற்ற கடலில் காணப்படுகிறது. இந்தியா, இலங்கைக்கு இடையே மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, கட்ச் குடா, அந்தமானில் இது அதிகமுள்ளது.
30 விநாடி முதல் 8 நிமிடங் களுக்கு ஒருமுறை கடலின் மேற்புரத்தில் வளி மண்டலக் காற்றைச் சுவாசிக்க வரும். நீரில் நின்றபடியே தலையைச் சற்று மேலுயர்த்தி இது சுவாசிப்பதைப் பார்த்து, கடல்கன்னிகள் என்று பழங்காலத்தில் இவை தவறாகக் கருதப்பட்டன.
இந்தியப் பெருங்கடலில் இவற்றின் வாழிடம் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதாலும், இறைச்சிக்காகக் கொல்லப்பட்டதாலும் அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்த இனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT