Last Updated : 02 Jan, 2018 01:06 PM

 

Published : 02 Jan 2018 01:06 PM
Last Updated : 02 Jan 2018 01:06 PM

சேதி தெரியுமா? - ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வர்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் 14-வது முதல்வராக ஜெய் ராம் தாகுர் டிசம்பர் 27-ல் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் 68 சட்டமன்றத் தொகுதிகளில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்று காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

30CHGOW_VIJAY_RUPANIright

குஜராத்தில் மீண்டும் விஜய் ரூபானி

குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி இரண்டாம் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அம்மாநிலத்தின் 16-வது முதல்வராக விஜய் ரூபானி டிசம்பர் 26-ல் பதவியேற்றார். துணை முதல்வராக நிதின் பட்டேலுடன் 18 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். குஜராத் ஆளுநர் ஒ.பி. கோஹ்லி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். குஜராத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. 2012 சட்டமன்றத் தேர்தலில் 115 இடங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை 16 இடங்களைக் குறைவாகக் கைப்பற்றியிருக்கிறது.

ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு

பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார, தொழில் ஆராய்ச்சி மையம் 2018 உலகப் பொருளாதார லீக் அட்டவணை’ (World Economic League Table) அறிக்கையை டிசம்பர் 26-ல் வெளியிட்டது. இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, 2018-ம் ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது ஏழாவது இடத்தில் இருக்கும் இந்தியா, அமெரிக்க டாலர் மதிப்பில் விரைவில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேற இருக்கிறது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அத்துடன், 2032-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்கிறது இவ்வறிக்கை.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

குஜராத் தலைநகர் காந்திநகரில், 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC) டிசம்பர் 27 முதல் 31வரை நடைபெற்றது. முதல்வர் விஜய் ரூபானி இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்தார். ஐந்து நாள் மாநாட்டின் கருப்பொருளாக ‘அறிவியல், நிலையான வளர்ச்சிக்கான புதுமை’ இருந்தது. மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தது. நாட்டின் 30 மாநிலங்களிலிருந்தும் ஆறு ஆசிய நாடுகளிலிருந்தும் இளம் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.

அதிவேக இணைய சேவை

ஆந்திரப் பிரதேசத்தில் அதிவேக இணைய சேவையை அனைத்து வீடுகளுக்கும் வழங்கக்கூடிய ‘ஃபைபர் கிரிட்’ (Fibre Grid) திட்டத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 27-ம் தேதி அமராவதியில் தொடங்கிவைத்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், அதிவேக இணைய சேவையை அம்மாநிலம் முழுவதும் வழங்க இருக்கிறது. இந்தத் திட்டத்தால் மாநிலத்தின் 1.45 கோடி வீடுகளுக்கும், 12,198 பஞ்சாயத்துகளுக்கும் 60,000 பள்ளிகளுக்கும், 10,000 அரசு அலுவலகங்களுக்கும், 14 மாநகராட்சிகளுக்கும், 6,000 பொதுச் சுகாதார மையங்களுக்கும் அதிவேக இணைய சேவை வசதி கிடைக்கவிருக்கிறது.

ஜி.எஸ்.டி. வசூல் மழை

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த ஐந்து மாதங்களில் வசூலில் முதலிடத்தை மஹாராஷ்டிரா பிடித்திருக்கிறது. மத்திய நிதி இணை அமைச்சரான ஷிவ் பிரதாப் ஷுக்லா இந்தத் தகவல்களை மக்களவையில் தெரிவித்தார். மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வசூலில் ரூ 18,701 கோடியுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், ரூ. 8, 739 கோடியுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இதில் கர்நாடகா (ரூ 7,736 கோடி) மூன்றாவது இடத்திலும், குஜராத் (ரூ 7, 375 கோடி) நான்காவது இடத்திலும் இருக்கின்றன. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை, ஒட்டுமொத்தமாக ரூ 1.91 லட்சம் கோடி வரிவசூல் ஈட்டப்பட்டுள்ளது.

புதிய விவசாய ஒப்பந்தம்

தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துக்கு உலக வங்கி 31.8 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் டிசம்பர் 26-ம் தேதி மத்திய அரசும் தமிழக அரசும் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஐந்து லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 4,800 நீர்ப்பாசனக் குளங்களும் 477 அணைகளும் 66 துணைப் படுகைகளும் நவீனப்படுத்தப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டின் விவசாயத்துக்கான நீர்த் தட்டுப்பாடு பிரச்சினை இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாசுபாடு களையத் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் நிருப்பேந்திர மிஷ்ரா தலைமையில் டெல்லியின் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கு உயர்மட்டச் செயற்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு, காற்று மாசைக் குறைப்பதற்குப் 12 அம்ச வரைவுத் திட்டத்தை டிசம்பர் 28-ம் தேதி அறிமுகப்படுத்தியது. ‘காற்று செயல் திட்டம்: டெல்லி என்சிஆரின் காற்று மாசுபாட்டைக் குறைத்தல்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தைப் பற்றிய ஆலோசனைகளைப் 15 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுகொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x