Published : 02 Jan 2018 12:25 PM
Last Updated : 02 Jan 2018 12:25 PM

கேள்வி நேரம் 16: எப்போது பிறந்தது புத்தாண்டு?

1. வரலாற்றில் முதன்முறையாக ஜனவரி 1 புத்தாண்டு நாளாக, கி.மு. 153-ல் கொண்டாடப்பட்டது. ஏனென்றால், அப்போதுதான் ரோமானியர்கள் தங்கள் நாட்காட்டியில் ஜனவரி மாதத்தை முதல் மாதமாக்கினார்கள். அதற்கு முன் ஜனவரி 11-வது மாதமாகவே இருந்தது. ஜனவரி முதல் மாதமாக ஆக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

2. இடையில், ஜனவரி மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படாமல் நீண்ட காலத்துக்கு இருந்துவந்தது. அதே நேரம் 1583-ம் ஆண்டில் மீண்டும் ஜனவரி 1 புத்தாண்டு நாளாக ஐரோப்பாவில் கொண்டாடப்பட ஆரம்பித்தது. இதற்கான காரணம் என்ன?

3. இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி வந்தன. அப்போது புத்தாண்டு என்றைக்குக் கொண்டாடப்பட்டது?

4. ஜனவரி முதல் நாள்தான் புத்தாண்டு என்பது நமக்குத் தெரியும். ஜனவரி என்ற பெயர் ரோமானியக் கடவுள் ஜானஸின் பெயரிலிருந்து பெறப்பட்டது. அவர் எதற்கான கடவுள்?

5. ரோமானியர்கள் மாதத் தொடக்கத்தின் ஒவ்வொரு நாளையும் காலெண்ட்ஸ் (Calends) என்ற பெயரில் கொண்டாடினர். காலெண்ட்ஸைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள உதவ உருவாக்கப்பட்டது எது?

6. புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் வெளிநாடுகளில் அதிகம் பாடப்படும் மரபார்ந்த பாடலாக ‘Auld Lang Syne’ அமைந்திருக்கிறது. இந்தப் பாடலுக்கான மெட்டு ஸ்காட்லாந்தின் நாட்டுப்புறப் பாடலை அடிப்படையாகக்கொண்டது. இந்தப் பாடலை எழுதியவர் யார்?

7. முந்தைய காலத்தில் நைல் நதிச் சமவெளி பெரும்பாலும் வறண்டிருந்ததால், ஆற்றில் நீர் பாய்வதே வேளாண்மைக்கு அடிப்படையாக இருந்தது. பண்டைய எகிப்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நைல் நதியில் வெள்ளம் வந்த பிறகே தொடங்கின. நம் ஊரில் உற்சவர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதுபோல, புத்தாண்டின்போது அமோன் கடவுள், அவருடைய மனைவி, மகன் சிலைகளை நைல் நதியின் மீது படகில் எடுத்துச் செல்வது எகிப்தியர்களின் வழக்கமாக இருந்தது.பொது வாக அது எந்த மாதத்தில் நடந்தது?

8. புத்தாண்டுக் கொண்டாட்ட நள்ளிரவில் ஸ்பெயின் மக்கள் இரவில் ஒவ்வொரு முறை மணி அடிக்கும்போதும் கடைப்பிடித்த மரபார்ந்த பழக்கம் என்ன?

9. அமெரிக்காவில் 30 லட்சம் கறுப்பின மக்கள் 19-ம் நூற்றாண்டின் முதல் பாதிவரை அடிமைகளாக நடத்தப்பட்டு வந்தனர். இவர்களை விடுவிப்பது தொடர்பான பிரச்சினையில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அதன் முடிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அடிமைத்தன விடுதலை பிரகடனம்’ (Emancipation Proclamation) எனப்படும் அரசுப் பொது அறிவிப்பை 1863 ஜனவரி 1 அன்று அமெரிக்க அதிபராக இருந்து வெளியிட்டவர் யார்?

10. 1946 ஜனவரி 1 அன்று ஜப்பானின் அப்போதைய பேரரசராக இருந்த ஹிரோஹிட்டோ ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x