Published : 02 Jan 2018 01:03 PM
Last Updated : 02 Jan 2018 01:03 PM

தொழில் தொடங்கலாம் வாங்க 46: புதிதாக ஆரம்பிக்கலாம்!

தொழில் தொடங்குவது பற்றி எளிமையான புத்தகம் தமிழில் இருக்கிறதா என்று கேட்ட வாசகர் ஒருவர்தான் இந்தத் தொடருக்கு வித்திட்டவர். புதிதாகத் தொழில் தொடங்க மட்டுமல்ல, தொழில் நடத்திவரும் அனைவருக்கும் பயன்படட்டும் என்று முடிவுசெய்தேன். கூடியவரை போதனைகளாக இல்லாமல் நிர்வாகப் பாடங்களையும் அனுபவப் பாடங்களையும் கலந்து பெரிய படிப்பறிவு இல்லாத சிறு வியாபாரிகளுக்கும் புரியும் விதத்தில் எழுத ஆரம்பித்தவுடன் பெரும் வரவேற்பு கிடைத்தது.

நிர்வாகவியல் படிக்காத குறை நீங்கியது

பணம் இல்லாததால்தான் பிசினஸில் வளர முடியவில்லை என்ற பரவலான எண்ணத்தை இந்தத் தொடர் மாற்றிவிட்டது என்றார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர். ஸ்கேலிங் எனப்படும் வியாபார விரிவாக்கம் பற்றி இவ்வளவு விரிவாகத் தமிழில் எழுதப்படவில்லை என்றார் பெங்களூரைச் சேர்ந்த நிர்வாகப் பேராசிரியர் ஒருவர். தன் கல்லூரியில் உள்ள தொழில்முனைவோர் மையத்தில் இந்தக் கட்டுரைகளை அறிவிப்புப் பலகையில் வைத்த பின் மாணவர்களைக் கலந்துரையாட வைக்கிறார் ஒரு பொறியியல் பேராசிரியர். கடன் தொல்லையில் இருந்த தன் கணவர் இந்தத் தொடர் படித்தபின், தெளிவு பெற்றுத் தொழிலைச் சீரமைத்து வீட்டுச் செலவையும் தொழில் செலவையும் தனித்துக் கையாள ஆரம்பித்ததாகப் பெருமையுடன் கடிதமெழுதியுள்ளார் ஓசூரைச் சேர்ந்த பெண்.

பொருளின் தரம் மட்டும் போதாது; விற்பனை வியூகம் வேண்டும் என்று ஆலோசனை கேட்டு வந்து உதவி பெற்றார் ஒரு சிற்றுண்டி நிலையச் சிறு முதலாளி. சேவைத்தரம் உயர்ந்ததன் மூலம் அதிக வருமானம் பெறுவதாக நன்றி தெரிவித்தார் ஒரு சூப்பர் மார்க்கெட்காரர். என் பயிலரங்குகளில் தற்போது சிறு வியாபாரிகளின் வெற்றிக் கதைகளையும் தவறாது சொல்லிவருகிறேன்.

இவை அனைத்தும் இந்தத் தொடர் மூலம் நிகழ்ந்தவை. இவை அனைவருக்கும் நான் கடமைப் பட்டுள்ளேன். ஒரு ஐ.சி.எல். கிரிக்கெட் கோச் நம் தெருவின் கிரிக்கெட் குழுவுக்கு கோச்சாக வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனக்கு. “நாங்கள் நிர்வாகவியல் படிக்கவில்லை. ஆனால் அந்தக் குறையைப் உங்கள் எழுத்துப் போக்கிவிட்டது” என்று கூறியவரை மறக்கவே முடியாது.

புதிய வடிவத்தை நோக்கி...

ஆனால், ஏற்கெனவே எழுதியதுபோல, “எனக்குத் தொழில் செய்ய ஆசை. என்ன செய்யலாம் சார். ஒரு நல்ல பிசினஸாகச் சொல்லுங்கள்!” என்றால் என்னால் பதில் சொல்ல முடியாது. உங்கள் திட்டத்தை எழுதினால் ஆராய்ந்து கருத்து சொல்லலாம். நடந்துவரும் தொழில் என்றால், முழு தகவல்கள் அளித்துக் கேள்விகள் அனுப்பினால் சுருக்கமாகப் பதில் அனுப்புவேன். பலருக்கு எதைக் கேட்கலாம், எதைக் கேட்கக் கூடாது என்பதிலும் தயக்கம் உள்ளது. பல தொழில் பிரச்சினைகளில் குடும்பத்தின் பங்கும் உண்டு. அதேபோல பல குடும்பச் சிக்கல்களிலும் தொழிலின் பங்கும் உண்டு. இதைத் தனித்துப் பார்ப்பது கடினம். சிலர் தங்கள் பெயர், அடையாளத்தை மறைத்துக் கேள்வி கேட்பார்கள். சிலர் தாங்கள் தவறான ஆலோசனையில் பாதிக்கப்பட்டதைச் சொல்லியே அறிவுரை கேட்பார்கள். மொத்தத்தில் ஒன்று புரிந்தது. எல்லோரிடமும் பல கேள்விகள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை கேட்கப்படுவதில்லை. கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை.

அதனால், இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறப்போவதில்லை. மாறாக, அடுத்த வாரம் முதல் இது தொழில்புரியும் வாசகர்களின் “கேள்வி –பதில்” பகுதியாக மாற இருக்கிறது.

இது வரை நான் பேசினேன். நீங்கள் பதில் போட்டீர்கள். இனி நீங்கள் கேள்வி கேளுங்கள். நான் பதில் கூறுகிறேன்.

நம் குறிக்கோள் ஒன்றுதான்: உங்கள் தொழில் செழிக்க வேண்டும். அது தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கலாம்.

உங்கள் தொழில் தொடர்பான கேள்விகளைத் தெளிவாக, சுருக்கமாக எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில்களால் படிக்கும் அனைவரும் பயன்பெறுவர்.

இந்தத் தொழில் தொடர்புப் பாலம் உறுதி பெறட்டும்.

அடுத்த சில ஆண்டுகளில் நான் எழுதவிருக்கும் வியாபார வெற்றி உண்மைக் கதைகளில் உங்களுடையதும் ஒன்றாக இருக்கட்டும்!

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன் வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பானசந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x