Last Updated : 16 Jan, 2018 11:44 AM

 

Published : 16 Jan 2018 11:44 AM
Last Updated : 16 Jan 2018 11:44 AM

சேதி தெரியுமா? - இஸ்ரோவின் புதிய தலைவர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கே. சிவன், இஸ்ரோவின் புதிய தலைவராக ஜனவரி 10 அன்று நியமிக்கப்பட்டார். இவருக்கு முன் இஸ்ரோ தலைவராக இருந்த ஏ.எஸ். கிரண் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 14 அன்று முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கும் கே. சிவனை இஸ்ரோ தலைவராக நியமித்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, இவர் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகிப்பார். கடந்த ஆண்டு, பிப்ரவரி 15 அன்று 104 செயற்கைக்கோள்களை ஒரே பி.எஸ்.எல்.வி.-சி37 திட்டத்தில் வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தியதில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம்

மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், 2016-17 கல்வி ஆண்டின் எட்டாவது அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) முடிவுகளை ஜனவரி 5 அன்று வெளியிட்டார். உயர்கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை (GER) விகிதத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் 795 பல்கலைக்கழகங்கள், 34,193 கல்லூரிகள், 7,496 கல்வி நிறுவனங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்படி நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் சதவீதம் 24.5-லிருந்து 25.2 ஆக அதிகரித்திருக்கிறது. உயர் கல்வி பயில்பவர்களில் தமிழ்நாடு 46.9 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. இமாச்சலப் பிரதேசம் (36.7%) இரண்டாவது இடத்திலும், கேரளா (34.2%) மூன்றாவது இடத்திலும், ஆந்திரா நான்காவது இடத்திலும் (32.4%) இருக்கின்றன.

முதல் சிறந்த காவல் நிலையம்

நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனவரி 6 அன்று ட்விட்டரில் வெளியிட்டார். ‘SMART போலீஸ்’ என்று பிரதமர் நரேந்திர மோடி 2014 நவம்பரில் அறிமுகப்படுத்திய கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் காவல் நிலையங்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த ஆர்.எஸ். புரம் காவல் நிலையம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் பஞ்சகுட்டா (ஹைதராபாத்), குடாம்பா (லக்னோ), துப்குரி (ஜல்பாய்குரி), கே 4 அண்ணா நகர் (சென்னை), பன்பூல்பரா (நைனிதால்), கிரோர் (மைன்புரி), ரிஷிகேஷ் (தேஹராதூன்), வல்லபட்டணம் (கன்னூர்), கீர்த்தி நகர் (டெல்லி) போன்ற காவல் நிலையங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 8 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தற்காலிகமாக வாபஸ் பெற்று ஜனவரி 12 அன்று ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து ஊழியர்களின் ஊதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்யஸ்தராக நியமித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகார்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஷ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு பேர் ஜனவரி 12 அன்று செய்தியாளர்களைச் சந்தித்துத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்துப் புகார் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியில்லை என்றும், நியாயமான காரணங்கள் இல்லாமல் வழக்குகளைக் குறிப்பிட்ட அமர்வுகளுக்குத் தலைமை நீதிபதி ஒதுக்குவது தொடர்பாக நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் புகார் தெரிவித்திருந்தனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் வெளியிட்டனர்.

 

டெல்லியில் உலகப் புத்தகக் காட்சி

26-வது உலகப் புத்தகக் காட்சி டெல்லியின் பிரகதி மைதானத்தில் ஜனவரி 6 முதல் 14 வரை நடைபெற்றது. ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ அமைப்பு மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தப் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்தது. இந்த ஆண்டு ‘சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும்’ என்ற தலைப்பு புத்தகக் காட்சியின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கவுரவ நாடு அந்தஸ்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுடன் உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 800 பதிப்பாளர்கள் இந்தப் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டனர்.

வளர்ச்சி விகிதம் கணிப்பு

2018-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கியின் ‘உலகப் பொருளாதார எதிர்பார்ப்பு’ (Global Economics Prospect) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 அன்று வெளியான இந்த அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தச் சதவீதம் 7.5 ஆக அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறது உலக வங்கி. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பின்னடைவுகளைத் தாண்டி 2017-ம் ஆண்டில் இந்தியா 6.7 சதவீத வளர்ச்சியை எட்டியது. சீனாவின் வளர்ச்சி விகிதம் சென்ற ஆண்டில் 6.8 சதவீதமாக இருந்தது. 2018-ல் சீனாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாகக் குறையும் என்றும் உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி 6.3, 6.2 சதவீதமாகச் சரியும் என்றும் உலக வங்கி தெரிவித்திருக்கிறது.

பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஜனவரி 11 அன்று தெரிவித்திருக்கிறார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்குப் பாதகமாக இருப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு ஜூன் 1 அன்று அதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் டிரம்ப். இந்நிலையில், அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குடன் இணைந்து செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய டிரம்ப், பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x